23 செப்டம்பர், 2009

கதை வியாபாரிகளின் நகரம்

சித்தாந்தன்
.......................................................
உடலெல்லாம் பூசப்பட்ட மாய நறுமணப்பொடிகள்
நாறத்தொடங்கிய பின்
எந்தக் கூச்சமோ அருவருப்போவின்றி
கதைகள் வாசிக்கப்படுகின்றன தெருக்களில்

கதைகளில் உறங்குபவனின் தேகத்தில்
அச்சிடப்பட்டிருக்கின்றன எண்ணற்ற கதைகள்
உடல் பொசியும் மணத்துடன்
அலையும் கதைகளின் வியாபாரி
“கடனில்லை” என்ற அட்டையைக்
தூக்கிக் கொண்டு திரிகின்றான்

வாசிக்கப்படாத கதைகளுக்காய்
வாசித்தவற்றை மறந்துபோன மனிதர்கள்
மிதக்கும் ஓரிரு உரையாடல்களையும்
கதையென நம்பிக் கவ்வித் தின்கிறார்கள்

கணம் பிந்தி வந்த புதிய வியாபாரி
கதைகளை அவிழ்க்கிறான்
முண்டியடிக்கும் மனிதர்களிடையே
தன்குறியை உயர்திக் காட்டுகின்றான்

ஊனமும் சிதழும் வழியப் புழுக்கள் நெளியும்
அவன் குறி வழி பெருகும் கதைகளை
அவசர அவசரமாக் அள்ளிக் கொண்டு
கலைகின்றனர் மனிதர்

மேலும் ஒருவன் கதைகளைக் கூவி விற்றபடி
தெருவில் வருகின்றான்