14 மே, 2011

சாவுகளால் நிரம்பும் வெளி

சித்தாந்தன்

மரங்களில் பூத்திருக்கின்றன
பிணப் பூக்கள்.
வெளிவந்த அறிக்கைகளின் பின்னால்
தேகத்தை பெற்றோலுக்கிரையாக்கியவனின் கதறல்
ஓலிக்கிறது.

நீள்வானத்தின் பெருநட்சத்திரங்கள் உடைந்து சிதறியபின்
தியாகங்களைக் கூவி விற்பவர்கள்
தெருக்களில் சாவகாசமாய் அலைகிறார்கள்.

சித்தம் சிதறிய தாயே சொல்
உன் வானம் பற்றிய கனவில்
இன்னும் நீலம் உலராமல் இருக்கின்றதா?

சாவுகளின் சாகசத் தனங்களை
அவற்றின் நித்தியத்தை
அறைந்தவர்களின் குரல்களின் பின்னால் மேலெழுந்த
புழுதியில்
ஏப்போதாவது கண்டிருக்கிறாயா?
உன் பாலகனின் பிஞ்சு முகத்தை.

இன்றோ
இன்னொரு பாலகன்
தன்னுடலைத் தீயுண்ணக் கொடுத்துத் தியாகியாகிவிட்டான்

கல்லறைகளைக் கிளறி
அவற்றின்மேலாய்
கட்டிடங்கள் வளர்ந்துவிட்டன.

காற்றைக் கைகளால் அளையும் குழந்தைகள்
இன்று அதன் மௌனத்தைக் கண்டு கதறுகிறார்கள்.

இன்னும் இன்னுமாக
தியாகங்களால் சாவின் வெற்றிடத்தை நிரப்ப
காத்திருக்கிறார்கள் பாலகர்கள்