18 ஜூலை, 2024

மு. தளையசிங்கம் கவிதைகள்.

சித்தாந்தன் 

ளையசிங்கம். கட்டற்ற கலை இலக்கியம் குறித்துச் சிந்தித்த தமிழ்ச்சூழலின் முன்னோடி. மையத்தை மட்டுமே படைப்பின் இயங்குநிலைத் தளமாகக் கொள்ளாது படைப்பைத் தளமாற்றத்துக்குள்ளாக்கியவர். வடிவமற்ற பிரதி குறித்து தமிழ் இலக்கியப் பரப்பில் பேசியவரும் அவரே.

தளையசிங்கத்தின் படைப்புக்கள் அவர் உருவாக்கிய கோட்பாட்டுத் தளத்தில் இயங்குபவை. மறுவளமாகக் கூறினால் அவரால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை பிரதியுருச் செய்பவை.

மரபுவழிப்பட்ட சிந்தனை முறைமைகளிலிருந்து மாறுபாடான சிந்தனைத் தளத்தினை அவர் உருவாக்கியிருக்கின்றார். அவரது தத்துவார்த்தப் பார்வை, ஏற்கனவே மையமாக கட்டிறுக்கத் தனத்தோடு அமைந்தவை மீது கேள்விகளை எழுப்பியதன் வழியாக உருவானவை.

தமிழ்ச்சூழலில், கோட்பாடுகளை மனனம் செய்து அவற்றை எந்தவிதமான பகுப்பாய்வுமின்றி விஞ்ஞான வழிமுறைகளின்றியும் ஒப்பிவித்தவர்களிடமிருந்து மாறுபாடாக சுயசிந்தனையுடைய அபூர்வமாக தளையசிங்கம் திகழ்ந்தார்.

இந்த முற்குறிப்போடே நான் தளையசிங்கத்தின் கவிதைகளுக்குள் நுழைகின்றேன். 

தளையசிங்கத்தின் கவிதைகளாக இரவுகள்,போர்ப்பறை,ஒளிபடைத்த கண்ணினாய், ‘நான்’ நாகரிகத்தின் அழிவும் ‘நாம்; நாகரிகத்தின் எழுச்சியும், வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்,விசாரம்,சும்மா இரு போன்ற கவிதைகளும் நான்- அதன் பரிமாணங்கள் என்ற கட்டுரையில் சில கவிதைகளும் கிடைக்கின்றன.

 ‘மெய்யுள்’ என்னும் கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டினை கொண்ட தளையசிங்கம், தன் படைப்புக்களையும் அது சார்ந்த அடிப்படையிலேயே உருவாக்கியிருக்கின்றார். மெய்யுளின் அடிப்படைக் குணாம்சம் சத்தியம்;. சத்தியத்தை உள்ளீடாகக் கொண்ட படைப்பாக்க அல்லது கலையாக்கச் செயன்முறை குறித்தே அவர் சிந்தித்தார். வடிவ நீக்கம் அல்லது வடிவத் தகரப்பு பற்றிப் பேசுகின்ற தளையசிங்கம் படைப்பானது வடிவத்தை மீறிச் செல்வதற்கான வழியாக ‘சத்தியம்’ என்பதையே முன்வைக்கின்றார்.

‘சத்தியத்தை உள்ளீடாகக்  கொண்ட படைப்பு வடிவங்களை மீறிச் செல்லும் எனவும் ஏற்கனவேயுள்ள இலக்கியவடிவங்களை தகர்க்கும் என தளையசிங்கம் கூறுகின்றார். மெய்யுள் பற்றி அவர் குறிப்பிடும் போது

“மெய்யுள், கற்பனை கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவலுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும். அதன் உள்ளளும் புறமும், உருவமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும்” என்கின்றார்.

கற்பனையற்ற நித்திய சத்தியத்தை நோக்கிய கலை இலக்கியம் குறித்தே தளையசிங்கம் சிந்தித்தார். உருவமும் உள்ளடக்கமுமாக மெய்யே இருக்குமென அவர் அழுத்தமாகக் கூறுகின்றார்.

உருவமே உள்ளடக்கத்தை தீர்மானிக்கின்றது. உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற நவீனத்துவ மோதல்களுக்கிடையில் தளையசிங்கம் கூறுவது வித்தியாசமானது. அவர் உருவத்தையோ உள்ளடக்கத்தையோ பிரக்ஞை கொள்ளவில்லை. “கலையை அழிக்கும் கலை” என தனது கலை இலக்கியக் கோட்பாட்டை அடையாளப்படுத்துகின்றார். கலையின், இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாக சத்தியத்தை கொள்வதுதான் எனின் கலையில் இலக்கியத்தில் படைப்பாக்க உத்திகள் என எவற்றைக் கொள்வது? அவர் கூறுவது போல நேரடி அனுபவம் மட்டும் படைப்பாகுமா?

