06 செப்டம்பர், 2008

பாம்புகள் உட்புகும் கனவு

சித்தாந்தன்
.....................................................................................................
பாம்புகள் நுழைந்த
கண்ணாடி அறையுள்ளிருந்து
அவசரமாக
என் பிம்பங்களைப் பிடுங்கி எடுத்தேன்

காற்றின் விஸ்தீரணம் மீது கவியும்
துர்மணத்துடன்தான்
பாம்புகள் நுழையத்தொடங்குகின்றன

என் குரல் வழியே ஆரவாரப்பட
எதுவுமே இல்லை
இரட்டை நாக்குடன்
மேனியிலூறிய பாம்பை
கனவுகளின் இடுக்குகளினூடாக
உதறிவிட்டு திரும்பி நடக்க முடிகிறது
கனவினது ஆழ் உறக்கத்திற்குள்

பறக்கும் பாம்பு
கண்ணாடி அறையினுள்
தனது இறக்கைகளை உதிர்க்கிறது
நான்
கனவுக்கு வெளியே
அல்லது
கண்ணாடி அறைக்குப் பின்னால்
இருந்து அவதானிக்கின்றேன்
பாம்புகளுக்குப் பற்களிலிலை
உதிர்ந்த இறக்கைகளில்
பற்கள் முளைத்திருக்கின்றன

நெடு நாட்களாய்
எனது உறக்கத்தைக் கலைத்து
இருளில் மூழ்கடித்துப் பயமூட்டும்
ஒவ்வொரு பாம்புக்கும்
எனது முகம் மட்டும்
எப்படி வாய்த்திருக்கிறது

எனது குரலும்
கண்களினது ஒளியும்
வற்றிக் காயத்தொடங்குகையில்
இரவுகளின் கரிய தடங்களினூடு
உட்புகுகிறேன் கண்ணாடி அறையுள்
எனது பிம்பங்களுக்கு
பாம்புகள் படம் வரித்துக் குடைபிடிக்கின்றன
இப்போது
பாம்புகளின் குடையின் கீழ்
ஒரு பாம்பாய் வாழ நேர்கிறது