03 பிப்ரவரி, 2011

இலையுலர்ந்த காலத்தின் சலனம்

சித்தாந்தன்

நீங்கள் பேசத்துணியாத ஒரு சொல்லைக்
கண்டெடுத்திருக்கின்றேன்

பளிங்காய் ஒளிரும் காலத்தை
பிசைந்தாக்கிய இச்சொல்
உடைந்த வீடொன்றின்கூரைக்குள்
பறவைக் கூடாய் சிதைந்துகிடந்தது

நெடுந் தொலைவின் அசையும் படிமங்களை உற்பவித்து
நிர்ச்சலனத்துடன் அடங்கிய பெருங்காட்டுத் தீயை
கனவுகளில் அவிழ்க்கிறது இச் சொல்

நீரை விழுங்கிப் புரையேறிய வேடுவன்
மரங்களைப் பிடுங்கிவந்து
புதிய காட்டினை நடுகின்றான்

இலைகளை உலர்த்தும் மரங்களைத்
தன் கூந்தலில் சூடிய அழகி
பிரபஞ்சச் சூலிலிருந்து படைத்தளிக்கிறாள்
பூக்காத மரங்களை

நான் இச் சொல்லை
சவ ஊர்வலத்தின் சங்கீதமாகப் பாடவிரும்புகின்றேன்

பயணத்தில் தடுமாறிய கால்களோடு
மரங்களைத் தேடியலைபவர்கள்
வந்திருக்கிறார்கள் வேடுவனின் காட்டுக்கு

புறங்கூறும் முகம் கொண்ட யாவரும்
நிழல்களைப் புறமொதுக்கிப் பாதைவிதிகளை மறந்து
நடுவீதியில் உலாவிக் களிக்கையில்
நான் இச் சொல்லை மலராக்கி இதழ்களை
உதிர்த்துவிடுகின்றேன்

அழகி தன் கூந்தலில் சூடிய
முதிர்ந்த மரத்திலிருந்து வேடுவனின் காடு பட்டுதிர்கிறது

இதழ்களாய் உலர்ந்த சொல்லை
அள்ளிப் போகிறது காற்று

அமைதியாகச் செல்லும் சவ ஊர்வலத்தின் பின்னால்
மிக அமைதியாக நான்

2 comments:

துவாரகன் சொன்னது…

பளிங்காய் ஒளிரும் காலத்தை
பிசைந்தாக்கிய இச்சொல்
உடைந்த வீடொன்றின்கூரைக்குள்
பறவைக் கூடாய் சிதைந்துகிடந்தது

'சொல்' என்னும் படிமமும் கவிதையின் கட்டிறுக்கமும் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.

தற்போதைய கவிதைகள் விளங்கவில்லை என்று ஓலமிடுவோர் மீண்டும் ஒரு தடவை ஓலமிடத்தான் போகிறார்கள்.

சித்தாந்தன் சொன்னது…

வருகைக்கு நன்றி துவாரகன்.

கவிதையை பலரும் புரிய முயற்சிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. ஒற்றைத் தனமான வாசிப்புக்கு அப்பாலும் கவிதையின் பரிமாணம் இருக்கிறது என்பதை இன்னும் நம்மில் சிலர் புரிந்து கொள்கிறார்களில்லை. நாம் என்ன செய்யமுடியும் துவாரகன்.