10 ஜூலை, 2024

ஆம்பி

சித்தாந்தன்
எனது சிறுபராயத்தில் என் வயதை ஒத்த எல்லோருக்கும் காலிங்கன்தான் கதாநாயகன். நாங்கள் காலிங்கனை கண்டதன் பிறகு சினிமாப்பட கதாநாயகர்களை இரசிப்பதையும் அவர்கள் பற்றிப் பேசுவதையும் தவிர்த்துக்கொண்டோம் என்றால் பாருங்கள். எங்கள் பேச்சு முழுவதிலும் காலிங்கன்தான் நிரம்பிக்கிடந்தான். நாங்கள் ஒவ்வொருவரும் காலிங்கன் பற்றி பல கதைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்தோம். கதைகளில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய கதைகள்தான். ஆனாலும் ஒருவர் கூறிய கதையை பொய் என்று மற்றவர்கள் நிராகரிக்காமலிருப்பதை ஒரு நாகரிகமாகக் கொண்டிருந்தோம். காலிங்கனிடம் இருந்த வீணை பற்றி நான் சொன்ன கதையை எல்லோரும் ஆவலாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

 “காலிங்கனின் வீணை சுவர்க்கத்தின் கற்பக தருவினால் செய்யப்பட்டது என்றும், அதன் நரம்புகள் காற்றை இழை பிரித்து செய்யப்பட்டவை என்றும், காலிங்கன் வீணையின் நரம்புகளிலிருந்து பிறக்கும் இசைதான் சூரியனின் ஏழு நிறங்களாக ஒளிர்கின்றன என்றும். இரவெல்லாம் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும் அவன், அதிகாலையில் தன் வீணையை ஒரு மரம்போலாக்கி எங்காவது நாட்டிவிட்டுச் செல்வதாகவும்” நான் கதையளந்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் சுவாரசியம் குன்றாமல் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். சில நாட்கள், காலிங்கன் தன் வீணையை மரமாக்கி எங்கு நட்டுவிட்டுச் சென்றிருக்கின்றான் என்று நாங்கள் தேடியதுமுண்டு. நண்பர்களில் யாராவது ஒருவர் ஏதாவது மரமொன்றைக் காட்டி இதுதான் காலிங்கனின் வீணை மரம் என்று சொல்லிக்கொள்வதுமுண்டு. நானும் அவர்களின் சொல்லை தலையசைத்து ஆமோதித்துவிடுவேன். நான் உருவாக்கிய கதை பொய்த்துப்போய்விடக்கூடாது என்பதில் அவதானமாக இருந்தேன். இப்படியாக எண்ணிறைந்த கதைகளை காலிங்கனைச் சுற்றிப் பரவவிட்டிருந்தோம். 

 நள்ளிரவு வேளைகளில்த்தான் காலிங்கன் தனது விணையிலிருந்து இசையை மீட்டத்தொடங்குவான். ஊரில் எல்லோரும் உறங்கப்போயிருந்தாலும் சிறுவர்களாகிய நாங்கள், அவனது இசையின் ஈர்ப்பில் மகுடிக்கு மயங்கும் பாம்புகள் போலாகி இசையின் வழி அவனது இருப்பிடத்தை அடைவோம்.

 காலிங்கனின் வீடு, கனத்த இருளில் சரித்திரகாலத்தின் குகை ஓவியம் போலக் காட்சியளிக்கும். சுற்றிலும் அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவில் அது இருந்தது. அதை வீடு என்பதைவிட குடில் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் நேர்த்தியாக கிடுகுகளால் வேய்ந்து, அரைக் குந்துவைத்து பனம் மட்டையால் வசிச்சுக்கட்டியிருக்கும். அது ஒருவர் நின்றுகொள்ளக்கூடிய உயரத்தையும் ஒருவர் தன் கைகளை நீட்டிய அளவுக்கான நீளத்தையும் நீட்டி நிமிர்ந்து படுக்கத் தக்கதான அகலத்தையும் கொண்டிருக்கும். அதற்குள்தான் அவனது வீணை, உடைகள், சில புத்தகங்கள் என அவனது உடைமைகள் இருக்கும். 

