03 ஆகஸ்ட், 2010

வலியுணர்தல் -2

சித்தாந்தன்

மீந்திருக்கும் சொற்களையும்
மௌனம் தின்று தொலைக்கிறது
ஈரம் கசியும் பால் வெளியில்
இன்னும் பறந்தபடியிருக்கின்றன
இரண்டு பட்டங்கள்
காற்றின் அசைவுகளில் சூழன்று
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றையொன்று முத்தமிடுகின்றன

பாலையாய் எரிகிறது பகல்
புறக்கணிப்பின் உச்சப் பொழுதுகளில்
மணிக்கட்டில் ஊருகிற எறும்பைத்
தட்டுவதைப் போலாகிறது அன்பூறும் கணங்கள்
மோகித்துச் சுடரும் வானத்தின் கீழ்
நிலவைப் புசிக்கிறது இரவு

மூச்சின் அனல் எறிக்கும் தூரம் கூட இல்லை
பாதைகள் தூர்ந்து போயின
சுனைகள் வற்றிவிட்டன
பிணைப்பு நூலின் கடைசி இழையில்
விரல்கள் ஊசலிடுகின்றன
எது மீதமாயிருக்கிறது
நீயும் நானும் பருக