14 மார்ச், 2012

லிஸா


நேபாள மூலம் - கீதா திரிபதி
ஆங்கிலத்தில் - மானு மஞ்ஜில்
தமிழில்-
சித்தாந்தன்
...............................

அழகான ஒருநாள்
லிஸா என்னைக் கேட்டிருந்தாள்
“யார் நல்லவர்
அம்மாவா? அப்பாவா?”
அவளின் முகத்தைக் கூர்ந்தபின்
நான் சொல்லியிருந்தேன்
“இருவரும் நல்லவர்கள்”

அவளைக் காண வீட்டுக்கு வந்திருந்த
ஒருசோடி மாடப் புறாக்களை நம்பியதைப் போலவே
அந்த நாளில்
நான் சொன்னதையும்
அப்படியே நம்பியிருந்தாள்

பிறகொருநாள்
நான் அவளுக்குக் கற்பித்தேன்
“வாழ்க்கை சூரியனும் நிழலும் சேர்ந்ததாயிருக்கிறது”

ஏதொவொரு தகிக்கும் நாளில்
லிஸா
பாலைவன அனலில் மூச்சுத் திணறியபடி
குளிர்ந்த நிழலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
அவளது தந்தை
அவளுக்காக நிழலைக் கொணராது
சூரியனோடு வீடு வந்து சேர்ந்திருந்தார்

ஏதோவொரு குளிர்நாளில்
குளிர்ந்த காற்றில் விறைத்தவளாய்
கதகதப்பான சூரியனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
அவளது தாய்
அவளுக்காக சூரியனைக் கொணராது
நிழலுடன் வந்திருந்தாள்

ஒருபோதும் என்னிடமிருந்து
சரியான பதிலைப் பெறாத அவள்
கேள்விகள் பளபளக்கும் தன் கண்களால்
என்னை ஒரு பார்வை பார்த்தாள்

எப்பொழுதுமே என்னைச் சந்தேகிக்கும்
அவளை வியந்தேன்
நான் ஒரு ஆசிரியர்
அவளுக்குக் கற்பித்துக்கொண்டுமிருக்கிறேன்