09 ஆகஸ்ட், 2024

வாசிப்பின் பல தளங்களைக் கோரும் 'அம்ருதாவின் புதிர் வட்டங்கள்'

  - தாட்சாயணி

 

வீன இலக்கியத்தின் கதைகூறல் முறை அதிகளவான எல்லை மீறல்களோடு, மையம் சிதைந்த யதார்த்த முறையிலிருந்து விலகிய தன்மையில் பல்வேறு கதை சொல்லல் முறைகளுக்குத் தாவியுள்ளது.கதை என்பது, மொழி உருவான காலத்திலிருந்து ஆதி மனிதனின் உணர்வுகளை சுவாரசியமாக இன்னொருவனை உணர வைத்ததில் ஆரம்பித்தது எனக் கொள்ளின் அந்தச் சுவாரசியமான எடுத்துரைப்பு முறை கதையை ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த சுவாரசியக் கூறுகளின் சிறிய, சிறிய மாற்றங்களோடு நகர்த்தியது எனக் கொள்ளலாம்.அவ்வாறாகவே காலத்திற்குக் காலம் சிறுகதை சிறிய தாவல்களையும், எல்லை கடத்தல்களையும் மேற்கொண்டு இன்றைய நவீன கதை கூறல் முறைக்கு வந்துள்ளது. எனினும் கதையின் சுவாரசியம் அதிலுள்ள மொழிவளம், புதிய சொல்லாடல்கள், குறியீடுகள் என்பவற்றின் மூலம் வாசகனின் மனத்தின் பல்வேறு கதவுகளைத் திறந்து விடுவதன் மூலமே எழுத்தாளனின் படைப்பின் நீடித்த தன்மையைப் பேச முடியும். 

சித்தாந்தன் வழமையான போக்குகளினின்று விலகி இலக்கியத்தில் புதிய வாசல்களைத் தேடி நகர்பவர். நவீன கவிதைகள் மூலம் வாசகனிடம் ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியவர். அத்தகையவரிடம் வாசகரிடம் கூறுவதற்கு எண்ணற்ற கதைகள் இருக்கின்றன. அவற்றின் கூறுமுறைகள் எல்லாவற்றிலும் நேரடியாக இருப்பதில்லை. நேரடியான கதைகள் திரும்பத் திரும்ப ஒரே விதத்தில் சொல்லப்பட்டு வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன. புதிதாக எதையும் வாசகனுக்குத் தருவதில்லை என்பதோடு, சில விடயங்களை அவை உண்மை தானென்றாலும் நேரடியாகக் கூற முடியாது. அரசியல் சூழல் அக்கதை வாசகனுக்கு எத்தகைய தாக்கத்தை  வழங்குகிறதோ அதை விட அதிக தாக்கத்தை  எழுத்தாளனிடம் பிரயோகித்து விடும். அவ்வாறான வேளைகளில், மையம் சிதைந்த குறியீட்டுப்பாணி கதைகளின் தேவை மிக முக்கியமானது. அத்தகைய காலத்தின் தேவையை இத்தொகுப்பிலுள்ள கதைகள் மூலம் ஈடு செய்கிறார் சித்தாந்தன்.   