 அவனது குடிலின் அருகில்; ஓங்கி கிளைகளைப் பரப்பி வளர்ந்திருக்கும் ஆலமரத்தின் விழுதுகள், இராட்சசனின் தலை முடிகள் போல காற்றில் அசைந்தபடியிருக்கும. அதனது கிளைகள், அவன் எங்களை கவர்ந்து கொள்ள நீட்டும் கைவிரல்களாய் விரிந்து கிடக்கும். சிறுவர்களாகிய எங்களுக்கு அவை துணுக்கை ஏற்படுத்தினாலும் காலிங்கனின் இசை எங்களை ஆதரவாக வருடும் விரல்களாகி அச்சத்தைக் களையும். பகல் வேளைகளில் நாங்கள் விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவதற்காக ஆலமரத்துக்குச் செல்வதுண்டு. அப்போது காலிங்கனின் குடில் மட்டும் வெறுமையாகக் கிடக்கும். அதற்குள் எவ்விதமான பொருட்களுமே இருக்காது. ஒரு மனிதன் வாழ்கின்றான் என்பதற்கான எந்த அடையாளங்களும் அற்று, குஞ்சுகளோடு பறந்துவிட்ட பறவையின் கூடுபோல வெறுமையால் அடைந்துகிடக்கும். 

0 சிறுவர்களாகிய நாங்கள்; நள்ளிரவுகளில் காலிங்கனின் வீட்டைச் சுற்றி சூழ்ந்து நிற்போம். அவனது பார்வை எங்களிற் படாதவாறு மரங்களுக்குப் பின்னாலும் புதர்களுக்குள்ளும் எங்களை மறைத்துக்கொள்வோம்;. மறைந்து நின்று அவனைப் பார்ப்பது அலாதியான சுவையுடைய பானத்தை வீட்டில் யாருக்குந் தெரியமாமல் மறைந்திருந்து பருகுவது போன்றிருக்கும். 

 அவனது வீட்டின் முன்புறத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்திருப்பான். அந்த விளக்கின் ஒளி அவனது முகத்தை துல்லியமாகப் பார்க்க எங்களுக்குப் போதுமானதாக இருக்கும். அந்த மஞ்சள் ஒளியில் இளங்காலைச் சூரியனாய் அவன் முகம் பிரகாசிக்கும். நாங்கள் அவனையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். அவனது விரல்கள் வீணையின் நரம்புகளில் நர்த்தகியைப் போல் ஆடிக்கொண்டிருக்கும். அவன் உச்சமாகத் தவளவிடும் தன் இசையை திடீரென நிறுத்திக்கொள்கையில், அந்த இரவே உடைந்து சிதறுவதைப் போலிருக்கும். காலிங்கன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மதுக்குவளையை எடுத்து மஞ்சள் நிற மதுவை கோப்பையில் நிரப்புவான். அதை தன் உதட்டில் பொருத்தி உறுஞ்சிக்கொண்டிருப்பான். விளக்கின் ஒளி கண்ணாடிக் கோப்பையில் பட்டுத்தெறிக்கையில் அது மாயத்தனமான கிளர்ச்சியை என் இருதயத்துள் இட்டு நிரப்பும். 

 மதுவின் மயக்கத்தில் அவன் கண்கள் பூஞ்சி தலை தொங்க மீண்டும் வீணையின் நரம்புகளை தன் விரல்களால் வருடத்தொடங்குவான். அந்த இசைதான் இந்த உலகத்தையே புலர்விக்கும் இசையாக இருக்கும் என நான் நம்பத்தொடங்கினேன். அவன் அதி காலைவரை தன் இசையைத் ததும்பவிட்டுக்கொண்டே இருப்பான். 

பகற்பொழுதுகளில் காலிங்கன்; எதிர்பாராத விதமாகத் தென்படுவதுண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கு பகலில் அவனைக் காண்பது பெரும் பாக்கியமாக இருந்தது. அப்போதெல்லாம் எங்கள் ஊரின் வீதிகள் எல்லாம் புதுவிதமான கிளர்ச்சிகொண்டிருப்பதாகத் தெரியும். பெண்கள் வேலிகளுக்குப் பின்னால் நின்று அவனை இரகசியமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திரையில் தென்படும் சினிமா நட்சத்திரம் போல அவன் மிடுக்காக நடந்து செல்லுவான். அவனது முதுகில் கனமான தோற்பை ஒன்று தொங்கிக்கொண்டிருக்கும். அதற்குள் என்ன வைத்திருக்கின்றானோ என தெரியாது. சில வேளைகளில் தன் மதுக்குவiளையையும் புத்தகங்களையும் அதனுள் வைத்திருக்கக்கூடும். சூனியக் காரனின் மந்திரக்கோலைப் போல அது எப்போதும் அவனோடேயே இருக்கும். 

