19 ஜூலை, 2008

என் திசைவழியில் என்னை யாரோ அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்

சித்தாந்தன்

.............................................................

காலைப் பனிப்புகையடர்ந்த
இரண்டு உருவங்களுக்குள்
கூறுபட்டுக்கிடந்த இதயத்தசையை
காதலின் மொச்சை மூடிக்கிடந்தது

புருவங்களில் விழியேறி
கண்கள் திரவங்களாய் உருண்டன
ஆழ்நதியோடித்திரும்பலில்
காத்திருந்தன மண்பொம்மைகள்

அந்தமற்று வரிகிற அதட்டுச் சிரிப்புகளுக்குள்
அழுந்திப்போய்விடுகிறது குழந்தைப்புன்னகை

மிஞ்சியிருக்கும் வலியை
தவிர்த்துவிட முடிவதில்லை
நீ பசியாறும் இலையோர மடிப்புக்களில்
எனது இரத்தத்தை மீதமாக்கிவிட்டு
நான் உறங்கப்போகிறேன்
பொம்மை வழிகளை மூடிக்கொண்டு

எனக்குத்தெரியும்
நீதான் என்னை
அவதானித்துக்கொண்டிருக்கிறாய்

13 ஜூலை, 2008

கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

சித்தாந்தன்
............................................................................

விடை பெறுதலின் அவசரத்தில்
கைமறதியாய் எடுத்துவந்த
உனது மூக்குக்கண்ணாடி
சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை

இன்றைய இரவை
உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன்
இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய்
சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே
வால் குழைந்து கால்களை நக்கும்
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ
எத்தணித்து தோற்றபடியிருப்பாயா
செல்லமகளின் குறும்புத்தனங்களை
ரசிக்கமுடியாப் பொழுதுகளை நொந்து கொள்வாயா

தூக்கத்தின் இருட்டுக்கும்
பொழுதின் இருளுக்கும்
வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன்
குழந்தையின் கன்னங்களில்
இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன
இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன

ஒளிநிரம்பிய அறையிலிருந்துகொண்டு
புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன்
சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி
ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன்

கைத்தடியில்லாத இந்த இரவுக்கு
தெருக்களுமில்லை

நண்ப,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன்
உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு
எனது பகலை என்னிடமிருந்து பெறுவதற்கு

[ரமேஸிற்கு] 22.09.2007

06 ஜூலை, 2008

கனவினது உயிர்முகம்

சித்தாந்தன்
----------------------------------------------------------------------------------

திரும்பியே வராத ஒரு இரவினது
கனவின்
குளம்பொலியை கேட்கநேர்கிறது

மனிதர்களின் புன்னகை சுடர்ந்த
அந்தக்கனவில்
நீயும் நானும் பேசினோம்
எமக்கென்ற நிலம்
வீடு
நிலவின் ஒளிபடர்ந்த முற்றம்
எல்லாமே இருந்தன

காலத்தின் வலையிலிருந்து
தப்பித்துக்கொண்டிருக்கிற
அந்த அழகிய கனவில்தான்
நீயும் நானும்
ஓவியங்களாக வாழமுடிந்தது

தசையும் ரணமும்
குருதியும் இல்லாத
கனவின் உணர் ஓரங்களில்


யுத்தம் பொய்த்துப்போனதென்பது
விசித்திரமானதுதான்.
----------------------------------------------------------------------------------------------

தணற்காலம்

சித்தாந்தன்
------------------------------------------------------------------------
நகரத்திலிருந்து எடுத்துச்செல்வதற்கு
என்ன இருக்கிறது

வருஸாந்திரங்களின் மாயவிழிகளிடை
புரளும் வர்ணங்களின்
அந்தகார ஒலியில்
மூச்சுத்திணறகிடக்கின்ற சூரியனின்
ஓளியலைகளை
விழுங்கித்தொலைத்திருக்கிறது நகரம்

