13 ஜூலை, 2008

கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

சித்தாந்தன்
............................................................................

விடை பெறுதலின் அவசரத்தில்
கைமறதியாய் எடுத்துவந்த
உனது மூக்குக்கண்ணாடி
சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை

இன்றைய இரவை
உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன்
இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய்
சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே
வால் குழைந்து கால்களை நக்கும்
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ
எத்தணித்து தோற்றபடியிருப்பாயா
செல்லமகளின் குறும்புத்தனங்களை
ரசிக்கமுடியாப் பொழுதுகளை நொந்து கொள்வாயா

தூக்கத்தின் இருட்டுக்கும்
பொழுதின் இருளுக்கும்
வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன்
குழந்தையின் கன்னங்களில்
இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன
இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன

ஒளிநிரம்பிய அறையிலிருந்துகொண்டு
புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன்
சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி
ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன்

கைத்தடியில்லாத இந்த இரவுக்கு
தெருக்களுமில்லை

நண்ப,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன்
உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு
எனது பகலை என்னிடமிருந்து பெறுவதற்கு

[ரமேஸிற்கு] 22.09.2007