 காலிங்கன் நேர்த்தியாக உடுத்தியிருப்பான். தாடியையும் மீசையையும் அழகாக ஒதுக்கியிருப்பான். காதின் கீழ்வரை கிருதா நீண்டிருக்கும். ஊதிவத்தியின் புகை நெளிவதுபோல தலைமயிர் காற்றில் அசைந்துகொண்டிருக்கும். அவன் கண்களை நான் ஒரு போதும் கூர்ந்து பார்த்ததில்லை. அவ்வளவுக்கு கண்களை கூசச்செய்யும் பிரகாசத்தோடு அவை இருக்கும். 

 காலிங்கனின் கண்கள் வசியம் நிரம்பியவை என்றும், அவன் கண்களை கூர்ந்து பார்ப்பவர்கள் காலஞ்செல்லச் செல்ல கண் பார்வை மங்கிச் செத்துப் போய்விடுவார்கள் என்றும் ஊருக்குள் ஒரு கதை உலாவிக்கொண்டும் இருந்தது. அந்தக் கதையை நாங்கள் உருவாக்கி இருக்கவில்லை என்பதால் அது எங்களை அச்சப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கதையின் உண்மை பொய் பற்றி பகுத்தறியும் அறிவும் ஆவலும் எங்களுக்கு இருந்தில்லை. பெரியவர்கள் அச்சமூட்டுவதற்காக எண்ணற்ற கதைகளைச் சிறுவர்கள் மீது திணித்திருக்கிறார்கள். அக்கதைகள் அடித்தளமற்றவை என்பதை சிறுவர்கனாகிய நான் அப்போது அறிந்திருக்கவில்லை. 

 நான் தவறுசெய்யும் போதெல்லாம் அம்மா ஒவ்வொரு கதைகளைக் கூறுவார். அந்தக் கதைகள் பெரும்பாலும் அச்சமூட்டும் கதைகளாகவே இருந்தன. அப்பா அப்படியில்லை அவருக்கு கதை சொல்ல நேரம் கூட இல்லை. அதிக கோபம் என்மீது ஏற்படும் போதெல்லாம் ஒன்று அதியுச்சமான வன்முறையைக் கையிலெடுப்பார். வீட்டுக்கு முன் வளர்ந்திருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்து பூவரசம் தடியால் சாத்துவார். அத்தோடு அப்பாவின் கோபம் முடிந்துவிடும். இரவு எதுவுமே நடக்காததைப் போல எனக்கு சோறை ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிடுவார். அப்பாவின் கடின உழைப்பு அவர் தேகம் முழுவதிலும் தெரியும். கைகள் முறுக்கேறி மல்யுத்த வீரனின் தோற்றத்தோடு இருக்கும். அப்பா பெரிதாக கதைத்துக் கொள்ளமாட்டார். அதிதமான தன் மகிழ்ச்சியை என்னைக் கட்டி அணைத்து முத்தமிடுவதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வார். அந்த வகையில் நான் என் சகோதரனை விடவும் அதிஸ்ரம் குறைந்தவன். அவன் அப்பாவிடமிருந்து அதிக முத்தங்களையும் நான் அதிக அடிகளையும் வாங்கியிருக்கிறேன். சமயங்களில் என் சகோதரன் “நீ அப்பாவிடம் எத்தனை முத்தங்கள் வாங்கியிருக்கிறாய். உன்னை விடவும் நான் எத்தனை மடங்கு பெற்றிருக்கிறேன் தெரியுமா” என்று கேட்டு ஏளனமாகப் புன்னகை செய்வான். அப்போது நான் “உன்னை விட நான்தான் அதிக அடிவாங்கியிருக்கிறேன். அந்த வகையில் என் கணக்குக்கு கிட்டக்கூட நீ வரமாட்டாய்” என்று சொல்லி அவனை எரிச்சலூட்டுவேன். 