இந்த நகரத்திலிருந்து
எதை எடுத்துச்செல்லமுடியும்

இலைக்கணுக்களில் தெறித்த
மரங்களின் கனவுகளையும்
காற்றில் அவிழ்ந்து அலைகிற
பறவைகளின் குரல்களையும்
வழிதவறிச்சென்ற மேய்ப்பர்கள்
அள்ளிப்போய்விட்டனர்
தெருக்களெங்கும்
அவர்களின் வீரச்சொற்களும்
இசைமுறிந்த பாடல்களும் ஏராளம்

இந்த நாற்றச்சகதியிடை
எப்படி வாழ முடியும் அமைதியாய்

நகரத்தில் வாழுகிற
ஒவ்வொரு மனிதனின் தலையின் மேலும்
சுருக்குக் கயிறுகள் தொங்குகின்றன
தூக்கம்
துர்க்கனவுகள் மிக்கது
சில்வண்டின் ஒலியில் கூட
வன்மம் எரிவதான
சலனம் நிரம்பிய இரவுகள்

நகரத்தை தூங்க வைப்பதற்கு
மௌனப்பாட்டுக்களை இசைப்பவர்களே
மனிதர்களின் தூக்கத்தையும்
இரவுகளில் களவாடிச் செல்கின்றனர்

நகரம்
ரகசியத்தீயில் மிதக்கிறது
பூக்களைச் சாபமிட்டு
தீ வளர்க்கும் மகாயாகத்தை
தீ வைத்திருப்போர் செய்கிறார்கள்
ரகசியத் தீயில்
வீடுகளுக்குள் புழுக்கமெடுக்கிறது
வெம்மை வியர்வை
மனங்களுக்குள் வழிகிறது

தீயின் பல முகங்களிலிருந்தும்
பாழடைந்த ஒரு நகரத்தின்
தடயங்களை வரைகிறார்கள்
தீ வளர்ப்போர்

அவர்களிடம் அழிவிலிருந்து பெருகும்
இசைச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் கொடியவை
குழந்தைகளின் பூக்களை பறித்துவிட்டு
எரியும் கனவுகளை வளர்த்துச் செல்லும்
சொற்கள்
தணற்காலச் சொற்கள்

சிலுவைகளால் நிரம்பிய நகரம்
தனது
பூர்வீககாலப் பெருமையின் பாடலை
அவலக்குரலில் பாடிக்கொண்டிருக்கிறது
நகரத்தின் மனிதர்களுக்கு
பாடல் கேட்பதேயில்லை
தீ பற்றிய ரகஸியம்
அவர்களின் காதுகளை அடைத்துவிட்டிருக்கிறது

மனிதர்கள் மனிதர்கள்
காலத்தை உறங்க வைத்துக்கொண்டு
விழிகள் முட்டிய பயங்களோடு
இரவுகளை கனவுகளால்
தூங்கும் மனிதர்கள்
தூங்கும் மனிதர்கள்

காலப்பெருவெளியில்
நிழல்களில் தீப்பிடித்து அவலமாகிப்போகிற
மனிதர்களை
யார் மன்னிக்க முடியும்

அவர்கள் புலம்பினார்கள்
தங்கள் கனவாயிருந்த பறவையின் நிழலில்
தீயின் நிழல்கள் உறுத்தக்கிடப்பதாகவும்
பறவைக்கனவை
அகாலத்தீ அள்ளி வைத்திருப்பதை
தங்கள் சந்ததியால் தாங்கமுடியுமா என்றும்

நான் நகரத்து மனிதர்களின்
பறவைக்கனவை
எடுத்துச் செல்கிறேன்

மகா காலத்தின்
அற்ப மனிதர்களிடமிருந்தும்
நாற்றமெடுக்கும் நகரத்திலிருந்தும்
அதை எடுத்துச் செல்கிறேன்
-----------------------------------------------------------------
2002