29 ஜனவரி, 2010

சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்

சித்தாந்தன்
.........................................................
ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி


துவைத்துக் காயவிட்ட சட்டைப் பையினுள்
நனைந்திருந்த கடதாசித்துண்டில்
எவனோ ஒருவனின்
மரணம் பற்றிய வாக்குமூலம் எழுதப்பட்டிருந்தது

காலையில் புறப்பட்டு
மாலையில் என் பிணத்தை நானே காவியபடி
வீடு திரும்புகிறேன்

எதிர்பாராத யாரோ ஒருவனின் வெறித்த பார்வையில்
நள்ளிரவு நாய்களின் குரைப்பில்
நிச்சயிக்க முடியாத் தருணத்தில்
ஏதோ ஒன்று உடைந்து சிதறுகையில்
உறக்கத்தில் யாரேனும் தட்டி எழுப்புகையில்
பலமுறையும்
நான் கொல்லப்பட்டு விடுகிறேன்

மரணங்கள் அச்சிடப்பட்ட பத்திரிகைகளில்
இரத்தத்தின் மணம் வீசுகிறது

எல்லோருடைய சொற்களுக்குள்ளும்
ஓளிந்துகிடக்கிறது மரணம்
எனது சொற்களில்
எனக்கான மரணம் சொருகப்பட்டிருக்கிறது

இப்போதும்
நான் படித்து மூடிவைத்த
புத்தகத்திலிருந்து
மரணத்தின் மொச்சை அடிக்கிறது