22 ஜூன், 2008

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

சித்தாந்தன்
---------------------------------------------------------


அழகிய எமது நகரத்தில்
பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில்
அவனது ஒளிரும் கண்களில்
உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள்

பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பிடாரன் முதலில் வாழ்ந்தானென
கதைகள் வளர்ந்தென ஊர்கள் முழுவதும்

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்

எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது

எனது அழகிய குடிசையில்
ஒரு முறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்

சபிக்கப்பட்ட காலங்களில்
நான் வாழ்ந்தேன்
நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக
எனக்குள் பெருகியபடியிருந்தது

பிறகு வந்த நாட்களிலெல்லாம்
பிடாரனின் புதல்வர்களின்
காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்துகிடந்தன
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன

பிடாரன் நகரம் முழுவதும்
சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு
துர்நெடியோடிருந்தது

அவனின் வாசகங்களாக
“இந்தப் பூமியில் தானும்
தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல
துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்”
எழுதப்பட்டிருந்தது

சனங்கள் முதலில் நம்பவில்லை
நகரில் பிணங்கள் திடீர் திடீரென முளைத்தபோது
அதிர்ந்து போயினர்

பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை
"பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை"
கிழித்தெறிந்தனர்

மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்

பிடாரனின்
திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து
நான் தப்பிச்செல்கிறேன்
---------------------------------------------

2 comments:

M.Rishan Shareef சொன்னது…

உங்கள் கவிதைகளனைத்தையும் பார்த்தேன் சித்தாந்தன்.
மிக அருமையாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே :)

ஃபஹீமாஜஹான் சொன்னது…

அன்பின் சித்தாந்தன்
வலைப்பதிவினூடாக உங்களைக் காண்பது மகிழ்ச்சி தருகிறது. அங்குள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இணையத்துக்கு வருவதில் உள்ள சிரமங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்.

இந்தக் கவிதையின் ஆரம்ப வரிகள் தொட்டு இறுதி வரிகள் வரை ஈர்ப்புடன் திகழ்கின்றன. கவிதை உணர்த்தும் பொருளை வாசகர்கள் தத்தமது கோணங்களில் பார்ந்த பொழுதும் அது சொல்ல வரும் உண்மை ஒன்றுதான்

"அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்"

தொடர்ந்து எழுதுங்கள்
காத்திருக்கிறோம்