04 பிப்ரவரி, 2010

பெயரும் விம்பவெளி

சித்தாந்தன்
...............................................................
எனது கனவை
ஒரு பூச்சியின் சிறகிலிருந்து அவிழ்க்கின்றேன்
யார்யாரினதோ வீடுகளுக்குள்ளிருந்து
பெயர்ந்து வந்த நிலைக்கண்ணாடிகள் சூழ்ந்த
இந்த மாயவெளியில்
சிதிலமான என் மனதின் விம்பத்தை
கோடிமுறையும் கண்டு சலிப்படைகின்றேன்

பிறாண்டும் நகங்களோடுஒரு காலம்
என் கன்னத்தில் முத்தமென
பொய்யுருக்கொண்டு சிதறுகிறது
காயங்களின் மீது பெய்யும் மழையோ
வலியாய்ப் பெருகியோடுகிறது

கண்ணாடி வெளி முழுவதிலும்
காற்றின்; அலையும் சுவடுகள்

நிலைமறுக்கும் சகுணங்களை நிகழ்த்தி
விலகும் எல்லா முகங்களையும் கடந்து
வீடு திரும்பிப் படுக்கையில் சரியும் தருணம்
ஆறிப்போன மழையின் தூறலாய்
காதலின் குளிர்மை

கதவண்டை அசையும் நிழலுருக்களில்
குரோதங்களின் மனப்பிரதிமைகள்

எனதறையின் நிலைக்கண்ணாடிக்கும்
எனக்குமிடையில்
பெயரறியாத மனிதர்களின் மனச்சிதறல்கள்
பல்லுருவாகி விரிகையில்
கண்ணாடியிலிருந்து இறங்கி
வெளியேறத் தொடங்கிவிடும் என் விம்பம்