21 ஆகஸ்ட், 2011

கடல்வெளி



தீரா அலையெழுப்புகிறது கடல்வெளி

சாத்தானும் கடவுளும்
அறியாத் தொலைவில் செல்கிறது
திசையற்றவர்களின் படகு

கடவுளே சாத்தானாகவும்
சாத்தானே கடவுளாகவும்
உருமாறிய தருணங்களை
அலையுமிழும் கடல்
அறிந்திருக்க நியாயமில்லை

தன் மடிநிறைந்திருக்கும்
குழந்தைகளை அது
அழைத்திருக்கவுமில்லை

அறியா முகங்ளை
அறியா தரையை
சென்றடையும் ஒரு நாளில்
அது தன் வயிற்றிலிருந்து
உதிர்க்கக் கூடும்
எண்ணற்ற பிணங்களை

சாத்தானோ கடவுளோ
கடலைத்தான் நம்பியிருக்கின்றனர்

கடலே சாத்தான்
கடலே கடவுள்

கடவுளும் சாத்தானும் உறங்கிய பின்னர்
கடலே காவு கொள்கிறது
கைவிடப்பட்டவர்களை

கடவுளோ சாத்தானோ
இல்லா பிரபஞ்ச வெளியை
கடல் வெளியே உட்கொள்ளும்

கவனம்
கடவுளும் சாத்தானும்
சபிக்கப்பட்டவர்களும்