அவரது பிற இலக்கியங்கள் தருகின்ற -சிறுகதைகள். நாவல்கள்- தருகின்ற அனுபவத்தை கவிதைகள் தரவில்லை. அவர் கவிதைகளை தன் கோட்பாடுகளைக் காவிச் செல்லுகின்ற கருவியாகவே கருதினார். உபநிடத மகாவாக்கியங்கள் போல அவை கருத்துக்களைச் சொல்லுகின்ற பணியைத்தான் செய்கின்றன. உரையாடல்களின் வழி தன் கருத்துக்களை, தன் சிந்தனைகளை எடுத்துச் செல்கின்றார். தானே கேள்வி கேட்பவனாகவும் தானே விடை பகர்பவனாகவும் இருந்து தன் கருத்துத்தளம் பற்றி விவாதிக்கின்றார். கலைஞனின் தாகத்தில் சுழல் நான்கு பகுதியில் வரும் உரையாடல் குரு- சீட உரையாடல் போலவே காணப்படுகின்றது. 

தளையசிங்கத்தின் கவிதைகள், கவிதைகள் தரக்கூடிய  கவித்துவ அனுபவத்தை தரவில்லை. அறுபதுகளின் கவிதைப் போக்கிலிருந்து மாறுபட்ட தனியனாக அவர் காணப்படுகின்றார். வலிந்து கருத்தைத் திணிக்கும் ஒருவகை செய் நேர்த்தியை அவரது கவிதைகள் கொண்டிருக்கின்றன.

நவீன இலக்கியம் குறித்து சாத்தர் முன்வைக்கும் கருத்தியலோடு தளையசிங்கத்தின் கருத்தியலையும் இணைத்துப் பார்க்க முடியும்.

“நவீன இலக்கியம் உயிர்த்திருக்க வேண்டுமானால் அது அழகியலையும் மொழிவிளையாட்டையும் புறக்கணித்துவிட்டு சமூக அரசியல் நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்” 

எனக் கூறும் சாத்தர், எழுத்தாளன் பற்றிக் குறிப்பிடும் போது 

“எழுத்தாளன் என்ற முறையில் நமது கடமை உலகை பிரதிநிதித்துவப்படுத்தலும் அதற்கான சாட்சிகளாக இருத்தலுமாகும்’ என்கின்றார்.

தளையசிங்கம், மெய்யுள் இலக்கிய உருவம் பற்றிக் கூறும் போது,

“ மெய்யுள் கற்பனைக் கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவலுக்குரிய கலை இலக்கிய வடிவமாகும்” என்கின்றார்.

பூரண இலக்கியத்தை விரும்புபவன் பற்றி தளையசிங்கம் குறிப்பிடும் போது,

“பூரண இலக்கிய வளர்ச்சி சமூகத்தின் சகல துறைகளின் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும். அதனால் இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புடையவனாக இருக்க வேண்டும்” என்கின்றார்.

சாத்தரிடமிருந்து தளையசிங்கம் விலகுமிடம் “மெய்யுள்” என்னும் கோட்பாட்டுத் தளத்தில்த்தான். சாத்தர்  நவீன இலக்கியத்தில், இலக்கியவாதிகளிடம் காணப்படும் குறைகளைப் பற்றியே முன்வைத்தார். ஆனால் தளையசிங்கம் நவீன இலக்கியத்தைக் கடந்த கோட்பாட்டு உருவாக்கத்தை நிகழ்த்தினார்.

“நவீனத்துவத்திலிருந்து விலகிய தளையசிங்கம் அதற்கு அடுத்தகட்டத்துக்கு தன் சொந்த உள்ளுணர்வையும் தருக்கத்தையும் துணைகொண்டு நகர முயன்றார். அவரது முதன்மையான பங்களிப்புக்கள் இந்தத் தளத்திலேயே அமைந்தன” என ஜெயமோகன் குறிப்பிடுவது தளையசிங்கத்தின் சுயசிந்தனையின் வழிப்பட்ட கோட்பாட்டு உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும்.

