11 ஆகஸ்ட், 2013

குதிரை வீரனின் சாகசம்-1


சித்தாந்தன்
......................

பேரிரைச்சலைத் தின்றபடி
கண்டங்களிலிருந்து கண்டங்களுக்கும்
சமுத்திரங்களிலிருந்து சமுத்திரங்களுக்கும்
பாய்ந்து செல்கிறான் குதிரை வீரன்.

வானத்தில் தங்கவாளை ஒளிரவிட்டு
சூரியனின் நிறங்களில் குளிக்கின்றான்
காற்றைத் திரளையாக்கி
குதிரைக்குத் தீனியிடுகின்றான்
தவனத்தில் மிதக்கும் முகில்களைப் பொடியாக்கி
மேனியில் பு+சுகின்றான்.

சாகசம்
சாகசம்
மலைகள் அவனது குதிரையின் வாலில்
தொங்குகின்றன.
காடுகள் அதன் பிடரி மயிர்களாகிக்
காற்றில் சிலிர்க்கின்றன.

சாகசம் முடிந்து
பு+மிக்குத் திரும்புகின்றான்.
மயானக் காட்டில் சூழன்றடிக்கிறது
ஊழியில் எஞ்சிய புயல் கீற்று.


குதிரை வீரனின் சாகசம்-2

மலையொன்றைத் தன் தோழிலேந்தி
சிறகுகள் முளைத்த குதிரையில் பறக்கின்றான்.

எண்ணற்ற பறவைகளும் பின்தொடர
ஆகாயம் தொட்டு மீளும் வழியில்
கடலெனப் பரந்த காற்றில் கால் கழுவி
முகில் திட்டுக்களில் படுத்துறங்குகின்றான்.

காதில் கேட்கிறது
குதிரையின் கனைப்பு
துகிலுதறி எழுந்து பறக்கத் தொடங்குகின்றான்.
பாதள விளிம்பில் நீள்கின்றன கைகள்
கேட்கின்றன குரல்கள்
அவன் கண்டுகொள்வில்லை.

தன் மாளிகைக்குத் திரும்பி கட்டிலில் சாய்கின்றான்
அப்போதுதான்
அவன் கேட்கின்றான்
தீனமாய் ஒலிக்கும் தன் குரலை.

20.04.2013