19 மே, 2011

துர்நிமித்தம்-1

சித்தாந்தன்

இந்த இரவை
பனியின் திவலைகளால் மூடுகின்றேன்.
சாத்தப்படாத யன்னலுக்கு அப்பால்
தொலைவில் மங்கும் வெளிச்சத்தில்
கருகி மணக்கிறது யாருடையதோவான தேகங்கள்

இலைகளையுண்ணும் இரவு இன்னும்
நட்சத்திர இழைகளில்த்தான் தொங்குகிறது

பின்னிரவின் சூட்சுமம் புரியாத பைத்தியக்காரன்
இரவைக் கவிதையென கத்தித் திரிகின்றான்

தேகங்கள் எரிந்து கருகட்டும்

யன்னலின் அண்டை வந்து
கம்பிகளில் மோதித் திரும்புகின்ற காற்றுக்கு
காவித்திரிய நறுமணம் இல்லாத கவலை

புணர் ஜென்மங்களை நினைவுறுத்தும் படியாக
சாவின் நிழல் பரத்தியபடி மேலெழுகிறது சூரியன்
அதே திமிர்த்தனத்துடன்.

காலங்கள் நெக்கியுதிர்ந்த யன்னலருகே
யாருமேயில்லை
காற்றுக் கூட.