தளையசிங்கத்தின் ‘போர்ப்பறை’- ஐந்து பகுதிகளையுடைய நீள் கவிதை. தொன்மங்களின் வழி சத்தியத்தை முன்மொழியும் கவிதை. இதிகாச பாத்திரமான வீபூசனனுடனாக உரையாடல் முறைமையில் அமைந்த கவிதை. தளையசிங்கத்தின் சத்தியத்தை நோக்கிய நகர்வை வெளிப்படுத்தும் கவிதையிது. இராமன், சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையை மீட்க இலங்கை வருகின்றான். விபூசனன் இராமனின் பக்கமே சத்தியம் உள்ளது என அவன் பக்கம் சார்கின்றான். இந்தக் கவிதையில் விபூசனனின் குரல் தளையசிங்கத்தின் ஆன்மாவின் குரலாக ஒலிக்கின்றது. புறவுலக இச்சைகளால் மூடுண்டு கிடக்கும் மனதை பேருண்மை நோக்கி அழைத்துச் செல்லும் குரல் அது.

கவிதையில் அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளதை விபூசனன் கூறுகின்றான். கவிதை சொல்லி சீதையை அசோகவனத்தில் தேடுகின்றான். அவனது கண்ணுக்கு சீதை புலப்படவில்லை.

“அழகு இடைகள், அழைப்பு விடுக்கும் அசைவுகள்

கொங்கை தாங்கிகளுக்குள்

தொங்கிவிழும் கோபுரங்கள்

வெளிறிய தோலை மறைக்க எழும் பூச்சுக்கள்

ஊனில் உயிர் வாழும் ஒட்டுண்ணி ஆசைகள்

மனதை மறைக்கும் மாயப்படைகள்

அத்தனைக்கு அப்பாலும் 

ஊடுருவ முடிந்தும்

அவளை நான் காணவில்லை” என

இச்சைகளால் மனது அலைக்கழிக்கப்படுகிறது. சீதையை பேருண்மை எனக் கொள்வதும் அதை தரிசிப்பதற்கு புறவுலக இச்சைகள் தடையாக அமைவதையும் கவிதை வெளிப்படுத்துகின்றது.

போர்ப்பறை என்பதே சத்தியத்தின் குரலாகவே உருவகம் கொள்ளுகின்றது. இச்சைகளை வென்று சத்தியத்தை அடைவதற்கான பேரொலி அது. பெருங்குரல் அது.

“பூச்சை கழித்து விபூசனன் 

என் போக்கை மாற்றிவிட்டான்

நானும் நகர்ந்தேன்

எனக்குள்ளே இடமாற்றம்”

என தன் சத்தியத்தை நோக்கிய நகர்வை தளையசிங்கம் எழுதுகின்றார். இந்த நகர்வே அவரது எல்லா கவிதைகளினதும் மையமாகத் தொழிற்படுகின்றது.

“கற்பனையில் கனவில் தூக்கத்தில்

எதிலும் உன்னால் அதே சமயம்

விழித்திருக்க முடிகிறதா?

அப்படியென்றால், நீ சத்தியத்தைத் 

தரிசிக்கின்றாய்.

(ஒளிபடைத்த கண்ணினாய்)

கற்பனையில், கனவில் நித்திரையில் - அத்தனையிலும்

நித்திய சத்திய உணர்வு நுழைகிறது

(நான் நாகரிகத்தின் அழிவும் நாம் நாகரிகத்தின் எழுச்சியும்)

சத்திய யுக எழுச்சிக்காய் தயார்ப்படுங்கள்,

பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள்

(வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்)

என எல்லாக் கவிதைகளிலும் சத்தியத்தை மையப்படுத்திய குரலே ஒலிக்கின்றது. விசாரம் கவிதை 

“சவாரி வண்டியின் சதங்கைச் சத்தம்!

பின்னால் ஓடும் சிறுவர் கூத்து!

என்ன நடக்குது வெளியே?

இழவு,

எதற்கு அந்தக் கவலை?

உள்ளத்துப் பறை

ஓசை எழுப்புகுதே, கேட்கிறதா?

உண்மை நாகேனம்

ஊதுதே கீதம் கேட்கிறதா?

அவை போதாவா?

கேள், அவை கேட்பதை 

வெளியே எதற்கு விசாரம்?

புறத்தே மனதை அலைக்கழிய விடாது அகத்தை உற்றுக்கேள் , சத்தியத்தின் குரலை உணர் என கவிதை சொல்கின்றது.

