10 ஆகஸ்ட், 2010

ஓளிமங்கும் வட்டங்கள்

சித்தாந்தன்

சலனம் முற்றிய மனிதமுகங்கள்
இன்றைய நாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும்
கனவுகளின் இழைகளில் தொங்கும்
சுடரின் திரியை
இழுத்துச் சென்று கொத்துகிறது
ஆட்காட்டிப் பறவை

இரவைப் புணர்ந்த குளிரை
கடித்துக் குதறுகின்றன நாய்கள்

வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய்
சாவைத் தாங்கிச் சலிப்புற்றவர்களின்
முகங்களின் பின்
ஒளிமங்கும் வட்டங்கள் சூழல்கின்றன

எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து
வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக் காற்று

இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத்
திரும்பும் மனிதர்கள்
உரசி வீசிய தீக்குச்சிகளிருந்து
புகை கருகி எழுகிறது
உக்கிய சரிரங்களின் மணம்

நினைவுகளைத் திருகி
எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன
எண்ணற்ற முகங்கள்

எங்கோ
யாருடையதோ அடிவயிற்றில்
பற்றியெரிகிறது நெருப்பு