29 ஜனவரி, 2013

இரத்தம் பீறிடும் குரல்கள்







சித்தாந்தன்

இன்றைய பொழுதின்
கடைசிக் கதவையும் சாத்துகின்றேன்
ஒரு கரிய குரல்
தெருவில் அழைக்கிறது

காலத்தின் தனிமையை மூடி
நுாற்றெட்டு இறகுகளுடன் ஒரு பறவை
நுhறாயிரம் இதழ்களோடு ஒரு மலர்
நினைவிலாடுகின்றன

மரணத்தின் கூரிய அலகுகளுடன்
கடந்துபோயின பொழுதுகள்

நினைவுகளைப் புதைக்க முடியவில்லை

மரணமே யாவற்றிலும் நித்தியமாயிற்று

தனிமையின் சிறகுகளைக்
காற்றுக் கருக்கிற்று

நினைவுகளை உதறமுடியாத
அநாதர பொழுதின் கடைசிக் கதவையும்
சாத்துகையில்
ஒரு கரிய குரல் அழைக்கிறது

மரணத்தின் முற்றத்தை
கடக்கமுடியாக் காலத்தின்
இரத்தம் பீறிடும் குரல்களை
யாரும் புதைக்கவில்லை.