‘நூறாயிரம் நுண்துளைகள் பொறிக்கப்பட்ட பெயர் - ஓர் அஞ்சலியுரை’ எனும் கதை யுகத்தாண்டவன் எனும் எழுத்தாளனின் மரணத்தோடு ஆரம்பிக்கிறது. யுகத்தாண்டவன் பற்றிய பிம்பம் கதை சொல்லியால் துண்டு துண்டாக ஓட்ட வைக்கப்படுகிறது. அத்தனைக்கும் கதைசொல்லி யுகத்தாண்டவனோடு அதிகம் கதைத்ததில்லை. இறுதியாக ஒரு தேநீர்க்கடையில் சந்தித்த போது அவனோடு ஐம்பது சொற்களுக்கு மேல் பேசியிருக்கவுமில்லை. கதைசொல்லி ஏனையவர்களிடமிருந்து அறிந்து கொண்ட தகவல்களாலும், நேரடிச் சாட்சியமான அந்த இறுதிச் சந்திப்பின் உரையாடலிலிருந்தும், யுகத்தாண்டவனின் படைப்புகளிலிருந்தும் கதைசொல்லி பிழிந்து எடுத்த சார நினைவுகளைக் கதை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.போலி இலக்கியவாதிகளிடம் காணப்படுகின்ற அதி மேதாவித்தன உணர்வு, நேர்மையற்ற பாங்கு, தற்பெருமை, மனச்சாட்சியற்ற விமர்சனம், போலி முகத்திரை என்பவற்றை வாசகனிடம் திறந்த மனநிலையில் முன் வைக்கிறது இப்பிரதி. எழுத்தாளனின் புகழ் நோக்கிய கோமாளித்தனமான செயற்பாடுகள், அவனது இயல்பறிந்து அவன் மரணத்திலும் அவனது கதையின் வரிகளை நாடகத்தனமாக ஒப்புவிக்கிற மனைவி பாத்திரம் என்பன கதையினூடு வாசகன் மனதில் சிறு புன்னகையை ஏற்படுத்திச் செல்கின்றன. ஒரு மரண நிகழ்வில் மரணித்தவனது பெருமைகளையே பேச வேண்டும் என்கின்ற எழுதாத விதி இருக்கின்ற போது கதைசொல்லியால் தான் என்ன செய்ய முடியும்? யுகத்தாண்டவனின் கவிதைகள், அவனது பிரதிகளில் வருகின்ற கனவுகள், அவை பற்றிய விமர்சகர் அந்துவனின் கருத்து இவற்றையெல்லாம் கூறுகிற போது,கதைசொல்லியின் கண்களில் நீர் திரளாமல் விட்டால் தான் ஆச்சரியம். தேநீர்க்கடையில் யுகத்தாண்டவனிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைக் கூறாமல் கதைசொல்லியின் மனம் ஆறப்போவதில்லை. ஆனால், என்ன செய்வது? இறப்பு நிகழ்வில் தான் ஒருவரைப்பற்றி மோசமாகப் பேசக் கூடாதே. யுகத்தாண்டவன் தன்னைப்பற்றிய, பிறர் அறியக்கூடாது எனவும், தரமற்ற வெறும் குப்பை எனவும் நினைத்த அவனது முதல் நூல் பற்றிய ரகசியத்தைப் பார்வையாளர் மத்தியில் போட்டுடைத்துத் தன் மனஅவசத்தைத் தீர்த்துக் கொள்கிறான் கதைசொல்லி. நூறாயிரம் துளைகளால் பொறிக்கப்பட்ட தன் பெயர் பற்றிப் பெருமிதம்பூண்ட யுகத்தாண்டவனுடைய முதல் படைப்பு  வாசகர் பார்வைக்குத் தப்பி விடக் கூடாதென்று கதைசொல்லி நினைப்பதைத் தவறென்று யார் கூறி விட முடியும்?

'நட்சத்திரங்களை மோகிப்பவன்' எனும் இத்தொகுதியின் இன்னொரு கதையும் இக்கதையின் இயல்புடன் பொருந்தி வரும் கதையே. நவீன எழுத்து எனும் போர்வையில் வெளியாகின்ற போலிகளைத்  தோலுரிக்கும் விதத்தில் இப்பிரதி அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் தாக்கம் இலக்கியத்தில் செலுத்தி வரும் செல்வாக்கும், குறுகிய காலத்தில் முகநூல் மூலம் பெற்றுக் கொள்ளும் விருப்புக் குறிகளின் அடிப்படையில் மொக்கையான, கவித்துவமற்ற வரிகளுக்குச் சொந்தமானவர்கள் கூட,கவிஞர்களெனும் ஒளி வட்டத்தில் பிரகாசிப்பதையும், அர்த்தமற்ற விவாதங்களைத் தவிர்த்து தத்தம் குரலுக்கான ஆலவட்டங்களை மட்டுமே எதிர்பார்க்கும் அரைவேக்காடுகளையும் விமர்சகர் அந்துவனூடாக சிக்கனமாக, மனதைத் தைக்கக் கூடிய உரையாடல்களினூடாக யதார்த்தபூர்வமான சிறு எள்ளல் தொனிக்க வாசகரிடம் கடத்துகிறார் சித்தாந்தன். முகநூல் உலகில் குழுமிக் கிடைக்கும் பல்வேறு வகையான குழுமங்களது அலட்டல்களுக்கும் இப்பிரதி அங்கதமான ஒரு பதிலை அளிக்கின்றதெனலாம். 

நிர்வாக ரீதியிலோ, அரசியலிலோ தலைமைப் பீடங்களில் மாற்றம் ஏற்படும் போது, அத்தலைமையை அண்மித்து இருப்பவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதும், புதிய தலைமைக்கு நெருக்கமானவர்கள் பழையவர்களை ஒதுக்குவதையும் இரு தரப்பையும் சுமுக உறவில் வைத்திருப்பவர்கள் தப்பித் பிழைப்பதையும் காணலாம். அனுபவமிக்க காத்திரமான தலைமை இவற்றை அடையாளம் கண்டு கொள்ளும். இவ்வாறான நிலையில் புதிய தலைமையை வரவேற்க அத்தலைமையைத் தாம் தாம் கொண்டு வந்தோம் என்று சொல்பவர்களால் நடத்தப்படும் அருவருக்கத்தக்க வரவேற்பு ஏற்பாடுகளை அலுவலகம் சார் சூழலொன்றில் பொருத்திக் கூறப்பட் கதை 'அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு'. தலைமைத்துவ மாற்றங்களின் போது நிகழும் சம்பவங்களைக் கொண்டு மனித மனதின் இருண்ட மூலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார் சித்தாந்தன். இத்தகைய கதைகள் மூலம்  தன் சமூகத்தில் இருக்கின்ற அழுக்குக் கூறுகளை வாசகனுக்கு இனங் காட்டி, சுய எள்ளல் மூலம் அவற்றைக் கடந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

