19 பிப்ரவரி, 2011

வெளிவந்திருக்கிறது-“எதுவுமல்ல எதுவும்”

கருணாகரனின் கவிதைகள்

வெளியீடு- மகிழ்,754, கனகராசா வீதி, கிளிநொச்சி.

கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுப்பாக “எதுவுமல்ல எதுவும்” வெளிவந்திருக்கின்றது. நம்பிக்கைக்கும் நம்பிக்கையீனத்துக்கும் இடையில் மங்கிச் சுடரும் மனதின் கவிதைகளாக இத்தொகுப்புக் கவிதைகளுள்ளன.

யுத்தத்தின் மூடுண்ட சுவர்களுக்குள் இருந்து மூச்சுவிட்டபடி சதா அலையும் மனது தன்னைச் சுயவிசாரணைக்குட்படுத்தும் கணங்களைக் கருணாகரனின் கவிதைகள் பொதுவாக வெளிப்படுத்துகின்றன. அவரின் நான்கு தொகுதிகளுமே வெவ்வேறு காலகட்டங்களின் பிரதிபலிப்புக்கள்தான். வலியும் பீறிடும் குருதியின் நெடிலும் துரத்திவரும் மரணத்தின் அழியா நிழலுமே அவரின் கவிதைகளில் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. இவற்றிற்குள்ளும் மென்மையான காதலின் தருணங்களை அன்புணர்வின் வருடல்களைக் காணமுடிகின்றது. இந்தத் தொடர்நிலையோட்டம் “எதுவுமல்ல எதுவும்” வரையிலும் தொடர்கின்றது. எனினும் முன்னைய கவிதைத் தொகுப்புக்களிலிருந்து இத் தொகுப்பின் கவிதைகள் இலகுவானதும் நெகிழ்ச்சிமிக்கதுமான வாசிப்புக்கு உரிய கவிதைகளாக இருக்கின்றன.

யுத்தத்தின் தீவிரம் நம்பிக்கைகளையுடைத்துச் சிதறல்களாக்கியிருக்கும் காலத்தில். யுத்தம் பற்றிய விமர்சனப்பாங்கான பார்வை இயல்பாகவே வந்துவிடும். இது யுத்தம் மீதான விமர்சனமாக மட்டுமன்றி போரிட்டோர் மீதான விமர்சனமாகவும் அமைவதும் இயல்பானதே. யுத்தம் பற்றிய மேலோட்டமான புறநிலைப் பார்வைக்கு அப்பால் யுத்தத்தை, அதன் தீவிரத்தை உள்நின்று அனுபவித்தவர்களின் குரல்கள்தான் அதன் உண்மை முகத்தைப் பறைசாற்ற முடியும்.

“எதுவுமல்லை எதுவும் ” தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

கருணையில்லாத பிணம்

கருணையில்லாத பிணம்
எல்லோரையும்
கதறியழ வைக்கிறது
அன்பின்றி
சிறு நன்றியுமின்றி.

சாவின் களை நிரம்பிய முற்றத்தில்
துக்கம் பூத்து
படர்கிறது வாசமாய்
பேரிசை கொண்டெழுகிறாள்
ஓப்பாரிப் பெண்
மீளாதா உயிர்க்கால மென்று.

எந்தக் குரலுக்கும் பிரதிபலிப்பின்றி
கரையமுடியாதிருக்கிறது
மயான நினைவோடு
பிணம்.

முடிந்தது ஒரு பயணம்
விலகியது மந்தை
கூட்டத்தில் பெரும் பள்ளமாய்
துக்கத்தின் மறை பெருக்கி

மிஞ்சிய கனவில்
தீ மூழுமா
புல் முளைக்குமா?
வெற்றிடத்தில் அமர்கிறது காகம்

கொல்லைப் புறத்தில்
மருத மரங்களில்
கூடிய பறவைகள் சிதறித் தெறிக்க
இருள் விழுங்கிய
தாமரைக் குளத்தில்
மருத மரங்கள் பாறி விழுந்தன.

சனங்களின் குரலால்
நிறைந்த வானத்தில்
எந்த நட்சத்திரமுமில்லை
கண்ணறிய.

புயல் கொண்டு போகிறது
கையிலேந்திய
ஒரு சொட்டு நீரையும்

00

03 பிப்ரவரி, 2011

இலையுலர்ந்த காலத்தின் சலனம்

சித்தாந்தன்

நீங்கள் பேசத்துணியாத ஒரு சொல்லைக்
கண்டெடுத்திருக்கின்றேன்

பளிங்காய் ஒளிரும் காலத்தை
பிசைந்தாக்கிய இச்சொல்
உடைந்த வீடொன்றின்கூரைக்குள்
பறவைக் கூடாய் சிதைந்துகிடந்தது

நெடுந் தொலைவின் அசையும் படிமங்களை உற்பவித்து
நிர்ச்சலனத்துடன் அடங்கிய பெருங்காட்டுத் தீயை
கனவுகளில் அவிழ்க்கிறது இச் சொல்

நீரை விழுங்கிப் புரையேறிய வேடுவன்
மரங்களைப் பிடுங்கிவந்து
புதிய காட்டினை நடுகின்றான்

இலைகளை உலர்த்தும் மரங்களைத்
தன் கூந்தலில் சூடிய அழகி
பிரபஞ்சச் சூலிலிருந்து படைத்தளிக்கிறாள்
பூக்காத மரங்களை

நான் இச் சொல்லை
சவ ஊர்வலத்தின் சங்கீதமாகப் பாடவிரும்புகின்றேன்

பயணத்தில் தடுமாறிய கால்களோடு
மரங்களைத் தேடியலைபவர்கள்
வந்திருக்கிறார்கள் வேடுவனின் காட்டுக்கு

புறங்கூறும் முகம் கொண்ட யாவரும்
நிழல்களைப் புறமொதுக்கிப் பாதைவிதிகளை மறந்து
நடுவீதியில் உலாவிக் களிக்கையில்
நான் இச் சொல்லை மலராக்கி இதழ்களை
உதிர்த்துவிடுகின்றேன்

அழகி தன் கூந்தலில் சூடிய
முதிர்ந்த மரத்திலிருந்து வேடுவனின் காடு பட்டுதிர்கிறது

இதழ்களாய் உலர்ந்த சொல்லை
அள்ளிப் போகிறது காற்று

அமைதியாகச் செல்லும் சவ ஊர்வலத்தின் பின்னால்
மிக அமைதியாக நான்