காலிங்கனை நான் காணப்புறப்படும் ஒவ்வொரு இரவிலும் நான் கடவுளிடம்; அப்பா கண்விழித்து அருண்டு என்னை கையும் மெய்யுமாக பிடித்துவிடக்கூடாது என்று பிரார்த்தித்துக்கொள்வேன். அப்பாவுக்கு காலிங்கன் என்ற நபர் ஊரில் இருக்கிறாரா என்று தெரிந்திருக்குமோ தெரியாது. அப்பா ஊர் சோலிகளில் ஈடுபடுவதில்லை. மாலை ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். அன்று வேலைக்காகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டு தன் காரியங்களை ஆற்றத்தொடங்கிவிடுவார். அம்மாவோடுகூட அதிகம் பேசமாட்டார். அம்மாவும் அப்படித்தான் அப்பா வந்தவுடன் அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் நியமம் தவறாது செய்துகொடுப்பார். நானும் என் சகோதரனும் அப்பா வீட்டுக்குள் வந்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எமக்காக ஒதுக்கப்பட்ட மூலைகளுக்குச் சென்று படிக்கத்தொடங்குவோம். நான் பெரும்பாலும் படிப்பதாகப் பாசாங்குதான் செய்துகொண்டிருப்பேன். 

 ஊரின் மேற்குக் கரை வயல்களாலானது. ஓருநாள் மாலை நான் வயலில் விளைந்திருந்த கதிர்களை அளைந்து விளையாடிக்கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டேன். சூரியன் வானத்திலிருந்து சடுதியாக கீழிறங்கிக்கொண்டிருந்தான். நெற்கதிர்களின் மேலே மஞ்சள் பூஞ்சனை போல சூரியனின் ஓளி படர்ந்திருந்தது. வரம்பில் வெள்ளைக் குதிரையின் கடிவாளத்தை கையில் பற்றிக்கொண்டு காலிங்கன் நடந்துவந்துகொண்டிருந்தான். ஆங்கிலத் திரைப்படமொன்றின் கதாநாயகன் போல அவனது தோற்றம் இருந்தது. அவனது குதிரையின் உடல் பொன்னிறமாக சூரியனின் ஒளியில் தகதகத்தது. காலிங்கன் தன் கனக்கும் தோற்பையை குதிரையின் முதுகின் மேலே வைத்திருந்தான். குதிரை மிடுக்காக நடந்துகொண்டிருந்தது. அவன் என்னைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். அவனது பார்வை என்மீது பட்டுவிடாதா என்று நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னைப் பொருட்படுத்தவில்லை தாண்டிச் சென்றுகொண்டேயிருந்தான். 

காலிங்கன் வெள்ளைக் குதிரையோடு ஊருக்குள் வந்த செய்தியை நான் என் நண்பன் அகிலுக்கு பகிர்ந்துகொண்ட போது அவனது கண்ணகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. அவன் என்னை பொறாமையுடன் பார்த்தான். நாங்கள் அன்றிரவு காலிங்கனைக் காணுவதற்கான நேரத்தில் அவனது வெள்ளைக் குதிரையைப் பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் நள்ளிரவுக்காக காத்திருத்தோம். 

 நள்ளிரவில் மிதந்துவந்த வீணையின் ஒலியைப் பிடித்தபடி காலிங்கனின் இருப்பிடத்தை அடைந்தேன். அங்கு என் நண்பர்கள் பலரும் காத்திருந்தனர். அவர்களிடம் வெள்ளைக் குதிரை பற்றிய கதை பரவியிருந்தது. எல்லோரும் என்னை நெருங்கியவர்களாக தம் குரல்களை மந்தமாக்கி “உண்மையில் நீ குதிரையைக் கண்டாயா?” என்றார்கள். நான் அவர்களின் குரலிலும் மந்தமான குரலில் “அம்மா மீது சத்தியமாகக் கண்டனான்” என்றேன். “அப்படி என்றால் இப்ப குதிரை எங்கே?” என்று இன்னொருவன் கேட்டான். “எனக்குத் தெரியாது” என்றேன். அவர்களை என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். “நல்லா கதை விடுறாயடா” என்று ஒருமித்த குரலில் சொல்லி மந்தமாகச் சிரித்தார்கள்.