கலை இலக்கியங்கள் நேரடி அனுபவத்தை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும் எனக் கூறும் தளையசிங்கம், இந்தக் கவிதையில் தொன்மங்களினூடாக கவிதை சொல்லும் முறையைப் பயன்படுத்துகின்றார். கலை, இலக்கியங்களில் அனுபவத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்திமுறைமையாக தொன்மங்களின் பயன்பாடு காணப்படுகின்றது. அனுபவத்தைக் கலையாக்குகையில் அதன் அழகியல் தனத்துக்காகவும் கருத்துப் புலப்பாட்டுக்காகவும் தொன்மங்களைப் பயன்படுத்துதல் கலை இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருவதுதான். தளையசி;ங்கமும் தவிர்க்க முடியாது இந்தப் பொதுப்போக்கோடு இணைந்து கொள்கின்றார். இது நேரடி அனுபவம் பற்றிய கருத்தாக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படுகின்றது.

சத்தியம் பற்றிய தேடலும் அதற்கான விசாரத்தையும் மையமாகக் கொண்டு இயங்குவதால் தளையசிங்கத்தின் கவிதைகளின் மொழி தத்துவச் சாயல் நிரம்பிய மொழியாகக் காணப்படுகின்றது. மொழியை தருக்கப்பண்பு கொண்ட அறிவின் மொழியாகத் தன் கவிதைகளில் தளையசிங்கம் பயன்படுத்தியுள்ளார். கலைஞனின் தாகத்தின் ‘சுழல் நான்கு’ பகுதியில் வரும் நல்லசிவத்தின் பதில்கள் தருக்கப்பண்பு மிக்க அறிவின் மொழியாக வெளிப்படுகின்றன.

“பரவசம்,

சடத்தின் இறந்த நிலையல்ல

அது இயக்கத்தின் உச்சநிலை.

உச்சக் கருத்துநிலை.


இறந்த சடநிலை கூட

உச்சக் கருத்துநிலையின் 

உறங்கு நிலையேதான்

பரவசத்தின் இறங்கிய நிலை,

வீழ்ச்சி.”

இவ்வாறாக மொழியை அறிவின் தளத்தில் தருக்கப் பண்புகளோடு பயன்படுத்துகின்றார். அவர் கவிதைகளில் முன்வைக்கும் பொருண்மை சாதாரண காட்சிவழிப்பட்ட பொருண்மைகளல்ல. மாறாக கருத்துநிலைப் பண்புகளை அதிதமும் உள்ளடக்கிய பொருண்மை சார்ந்தவை. அதனால் அவரது மொழிதலிலும் அறிவின் கூறுகள் நிரம்பிய தருக்கப்பண்பே அதிகமும் காணப்படுகின்றது. அவர் ஞானம் நிரம்பிய மனிதர்களைப் பற்றியே சிந்தித்தார் அதனாலையே தன் கவிதைகளை ஞானத் தேடலுக்கான வழியாக எழுதியிருக்கின்றார்.

‘ஒளிபடைத்த கண்ணினாய்’ என்ற கவிதையின் முற்குறிப்பு இவ்வாறு அமைகின்றது.

“இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட ஞானிகள் மட்டும் சத்திய எழுச்சி பெற்ற ஞானிகளாய் அங்குமிங்குமாய் இருந்தனர். இனி ஒரு முழுச் சமூகமுமே ஞான சமூகமாக வேண்டும் . ஒரு முழு இனமுமே ஞான இனமாக வேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாக வேண்டும். முழு உலகமுமே ஞான பூமியாக வேண்டும்”

இந்த முற்குறிப்பு தளையசிங்கத்தின் அதீத சிந்தனையாகவே படுகின்றது. யதார்த்த உலகப் போக்கை அவர் மறுதலையாக பார்க்கத்தலைப்படுகின்றார்.

முழு சமூகத்தையும் உலகத்தையும் ஞானத்தின் தரிசனமாக அவர் காண விழைகின்றார். ஓளி படைத்த கண்ணினாய் என அவர் சுட்டுவது முழு உலக மனிதரையுமே.

“கற்பனையில் நிசத்தையும்

தூக்கத்தில் விழிப்பையும்

தன்னுள் அதுவையும்

காணும் நீயே 

சகலத்திலும் சத்தியத்தை எழுப்பும் பெரு மனிதன் ஆவாய்

பொய்யை அழிக்கும் போர்வீரன் நீயே” என்கின்றார்.

