02 ஜூன், 2012

நாவுலர்ந்து போன மழை




சித்தாந்தன்

கொடு மழையை
கொத்திச் செல்கிறது காக்கை

தன் அலகின் கருமை தடவிய
வானத்தில் அது பறந்தபடியிருக்கிறது

காடுகளின் நாவறண்ட பொழுதில்
கொத்திச் சென்ற மழையினை
பு+மியின் ஆழத்து நீர்ச்சுனைகளுக்குள்
ஒளித்து வைக்கிறது

தாகங்கள் திறந்த காடுகளில்
உலர்ந்த நாவுகளை வானுக்குக் காட்டி
காத்திருக்கின்றன பட்ஷிகளும் மிருகங்களும்

வெறும் பஞ்சுக் குவியல்களான மேகங்கள்
வான் முழுமையும் படிந்திருக்கின்றன

காகம்
தாகங்கள் வற்றிப் போகும்படியாக
தன் இறக்கைகளால் மூட்டுகிறது
பெருநெருப்பை

பொசுங்கிய காட்டின் சாம்பரில்
புதையுண்டு போகின்றன எண்ணற்ற நாவுகள்

மாயங்காட்டி
வான் முகட்டில் வட்டமிடும் காகம்
மீண்டும் கொணர்ந்திருக்கிறது மழையை
நாவுலர்ந்து போன மழையை

கருமை மூடிய வானம்
நனைகிறது வெந்நெருப்பின் மழையில்