27 ஆகஸ்ட், 2010

துக்கத்தைச் சொல்பவனின் கவிதை

சித்தாந்தன்

இப்போது நான் விழித்திருக்கின்றேன்
என் பிடுங்கப்பட்ட மூளையில் விசித்திரமான
முட்செடி நாட்டப்பட்டிருக்கிறது
தயை கூர்ந்து என்னைக் கடப்பவர்கள் அனுதாபம் கொள்ளாதீர்கள்
கொலைக்கருவிகளை விடவும் கூரியன
உங்கள் பார்வைகள்
நீங்களே நிதானிக்க முடியாத இரவை உங்களுக்கு தந்துவிட
விரும்புகின்றேன்
மற்றும் சிறியதான ஒரு துக்கத்தையும் தூக்கத்தையும்

இளமையின் கருகியமணம்
என் பாலிய சித்திரங்களின் மீது
அடர்ந்த வர்ணமாகச் சிதறிக்கிடக்கிறது
புணர்ச்சியின் பின் களற்றி உலரவிட்ட ஆடையாய்
தொங்கவிடப்பட்டிருக்கிறேன் எல்லோர் முன்னும்

மழையின் ஈரித்த திவலைகள்
என் கனவுகளின் சூட்சும அடுக்குகளில் தேங்குகின்றன

நான் ஒரு விறைத்த ஆண்குறி
ஒரு பிளந்த பெண்குறி
இதனைவிட
ஒரு துப்பாக்கி
ஒரு தூக்குக் கயிறு

நீங்கள் கொலைகளைப் பிரகடணப்படுத்துகையில்
நான் கொலையாளியாகவும்
கொலையுண்டவனாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றேன்
இதற்கு மேல் ஒன்றுமில்லை சொல்வதற்கு
வனத்திலிலிருந்து வழி தவறிய விலங்கிடம்
மேலும் சொல்வதற்கு என்னதான் இருக்க முடியும்