இதை ஒத்த தரிசனத்தை பாரதியாரின் கவிதைகளிலும் காண முடிகின்றது. அவரது பிற கவிதைகளில் காணும் எளிமையான மொழிதலை வசன கவிதைகளில் காணமுடிவதில்லை. அக் கவிதைகளில் முன்மொழியும் விடயங்கள் தத்துவார்த்த தன்மை கொண்டவை. ‘ஞாயிறு’ கவிதை

“நீ ஒளி. நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி

மின்னல், இரத்தினம் கனல் தீக் கொழுந்து

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி

கண் நினது வீடு

புகழ் வீரம் - இவை நினது லீலை

அறிவு நின் குறி அறிவின் குறி நீ

நீ சுடுகிறாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க

உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்

வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்

நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க.

என அமைகின்றது. இத்தகைய கவிதைகள் அறிவின் வயப்பட்டவை. தளையசிங்கத்தின் கவிதைகள் யாவுமே இத்தகைய மொழிதல் முறைகொண்டவையே.

உலகை புரிந்து கொள்ளல் என்பதில் பாரதிக்கும் தளையசிங்கத்துக்கும் ஒருமை நிலை காணப்படுகின்றது. ஆனால் பாரதியாரின் பார்வை வைதீக வயப்பட்ட தரிசனத்தின் மூலமாக கிட்டியவை. பாரதி நடைமுறை இயல்புகளுடன் அவற்றைப் பொருத்திப்பார்த்து கீழ்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார். ஆனால் தளையசிங்கத்தின் உலக தரிசனம் என்பதுநடைமுறை அனுபவங்கள் மூலம் கிட்டியவற்றிலிருந்து தத்துவநிலைப்பட்ட தரிசனமாக விரிவு காண்பது. அவரது ஞான பூமி பற்றிய சிந்தனையே இந்த அடிப்படையிலானதுதான்.

“பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தி;ன் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையைத் தன் காலத்திற்குக் கொண்டுவந்து, இடைக்காலச் சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து, இடைவெளிகளை அடைத்து, முழுமைப்படுத்த முயன்றார் என்று சொல்லலாம்” என சுந்தரராமசாமி குறிப்பிடுவது இங்கு மனம் கொள்ளத்தக்கது.

மெய்யுள் “இதுவரையுள்ள கலை இலக்கிங்களை அழிக்கும் கலை, இலக்கியமாகவும் இருக்கும்” என தளையசிங்கம் நம்பிக்கை கொள்கின்றார்.

அவரது ‘நான் நாகரிகத்தின் அழிவும் நாம் நாகரிகத்தின் எழுச்சியும்’ கவிதையில் 

“அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம்

தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம்

சமூகம் - நான் நிறுவிய அத்தனை வரம்புகளையும் 

சத்தியப் பிரவாகம் தகர்க்கிறது:

சகலத்திலும் நான் சரணாகதி”  என எழுதுகின்றார்.

‘நான்’ என்பதை அதிகாரத்தின் வடிவமாகவே அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம், தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம், சமுகம் என அனைத்திலும் காண்கின்றார்.

‘சத்தியம்’ என்பதே அனைத்து அதிகார வரம்புகளையும் உடைக்கும் என அவர் நம்புகின்றார்.

‘நான்’ என்பதை ஆணவத்தின் குணாம்சமாக சமயக் கோட்பாடுகள் கூறுகின்றன. ‘நான்’ என்பதை களைதல் தொடர்பாக சைவசித்தாந்தமும் பேசுகின்றது. பதி,பசு, பாசம் என்பதில் பாசத்தின் கூறுகளில் ஒன்றாக ஆணவம் அமைகின்றது. ஆன்மாவை கட்டும் கட்டாக அல்லது தளையாக அதைச் சொல்கின்றது. ஒரு வகையில் நான் என்பது அதிகாரத்தின் குரலாகத்தான் சைவசித்தாந்தத்திலும் ஒலிக்கின்றது.

மனித நாகரிகத்தின் அனைத்து நிலைகளும் “நான்” என்ற அதிகாரம் வளர்த்தவையே என்கிறார் தளையசிங்கம். 

நான் வளர்த்த கலாச்சாரம் கரைகிறது,

நான் வளர்த்த நாகரிகம் அழிகிறது,

நான் வளர்த்த தத்துவங்கள் சிதைகின்றன:

நான் வளர்த்த சகலமுமே நானை வளர்த்தவையே-

அதனால் நானை வளர்த்தவை சிதைய 

நானும் அழிகின்(றேன்)றது:

பால் இச்சை, பண ஆசை, ஆளுமைப் போட்டி

அத்தனை சிற்றின்பப் படுக்கைகளும் அதனோடு

அழிகின்றன”

என ‘நான்’ வளர்த்த நாகரிகத்தின் அழிவு பற்றிக்; கூறுகின்றார். நான் என்பதை விடுத்து நாம் என்பது பற்றிப் பேசுவது பன்மைத் தன்மையை பேசுவதுதான்.

