07 ஜூலை, 2012

கனவில் மீளும் வார்த்தைகள்


சித்தாந்தன்

சொல்லுதற்கிடையில் தொலைந்து போன
ஏண்ணிறைந்த வார்த்தைகள்
இன்றென் கனவில் வந்தன

பசிய வெயிலின் இளங்குருத்துப் புல்வெளியில்
கிடந்தவாறு
புத்தனின் ஞானக்கண்களால் உலகைக் காண்கையில்
பெருக்கெடுத்த ஞானச் சொற்கள்

கைகளை இரத்தம் தெறிக்க உதறிவிட்டு
நட்பின் முகத்தை கோரமாக்கி விட்டுச் சென்ற
நண்பர்களுக்குச் சொல்ல வைத்திருந்த வார்த்தைகள்

ஏழாம் உலகத்தைப் படித்துவிட்டு
ஜெயமோகனுடன் பகிர சீர்செய்த வார்த்தைகள்

பிள்ளைகள் துயின்ற பின் வீடடைகையில்
வழிமலர்த்தியுறங்கும் அவர்களுக்காய் தெருவில்
கற்பனையாய் உருவாக்கிய கதைககள்

எல்லாமே இன்றென் கனவில்
யுகங்களின் தேக்கத்திலிருந்து பீறிட்ட பெருநதியாக

துயிலை உடைத்து நொருக்கிய
வனாந்தரப் பொழுதுகளின் ஈற்றில்
நானே வார்த்தைகளின் நிசப்தமாய் எஞ்சிவிடுகின்றேன்

பின்னெல்லாம் கனவின் விழி திறந்து
நனைவை அடைகையில்
துாரத்துத் திகிற் பறவையின் குரலில் சிதறுகின்றன
கனவில் மீண்ட வார்த்தைகளும்