31 டிசம்பர், 2010

வேட்டையாடும் மிருகம்

சித்தாந்தன்

வேட்டையின் போது
கொல்லாதுவிட்ட மிருகம்
என்னைக் கனவில் அச்சுறுத்துகின்றது

மரங்களிடை பதுங்கும்
அதன் கண்களின் குரூரம்
கொலையாளியின் கூரிய ஆயுதங்களாய்
ஒளிருகின்றன

அதன் பஞ்சுடலின் வனப்பில் மயங்கி
தப்பிக்க அனுமதித்துபோதும்
தன் சாதுரியத்தால்
என்னை வேட்டையாட வந்திருக்கின்றது

இலைகளையுண்ணும்
அதன் பற்களில் வழியும் இரத்தத்தில்
நனைகிற என் தேகத்தில்
தன் சிறுவிரல்களால் புலால் நாறும்
சுரங்களை மீட்டுகின்றது

பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை
தன் நகங்களால் கீறும் மிருகம்
எதிர்பாராத பொழுதில்
ஒரு போர்வீரனாய் விஸ்பரூபம் கொண்டு
தன் யுகத்தின் கடைசிப் பிராணியாய்
என்னைப் பாவனை செய்து
அங்கலாய்த்தபடி அமர்ந்திருக்கிறது முன்னால்

நினைவின் வழி கனவுள் நுழைந்த
மிருகத்தின் சிறிய கண்களுக்குள்ளிருந்து
வேட்டை முடித்துத் திரும்பும்
எண்ணற்ற வீரர்களில் ஒருவனாய்
நானும் திரும்புகின்றேன்
தப்பித்தல்களை முறியடிக்கும்
பொறிகளைக் காவிக்கொண்டு
00

13 டிசம்பர், 2010

மீண்டும் மீண்டும் கொல்லும் நினைவுகள்

சித்தாந்தன்

காகங்கள் வந்தமரும் மின்சாரக் கம்பிகளின்
சாமாந்தர வெளியில்
எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது
இன்றைய இரவு

காலடிகள் வற்றிய படிக்கட்டுக்களில்
தொலைந்த நண்பனின் காலடியோசை கேட்டபடியிருக்கின்;றது

இன்னும் உலரவில்லை நேற்றைய இரவு பருகிய
மதுக்குவளைகள்
அறையை நிறைத்திருக்கும் சிகரட்டின் மணம்
தீர்ந்து போகாத கதைகளை நினைவூட்டுகின்றது

நிச்சயமின்மையின் பாதையில் அவன் பயணிக்கையில்
அவனிடமும் நம்பிக்கைகள் இருக்கவில்லை
துரத்தப்பட்ட ஒரு சிறுவனைப் போலவேயிருந்தான்

அவனின் பாதைகளில் யாரேனும்
தொடரவில்லை
கைகளால் எடுத்து தன் கண்களை அவன் குத்திக்கொண்டபோது
ஒரு பகலும் ஓராயிரம் இரவுகளும் குருடாகின

மந்தைகள் இல்லாத புல் வெளியில் வெறுமனே
ஒற்றையாக கைத்தடி இருந்தது
திசைகளை நினைவு கூரத்தயங்கும் எவரும்
அதைப் பொருட்படுத்தவில்லை

மேய்ப்பனின் புன்னகையை தான் கண்டதாகக்கூறும்
வழிப் போக்கன் என்னிடம் வர அஞ்சுகின்றான்
அவன் வராதே இருக்கட்டும்
இந்த இரவை நான்
காலியாகக் கிடக்கும் மதுக்குவளைகளுடனும்
சாம்பலில் புதைந்திருக்கும் சிகரட்டின் அடிக்கட்டைகளுடனும்
கழிக்கின்றேன்
அகற்ற முடியா நினைவை உறைந்த படமாக
சுவரில் மாட்டிவைக்க நான் தயங்குகின்றேன்

வேண்டாம் நினைவுகள்
கொல்லப்பட்டவனை மீண்டும் மீண்டும் கொல்லும்
நினைவுகள்

27.01.2010