24 பிப்ரவரி, 2012

பொழுதுகளைத் தின்பவன்

சித்தாந்தன்

இரவறையில் சிதறிய இரவின்
சிறு துகழ்களை பொறுக்கிக் கொண்டு
பகலின் விளிம்புக்குச் செல்லுகின்றேன்.
முகமூடிகளின் தெருக்களிலிருந்து சலிப்புற்றுத் திரும்பும்
நாட்களை உறிஞ்சிக் கொள்கின்றன சுவர்கள்.
ஏதைக் கொண்டும் கடக்கவியலாத
பொழுதுகளின் மேலே சூரியன் கந்தல்த் துணியாகத்
தொங்கிக்கொண்டிருக்கின்றது.
யாவற்றுக்கும் விளக்கங்களைச் சொல்லி
ஓய்கையில்
நிழல்களின் முற்றத்தில் மொய்கின்றது
ஆயிரமாயிரம் பாலைவனங்களின் தடங்கள்.
எல்லாமே மாயத்தனங்களுடன்
அறைமுகடெங்கும் படரவிக்கிடக்கின்றன.
வருகையாளர்களிடம் பேச எதுவுமில்லாதவனின்
தேநீர்க் குவளைகளில் நிரம்பித் ததும்புகிறது வெறுமை.
நேவெடுக்கும் கால்களைப் புறக்கணிக்கின்ற
சம்பாசனைகளால் நிறைந்திருக்கும் இருளறையில
யாருமேயில்லை
பகலும் இரவும் அற்ற பொழுதுகளைத் தின்று
உடல் பருத்தவனின் கண்களுக்குள்
உறைந்துகிடக்கின்றன எண்ணற்ற காட்சிகள்.