11 ஜூலை, 2010

மண்சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறாய்


சித்தாந்தன்

பிரதிபலிப்புக்களின் கூடமான கலைவெளியில்
இப்போது நீ
யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய்

சிறகுடைந்த தும்பியொன்றின்
அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய்
இன்னும் கேட்கின்றது

நீ மண்சிலைகளை
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில்
பிசுபிசுக்கும் இரத்தம்
எனது மண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சுகின்றேன்

சற்றும் அயராத உனதுடலில்
வழியும் வியர்வை
ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது

மங்கியுதிரும் பொழுதில்
நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது
பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது
ஆனாலும்
கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்

கால்களின் கீழ்
உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை
அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன்
செய்யத் தொடங்கியிருக்கின்றான்
யாரோ எவரினதோ பிரதிபலிப்பான
மண்சிலையை