31 டிசம்பர், 2010

வேட்டையாடும் மிருகம்

சித்தாந்தன்

வேட்டையின் போது
கொல்லாதுவிட்ட மிருகம்
என்னைக் கனவில் அச்சுறுத்துகின்றது

மரங்களிடை பதுங்கும்
அதன் கண்களின் குரூரம்
கொலையாளியின் கூரிய ஆயுதங்களாய்
ஒளிருகின்றன

அதன் பஞ்சுடலின் வனப்பில் மயங்கி
தப்பிக்க அனுமதித்துபோதும்
தன் சாதுரியத்தால்
என்னை வேட்டையாட வந்திருக்கின்றது

இலைகளையுண்ணும்
அதன் பற்களில் வழியும் இரத்தத்தில்
நனைகிற என் தேகத்தில்
தன் சிறுவிரல்களால் புலால் நாறும்
சுரங்களை மீட்டுகின்றது

பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை
தன் நகங்களால் கீறும் மிருகம்
எதிர்பாராத பொழுதில்
ஒரு போர்வீரனாய் விஸ்பரூபம் கொண்டு
தன் யுகத்தின் கடைசிப் பிராணியாய்
என்னைப் பாவனை செய்து
அங்கலாய்த்தபடி அமர்ந்திருக்கிறது முன்னால்

நினைவின் வழி கனவுள் நுழைந்த
மிருகத்தின் சிறிய கண்களுக்குள்ளிருந்து
வேட்டை முடித்துத் திரும்பும்
எண்ணற்ற வீரர்களில் ஒருவனாய்
நானும் திரும்புகின்றேன்
தப்பித்தல்களை முறியடிக்கும்
பொறிகளைக் காவிக்கொண்டு
00

2 comments:

துவாரகன் சொன்னது…

பூச்சியத்தில் சிதறுண்ட
என் தூக்கத்தின் பசிய துளிரை
தன் நகங்களால் கீறும் மிருகம்
.....
ஏனோ தெரியவில்லை. இந்த வரிகள் எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. கட்டிறுக்கமான சொற்கள். சமகாலத்தின் பதிவு

சித்தாந்தன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி துவாரகன்.இருள் கனத்தபடி மேலேறி வருகிறது.