19 டிசம்பர், 2009

சர்ப்பவெளிப் புணர்ச்சி

.....................................................
சித்தாந்தன்

இந்தப் பாம்புகள் புணர்கின்றன
கலவிக்கிறக்கத்தில்
ஓன்றையொன்று கடித்துப்புரள்கின்றன

தாழைமரங்களின் மணம்
பொழுதை கலவியின் ஆழத்துள் புதைக்கிறது
காலை மாலை இரவு சாமமென
பொழுதுகளை மறந்து
வீதியில் கடப்போர்
மறைவிற்காக ஒதுங்குவோர் எவர் கண்களிலும்
படும்படியாகப் புணர்கின்றன

சிறுவர்கள் கூடிக் கல்லெறிகிறார்கள்
வளர்ந்தவர்கள்
இது கடவுளின் புணர்ச்சியெனக் கண்டிக்கிறார்கள்
கடவுளர்களான பாம்புகள் புணர்கின்றன
தாழைமரங்கள் உணர்சிக்கலகப்பித்தேறி
வானில் எழுந்து பறக்கின்றன
நிர்வாண வெளியில் பாலிமை பெருகிக்
கடலாகக் கடலாகப் பாம்புகள் புணர்கின்றன

ஒரு துளி உயிரணுவிலிருந்து வளர்கிறது
பாம்புகளின் கோயில்
மூலஸ்தான விக்கிரங்களான பாம்புகள் புணர்கின்றன
கலவி மயக்கம் மிதக்க
களிப்பிலூறிய கண்களுடன்
பக்தர்கள் வணங்குகிறார்கள்
( நன்றி- கலைமுகம் )

06 டிசம்பர், 2009

பசியோடிருப்பவனின் அழைப்பு

சித்தாந்தன்
.........................................................
மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல்நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்து போகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்

(மறுபாதி-இதழ்-2,ஐப்பசி- மார்கழி-2009)