ஆண், பெண் உறவு நிலையில் ஏற்படும் சிக்கல்களைக் குறியீட்டுப் பாணியில் மையம் சிதைந்த நிலையில் கூறிச் செல்லும் கதை 'அம்ருதாவின் புதிர் வட்டங்கள்'. இக்கதைத் தொகுப்பின் தலைப்புக் கதை அது. அத்தலைப்பின் வசீகரம் போலவே பிரதியினுள்ளும் புதிரின் வசீகரம் இருக்கிறது. எனினும் அவ்வசீகரத்தினுள் தான் மனத்தைக் குத்திக் கிளறும் வாலறுந்த பல்லி எழுந்து நாட்டியமாடுகிறது. அம்ருதாவுக்கும், கதைசொல்லிக்குமான மன முரண் எங்கிருந்து ஆரம்பித்து எவ்வாறு வளர்கிறது என்பதுவும் எத்தகைய முரண்கள் இருந்தாலும் இருவரும் கடைசிவரை சேர்ந்தே தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதுவும் அழகாக இப்பிரதி மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இருவரும் சிந்திக்கும் விதம் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் அவர்களுக்கிடையே விரிசல் விழுந்து கொண்டேயிருக்கிறது. வாலறுந்த பல்லி எப்போதும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. சமயங்களில் விலகிப் போனாலும் போய் விட்டது என்று நினைக்கிற தருணங்களில் மீள வந்து விடுகிறது. மனதில் எழும் சிந்தனையிலிருந்து, வீட்டில் போடும் கோலம், இருவரது உறவு நிலை போன்றவற்றினூடாக வட்டங்களின் பரிமாணங்கள் பற்றிய வாக்குவாதத்தோடு கதை நகர்கிறது. வட்டத்தினுள்ளே ஒருவரும், வட்டத்தின் வெளியே ஒருவருமாகத்தான் இருவராலும் எப்போதும் இருக்க முடிகிறது. உள்ளே நிற்பது யார் என்றால் என்ன? வெளியே நிற்பது யார் என்றால் என்ன? அவர்கள் வரையில் எல்லாம்  ஒன்று தானே. இரண்டு பேராலும் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை என்பது தானே உண்மை. வாசகன் மன உணர்வுக்கேற்றபடி அவனது நியாயம் சார்ந்தும், அவளது நியாயம் சார்ந்தும் கதை வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்பின் அலைக்கழிப்பின் அபத்த நாடகம் என இக்கதையை அழைக்கலாம் போலிருக்கிறது.

குறியீட்டுப் பாங்கில் பூடகமாக மட்டுமே சொல்ல வேண்டிய தேவை கருதி அபூர்வமான கலைத்துவத்தோடு கூறப்பட்ட கதை 'வேட்டையன்'. நமது நாட்டுச் சூழலில்,  தலைமைத்துவத்தின் பலவீனத்தைத்  தமக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தி  நிபந்தனையுடனான வழிகாட்டலில் தவறுக்கு இட்டுச் செல்லும் அந்நிய சக்திகள் பற்றிய கோடி காட்டலுடன்  வேட்டையன், நாய்கள், சாமியார் ஊடாகக் கச்சிதமான பிரதி ஆகியுள்ளது இக்கதை. தலைமைத்துவ அதிகாரம், புகழ், இவற்றால் ஒரு கட்டத்தில் ஏற்படும் மமதை, அதிகார எல்லை மீறல், ஆகியவற்றால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி அழிந்து விடுவதையும் தலைமையின் சிதைவையும் இப்பிரதியில் காட்சிப்படுத்துகிறார் சித்தாந்தன்.நாட்டுச்சூழலை நன்கு புரிந்து கொள்ளும் வாசகர்களுக்கு இப்பிரதி தரும் அனுபவம் அலாதியானது.

