15 ஆகஸ்ட், 2011

ஆளற்றுத் தொங்கும் சிலுவை

சித்தாந்தன்

பௌர்னமிக்கு அடுத்தநாள்
தேவாலயத்தின் சிலுவை
வெறுமையாகத் தொங்கிக்கொண்டிருந்தது

கர்த்தரைக் காணவில்லை

எல்லோரும் கதறியழுதவாறிருந்தார்கள்
பங்குத் தந்தை தேவகீதங்களைக் கூவியவாறு
கடவுளை அழைத்தபடியிருந்தார்.

முழந்தாளிட்ட பெண்கள்
மரியைப் போலவே கதறியழுதனர்

முதிய பெண்கள் தேவாலய வாசலில்
குந்தியிருந்து ஓப்பாரி சொல்லினர்

ஆண்கள் கூடி
துயரத்தை சொல்லி முறையிட இருந்த ஒருவரும்
தொலைந்து போய்விட்டார் என பேசிக்கொண்டிருந்தனர்

நடந்தது யாதென யாவரும் குழம்பிக் கிடக்கையில்
ஒரு சிறுவன்தான்
உரத்துச் சொன்னான்
நள்ளிரவில் வௌ்ளைவானின் உறுமல் கேட்டதாய்