நான் - அதன் பல்பரிமாணங்கள் கட்டுரையில் வரும் ‘அதுவே நீ’ எனத் தொடங்கும் கவிதையில் ‘நான்’ சிறு நான் என்றும் நான்- நான் என்பதை ‘நான்’ என்பதை கடந்த நிலையாகவும் குறிப்பிடுகின்றார். அதையே விடுதலைக்குரிய வழியாகக் காட்டுகின்றார்.

“நான் நான் என்ற நிர்வாண விடுதலை எல்லாவற்றுக்குமுரிய ஒரே ஒரு அடித்தளமாதலால் அந்த நிலையில் நிற்பவன் முழுப்பிரபஞ்சத்தையும் தன்னில் கண்டவனாகவும் முழுப்பிரபஞ்சத்துக்கும் அப்பாற்பட்டவனாகவும் நிற்பான். அதனால் அவனே பூரண செயல்வீரனாகவும் இருப்பான்” என்கின்றார்.ஆனால் தளையசிங்கத்தின் ‘சும்மா இரு’ என்ற கவிதை தன் அடையாளங் குறித்த ‘நான்’ பற்றிப் பேசுகின்றது.

அவிழ்க்க முடியாத சட்டையாக ‘நான்’ என்ற தன்மைச் சுட்டு அவரைத் தொடர்கிறது. நான் என்பதை களைதல் என அவர் பேசுவது சாத்தியமற்றுப் போகிறது.

“சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான் எனத் தொடங்கும் கவிதை

“அழுகை இல்லை எனக்கு

அழிவும் இல்லை எனக்கு

முறிவும் கரைவும் இல்லை

கழிவும் அசைவும் இல்லை

சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான்.”  என முடிகின்றது

இந்தக் கவிதையில் ஒரு அடையாளப்படுத்தலை தளையசிங்கம் செய்கின்றார். அதிகார மையங்களுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலையை அவர் கொண்டுவருகின்றார். தன்னை எதிர்ப்பின் பிரதான அடையாளமாக்குகின்றார். எதிர்ப்புத் தோன்றும் இடங்களிலெல்லாம் ‘நான்’ என்ற பிரக்ஞையை அழிவற்ற பேருருவாக அவர் அமைக்கின்றார். அவர் ‘நாம்’ எனக் கொண்டாடும் பேர்மனம் என்ற கருத்துநிலைக்கு இது மாறானதாக தோற்றங்கொண்டாலும் இந்த பிரக்ஞைபூர்வமான அடையாளப்படுத்தலிலிருந்துதான் தளையசிங்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். அவரது கோட்பாடு சார்ந்த அணுகுமுறைகள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு ‘மறுத்தோடியாக” நிலைபெறும் இடமும் இதுதான். இதனால்த்தான் அவரால் எல்லாவற்றின் மீதும் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்க முடிந்திருகின்றது. சமுகத்தின் நடைமுறைகளில் காணப்படும் தாழ்நிலைகளை அவரால் எதிர்க்க முடிந்திருக்கின்றது. இதற்கு பொதுவான கவிதைப் போக்கிலிருந்து மாறுபட வேண்டிய தேவை அவருக்கு ஏற்படுகின்றது. அவரது கவிதைகள் ஒருவிதமான கோசம் நிரம்பிய தன்மையைப் பெறுவதற்கு இதுவே அடிப்படையாகின்றது. 

‘வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்’ என்ற கவிதை எழுச்சியின் அல்லது அறைகூவலின் வடிவமாகின்றது. தன்காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் கேள்விக்குட்படுத்தும் தளையசிங்கம் இழிநிலை அம்சங்களற்ற மனித மாண்பு மிக்க ஒரு யுகத்தையே சத்தியயுகம் என கனவு காண்கின்றார். அந்த யுகத்தை வரவேற்க மனித குலத்தை தயார்ப்படுமாறு கவிதையில் கோருகின்றார். தளையசிங்கம் எதிர்பார்த்தது மானுட எழுச்சி. எனவே அதை வலியுறுத்துவதற்கு அவருக்கு எழுச்சிமிக்க குரலே அவசியமாகின்றது.

“கிணற்றடியில் 

தாழ்த்தப்பட்டவர் தவமிருப்பது சரியா?

கோயில்களில்

திருக்குலத்தாரை தள்ளிவைத்தல் முறையா?

