01 மே, 2009

அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

சித்தாந்தன்
..........................................................................
மேசையின் கால்களுக்கிடையால்
கைகளைக்கோர்த்தபடி
வார்த்தைகளில் குரூரம் தெறிக்க
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நாங்கள் பார்த்தபடியே நின்றோம்


கிண்ணம் நிறைந்திருந்தது இரத்தம்
நீ சொன்னாய்
சூரியன் திசையற்று அலையும் நாள் இது என்று
நான் சொன்னேன்
உதடுகளை எரிக்கும் சிகரட்டின்
புகை நாறும்நாள் இது என்று


விடுதியின் முகடெங்கும் ஒட்டடைகள் தொங்கின
இரவு மதிலேறிக் குதித்து மதுக்கடையை அடைந்தோம்
அங்கும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நீயும் நானும்
மதுவை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தோம்
எங்களிடமிருந்து வார்த்தைகள் விடைபெறத்தொடங்கின
போதை விட்டத்தில் சூழலும் மின்விசிறியாய்
எம்மைச் சுழற்றியடித்தது


சிவப்புநிறமான மது
அவர்களின் இரத்தம் நிரம்பிய கிண்ணங்களை
ஞாபகமூட்டியது
நான் பிதற்றினேன்
இரத்தம் இரத்தம்
நீ மதுவை ஊற்றிக் கைகளைக் கழுவினாய்
தெருவில் தள்ளாடித்தள்ளாடி விடுதி திரும்பினோம்

ஏதும் பேசவில்லை
விடுதியின் நடுக்கூடத்திலிருந்து
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நிழல்கள் ஒருவரையொருவர் தழுவிக்கிடக்க
வார்த்தைகளில் நிணமுருகி வழிந்தது

போதையின் உச்சத்தில் சூழன்ற நீ
வாந்தியெடுக்கத் தொடங்கினாய்
போதையின் நெடி மிக்க சொற்களை
உன் வாந்திச்சேற்றிலிருந்து நான் பொறுக்கினேன்
இப்போதும் நீ சொன்னாய
சூரியன் திசையற்று அலையும் நாள் இது என்று
என் உதடுகளில்புகைந்து
கொண்டிருந்தது சிகரெட்