09 நவம்பர், 2011

துயரைச் சுமக்கும் மரம்

சித்தாந்தன்

நூறாவது இரவையும்
சுமந்திருக்கிறது இந்த மரம்

அதிதிகளின் தோரணையுடன்
மலைகளில் வழியும் ஒளித்திரவத்தைப் பருகியபடி
பொழுதுகள் போதை கொள்கின்றன

நானோ
குருவிகளின் அலகுகளில் தொங்கித் திரிகிறேன்
வீனான மனப்பிராந்தியுடன்
சாமங்களுடன் தர்க்கம் புரிந்தபடி

மிதக்கும் காற்றின் சலனத்தை
கலகங்களாக வரைகிறேன் சுவர்களில்

சாவகாசமாக அமரும் பொழுதுகளில்
இரவைச் சுருட்டியெடுத்து ஈனத்துடன்
பகலிடம் கையளிக்கின்றேன்

நட்சத்திரங்களின் ஆயுள் ரேகைகளை
நெடுந் தொலைவுகளின் பாதைகளாக்கி
இரவுக்கும் பகலுக்குமிடையில் தாவியபடியிருக்கிறேன்

வானத்திடம் வருவதற்கிடையில்
என் வம்சச் சூத்திரம் நிலைமாறுகிறது
காற்றும் கரையழித்து உட்திரும்பும் கடலும்
மாயத்தனங்களுடன் ஊமையாகின்றன

சாயம் வெளிறிய இரவு
பகலின் சூனியச் சாலையில் ஒளிக்கிறது

இரவினை அருந்திய பகலிடமிருந்து
தப்பிக்கும் நுட்பங்களை அறியாது
சதுரங்கத்தில் தோற்ற அரசானாக
பாதாள விளிம்புகளில் தள்ளாடுகின்றேன்

எனக்கான நூற்றியோராவது இரவையும்
இந்த மரமே சுமக்கின்றது

1 comments:

leo சொன்னது…

good.

http://leo-malar.blogspot.com/2011/12/04.html