தெருவடியில்

மனித இறைவன் பிச்சையெடுக்க

கோயில்களில் கல்லுக் கடவுளுக்கு

கற்பூரம் சாம்பிராணி பிரசாதம் படையல்

பூசை திருவிழா மின்சாரம் வாத்தியம்

தேரோட்டம் சப்பரம் ஆலவட்டம் அலங்காரம்-

ஐயோ இவை அடுக்குமா?


கணக்கெடுங்கள்!

வந்துவிட்டது சத்திய யுகம்,

விழித்தெழுங்கள் கணக்கெடுங்கள்!


மதத்தின் பெயரால் கட்டமைக்கபட்ட அனைத்து இழிநிலைகள் மீதும் அவர் கேள்விகளை எழுப்பினார். கற்பனையற்ற நேரடி அனுபவத்திலிருந்து எழுகின்ற கேள்விகள் இவை. ஒரு போராட்டக்காரனாக அவர் எதிர்கொண்ட அனுபவத்தின் திரண்ட உருவமாகவே இந்தக் கேள்விகள் அமைகின்றன. சமூக இழிநிலைகளே அவரை சத்திய யுகம் பற்றிய எண்ணத்தை உருக்கொள்ளச் செய்கிறது. அவர் மகத்தான மானுட சமூகம் பற்றிக் கனவு காண்கின்றார். அதையே சத்திய யுகம் என்கின்றார். அது அவர் எதிர்பார்க்கும் பூரண யுகம். 

‘சூரன்போர் வருகிறது’ எனத் தொடங்கும் கவிதை, தளையசிங்கத்தின் கவிதைகளில் முக்கியமான கவிதை. அவரது பிற கவிதைகளிலிருந்து எளிமையான கருத்துநிலையை உடைய கவிதை. சமூகத்தின் போலிமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்ற கவிதை. போலி மனிதர்களையும் போலிக் கருத்துநிலைகளையும் ‘சூரன்” என்னும் பொதுப் படிமமாக உருவகித்து கேள்விகளை எழுப்புகின்றார். சத்தியத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடக்கின்ற போராக முருகனுக்கும் சூரனுக்கும் இடையில் நிகழ்ந்த போரை யதார்த்த வாழ்வின் அதர்ம அநியாயங்களோடு தொடர்புபடுத்தி எழுதியிருக்கின்றார்.

“பார் தம்பி

அவர் பிஸ்னஸ் நடத்துகின்றார்

பிஸ்னஸ் கறுப்பு

வேட்டியோ வெள்ளை

அவன் சூரன்

மகா மகா சூரன்


“நான் தொழிலாளி வர்க்கம் 

அழியப் போகிறதுஇந்த முதலாளி வர்க்கம்”

பார் தம்பி

அவன் கூட்டத்தில் பேசுகின்றான்

படுகள்ளன் அவன்

அவனே முதலாளி

‘நான்’ னின் ஏக முதலாளி”

போலி சோசலிசம் பேசுவேரின் இழிநிலைகளை கவிதை வெளிப்படுத்துகின்றது.

“பத்திரிகைச் சுதந்திரம்

படுபொய்தம்பி அது,

உன்னை ஏமாற்றும் 

இன்னோர் சுலோகம்

அவன் சூரன்

பத்திரிகைகளாலேயே 

உன் பார்வையை மறைக்கின்றான்

கடதாசிப்புலி, கடதாசிப்புலி”

என பத்திரிகைச் சுதந்திரத்தின் பேரால உண்மைகளைச் சிதைத்து பொய்களை உண்மையாக்கி வியாபாரம் நடத்துகின்ற பொறுப்பற்றதனத்தை இகழ்கின்றார்.

இந்த சமூக அக்கறையற்ற தனங்களுக்கு எதிராக போராட மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும் என்பதையே இந்தக் கவிதையில் வெளிப்படுத்துகின்றார்.

தளையசிங்கம் ‘கூட்டு மனநிலை பற்றிச் சிந்தித்திருக்கின்றார். இதை சமூக மனமாகக் கொள்ள முடியும்.

“மெய்யுள் உருவம், ஓர் எழுத்தாளனின் வித்துவச் செருக்கு, ஆணவம் தன்னை நிறுவுவதற்காகக் கண்டுபிடித்துள்ள பம்மாத்தல்ல. இன்று பல எழுத்தாளர்கள் மிகமிகச் செயற்கையாக உருவாக்கும் கற்பனாவாத கோலங்களிலிருந்து மெய்யுள் முற்றாக மாறுபட்டது. மெய்யுள் ஒரு எழுத்தாளனின் ஆணவ அறுப்பு முயற்சியின் உருவமாகும்.”