'அரசனும், குதிரைவீரனும், அழியும் காலத்து சனங்களும்' எனும் பிரதியும் நேரடியான கதை கூறலில் கூற முடியாத விடயங்களைத் துண்டு, துண்டாகப் புதியதொரு பரிசோதனை முயற்சியில் வெளிப்படும் பிரதி தான். கொடிய யுத்தம் உண்டு தீர்த்த மண்ணில் ஆரம்ப எரிநிலைப் பிரச்சினை கிளர்ந்த இடம் நூலகம். அந்த நூலகத்தில் சிதறிப் பரந்திருக்கும் தாள்களில் குழம்பியிருக்கும் வாசிப்பின் கூறுகளினூடு போர் நடத்துகின்ற அரசனின் அட்டூழியங்களும், குதிரை வீரன் காப்பாற்ற நினைக்கின்ற மண்ணினதும்,மக்களதும் அவல நிலையும், இறுதி யுத்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறு துண்டு நிலத்தில் லட்சக்கணக்கான மக்களின் நெருக்குதலும் நூலகத்தின் வரைபடம், கிளைக்குறிப்பு, வாசிப்பு, மீள்வாசிப்பு எனக் குறியீட்டுப்பாணியில் பேசப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட இரு பிரதிகளினதும் பொதுப்பண்பாக அரசியலை நேரடியாக விமர்சிப்பதன் மீதான அச்சம் கதைகளுக்கான புதிய வடிவத்தைக் கலைத்தன்மையோடு கொண்டு வருவதற்கான சாத்தியங்களைப் படர வைக்கிறது.

புத்தரின் பஞ்ச சீலக் கொள்கையைப் பின்பற்றும் சமரசின்ஹ  என்பவனின் குடும்பத்தில் இராணுவத்திலிருக்கின்ற மகனால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்தான வெறுப்பும், புறக்கணிப்பும்  வெளிப்படும் கதையாக 'புத்தரின் கண்ணீர்' அமைகிறது. கடந்து போன யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகள் இரண்டுமாக இருந்தாலும் இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட அறம் சார்ந்த கொந்தளிப்பு இரு தரப்பினருக்கும் இருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இக்கதை. யதார்த்தபாணியில் எழுதப்பட்ட இக்கதையில் யுத்தம் தொடர்பான விபரணப்பகுதி சற்றே கதையின் கலையம்சத்தை விஞ்சித் துருத்தி நின்றாலும்,கதையின் களத்திற்கு அது அவசியமான ஒன்று என்பதையும் மறுக்க முடியாது.

'எழிலரசன் என்கின்ற சகுனி' எனும் கதையும் யதார்த்தபாணியில் சாதாரண வாசகனும் இலகுவில் எட்டக்கூடிய வகையிலான கதையாக அமைகிறது.யுத்தத்தின் ஆரம்ப காலத்திலிருந்து, இறுதிக்காலம் வரை தாய் மண்ணிலிருந்து, யுத்தக்களத்திலிருப்பவர்களை அண்மித்திருந்தவர்களுக்கு இக்கதையில் ஊடாடியிருக்கின்ற உள்ளார்ந்த துயரத்தையும், வலியையும் அணுக்கமாக உணர முடியும். போர் ஒரு இளைஞனை எப்படி வனைந்திருக்கிறது என்பதற்குப் போரிலிருந்து தடுப்பு முகாம் வரை சென்று மீண்ட அத்தனை பேரினதும் ஓட்டு மொத்த சாட்சியாக ஒலிக்கிறது எழிலரசன் என்கின்ற சகுனியின் விரக்தியான குரல். கதையின் முடிவில் மனதில் படரும் வலி ஏற்படுத்தும் தாக்கம் சொற்களில் அடங்காதது.

 'X , Y மற்றும் கறுப்பு வெள்ளைப்பிரதி' இரு இலக்கிய நண்பர்களுக்கிடையிலான உரையாடல் மூலம் ஒருவனின் தொலைந்து போன பிரதிமீட்கப்படும் போது அதன் சுயத்தைத் தொலைத்து விடும் என்பதை மூன்று பிரதிகள் மூலம் கதைசொல்லி விளங்க வைக்க முயல்கிறான். மையம் தகர்தல், உருவப்பகுதி, அருவப்பகுதி என நகரும் இப்பிரதி எனக்கும் முழுமையான புரிதலை ஏற்படுத்தவில்லை. கோட்பாடுகள் தொடர்பான என் அறிவின் போதாமை காரணமாக இருக்கலாம். பிரதியில் சொல்லப்படுவது போல வாசிப்பு இயல்பான தேடலில் மீள, மீள வாசிப்பு செய்யும் போது ஏதாவது புரியலாம் என நினைக்கிறேன்.

மொத்தத்தில் இத் தொகுப்பு மூலம் புதியதொரு கதை சொல்லல் முறையைத் தேர்ந்தெடுத்து நேரடியாகச் சொல்ல முடியாதவற்றையும், சமூகத்தில் தான் கண்ட இருள் செறிந்த பகுதிகளையும் வாசகனுக்கு நல்லதொரு அனுபவமாக்கியுள்ளார் சித்தாந்தன்.

நன்றி- ஜீவநதி