எனவே மெய்யுள் என்கின்ற உருவம் எழுத்தாளனை சமூகப் பெறுமானமுடைய மனிதனாக்கும் உருவமாக தளையசிங்கம் முன்வைத்திருக்கின்றார். செயற்கைத்தனமான கற்பனாவாத படைப்புக்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப் பார்த்தால் மெய்யுள் என்பதுகூட அதீத கற்பனை உருவம் என்றேபடும். உருவமும் உள்ளடக்கமும் சத்தியமாகவே இருக்கும் என்றால் அவர் வடிவமைக்கும் உருவம் எது? அவரது படைப்புக்களை பொதுவான இலக்கிய வடிவங்களுக்குள்த்தான் வைத்து நோக்குகின்றோம். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல் என நிலைபெற்ற வடிவங்களுக்குள்ளேயே வைத்து நோக்குகின்றோம். ஆனால் அவர் கூறிய வடிவத் தகர்ப்பு என்பது முக்கியமானது, அவர் அதற்கான சாத்தியங்களை தன் படைப்புக்களில் திறக்க முயன்றிருக்கின்றார்;. அவருடைய ‘போர்ப்பறை’ கவிதை அத்தகைய முயற்சிதான். இந்த வடிவத் தகர்ப்பே நிலாந்தனின் மண்பட்டினங்களாகவும். வன்னிமாண்மியமாகவும் திரட்சிபெற்றது எனலாம். 

எழுத்தாளனை ஞானம் பெற்றவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்த தளையசிங்கம், பூரண இலக்கியம் பற்றிப் பேசுகின்றார். எழுத்தாளன் தான் பெற்ற, உணர்ந்த ஞானத்தை படைப்பினூடாக அனுபவமாக்க வேண்டும். அவரது பூரண இலக்கியக் கோட்பாட்டின் முன் வரைபுகள் தான் அவர் எழுதிய சொற்ப கவிதைகளும். எனவே இவற்றை கவிதைகள் என்ற சட்டகத்துக்குள் கொண்டுவருவதை விடவும் அவரது கோட்பாட்டினை பகிர்வதற்கு அவர் கையாண்ட உத்தி என்று கருதுவதே பொருத்தமாக அமையும்.

கலையை மனித இயக்கத்தின் செயன்நிலைகள் எல்லாவற்றிலும் காணும் தளையசிங்கம், இனிவரும் காலத்தில் அனைத்துமே கலைப்பெறுமானம் உடையவையாகவே இருக்கும் என்கின்றார். கலையின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அவர் கொண்டாடுகின்றார்.

பரவசம் என்பது,

“வீழ்ச்சியிலிருந்து 

விடுதலையைத் தருவது அறிவு

அறிவின் விரிவைப் பொறுத்தது பரவசம்” என்கின்றார்.

பூரண பரவசத்தை சகலவற்றிலும் வெளிக்காட்டுவதே பரிணாமத்தின் இலட்சியம் என்கின்றார். பரிமாணச் சுழல் பேரறிவுக்குரியது என்கின்ற தளையசிங்கம்

“அடுத்த தளத்தில்

வேலைக்கும் கலைக்கும் 

தொழிலுக்கும் தொழுகைக்கும் 

வித்தியாசமில்லை” என்கின்றார்.

அனைத்தையும் கலையாகக் காணும் இந்த ஒருமைப்பாடு பேரறிவுக்குரியது. எல்லாவற்றிலும் பரவசம் காண்பது ஞானநிலைக்குரியது. அவர் கலையையும் பிற செயல்களையும் ஞானநிலைக்குரியதாகவே கருதுகின்றார். அதனால்த்தான் ஒரு எழுத்தாளன் எதிர்காலத்தில் ஞானியாகவே இருப்பான் என்;றார்.

தளையசிங்கம், ஒரு ஞானியாகவே வாழ்ந்து மடிந்து போன மகாகலைஞன். அவரது கருத்தியலை தமிழ்சூழலில் விரிவுபடுத்துவதன் மூலம் தமிழர் சிந்தனை மரபு விரிவும் ஆழமும் பெறும். அதற்கான பணியினை முன்னெடுப்போம்.

“அழுகை இல்லை எனக்கு

அழிவும் இல்லை எனக்கு

முறிவும் கரைவும் இல்லை

கழிவும் அசைவும் இல்லை

சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான்.”

00

(தூண்டி கலை இலக்கிய வட்டத்தால் நடாத்தப்பட்ட தளையசிங்கம் குறித்த ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி- காலம்