 காலிங்கன் கண்ணாடிக் குவளையில் செந்நிறமான திரவத்தை ஊற்றி வைத்திருந்தான். அவனது மங்கலான விளக்கு வழமையிலும் மங்கலாக ஒளிர்ந்தது. அவனின் கைகள் வீணையின் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்திருந்தன. இடைக்கிடை மதுவையும் பருகிக்கொண்டான். அவனது கண்கள் பூனையின் கண்களைப் போல பச்சையாக ஒளிர்ந்தன. அகில் “உந்த பச்சைக் கண்களைப் பார்க்காதையடா இரத்தம் கக்கிச் செத்துப்போய்விடுவாய்” என்ற புதுக் கதையைச் சொன்னான். நான் என் கண்களை காலிங்கனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். மனதை புதுவிதமான அச்சம் சூழ்ந்துகொண்டது. நண்பர்களின் அவமானத்தைத் தரும் வார்த்தைகளுடனும் அச்சத்தோடும் நான் அந்த இரவில் வீடு திரும்பினேன். என் கால்கள் எலியைப் பின்தொடரும் பூனையின் கால்களைப் போல மெதுவாக வீட்டினுள் நுழைந்தன. அப்பா திண்ணையில் படுத்திருந்தார். அவரின் குறட்டை ஒலி வழமையிலும் தாழ்வாகக் கேட்டது. காலிங்கனின் இசையால் வசியப்பட்ட பின் நான் வெளி விறாந்தையில்த்தான் படுக்கத்தொடங்கியிருந்தேன். அப்பா வெளித் திண்ணைக் குந்தில் படுத்திருப்பார். அறையினுள்ளே அம்மாவும் தம்பியும் உறங்குவார்கள். எனக்கு வெளி விறாந்தையே பலவழிகளிலும் வசதியாக இருந்தது. அப்பாதான் வீட்டுக்கான காவல் அரணின் முதல் அரணில் காவல். நான் இரண்டாவது அரணில் காவல் அப்பாவைத் தாண்டித்தான் யாராயினும் வீட்டினுள் நுழைய முடியும். அப்பாவை தாண்டுவது ஒன்றும் சிரமமனதில்லை. அப்பா படுத்தார் என்றால் அடுத்தநாள் காலையில்த்தான் விழிப்பார். நடுவில் வீட்டுக்குள் திருடன் புகுந்தாலும் அப்பாவுக்கு தெரிந்துவிட நியாயமில்லை. அப்பாவின் குணம் அறிந்துதான் கடவுள் எங்கள் வீட்டுக்கு திருடர்களை அனுப்புவதில்லை என்று நான் நினைத்துக்கொள்வேன். அப்பாவின் கடின உழைப்பு அவரை அசதியாக்கித் தூங்க வைத்துவிடுகிறது. என்னால் அந்த இரவு தூங்க முடியவில்லை. காலிங்கன் ஊருக்குள் குதிரையுடன்தான் நுழைந்தான். இப்போது அவனது குதிரைகள் எங்கே இருக்கும்.? ஒரு வேளை அவன் எங்காயவது தரவையில் குதிரையை மேய்ச்சலுக்கு கட்டியிருக்கக்கூடும். ஆனால் அவனது குடிலை அண்டியதாக எங்கும் தரவைகள் இல்லை. ஒரே மர்மாக எனக்குள்த் தோன்றியது. இரவு தன் கால்களால் மெல்ல நடந்துகொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டின் முன்புறத்தில் வளர்ந்திருந்த வேப்பமரத்திலிருந்து சில்வண்டு ஒன்று இரைந்துகொண்டிருந்தது. அதன் இரைச்சல் இரவை துயிலெழுப்பி அருட்டியது போன்றிருந்தது. அந்த இரைச்சலிலும் அப்பாவின் தாழ்ந்த குறட்டையெலி தெளிவாகக் கேட்டது. மறுநாள் நான் நண்பர்களைச் சந்தித்தபோது, அவர்கள் என்னை ஏளனம் ததும்பப் பார்த்துச் சிரித்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. நான் அகிலை அழைத்து “காலிங்கனிடம் வெள்ளைக் குதிரை இருப்பது உண்மை. அதை நான் என் இருண்டு கண்களால் கண்டேன்” அவன் என்னை பொருட்படுத்தாதவன் போல ஒரு ஏளனப் புன்னகையுடன் கடந்துபோனான்.

 0 

 நெஞ்சுரம் கோதை இறந்த அந்த நாள் எங்கள் ஊரே துயரத்தில் ஆழ்ந்துபோனது. ஊரின் மேல் யாரோ கறுப்புத் துணியைப் போர்த்திவிட்டது போல வானத்தில் கருமுகில் மூடிகிடந்தது. எங்கள் ஊரில் உள்ள பெண்களில் கோதைதான் அழகானவள். அவள் மீது மையல் கொண்டு பல ஆடவர்கள் அவளின் பின்னால் அலைவதை நான் கண்டிருக்கிறேன். கோதையிடம் அழகைப் போலவே திமிரும் அதிகமாக இருந்தது. அவள் யாரின் காதல் வலையிலும் விழுந்தவள் இல்லை. பெண்ணுக்குரியதான நளினமும் வனப்பும் நிறைந்த அவள், மனவலிமை மிகவும் உடையவளாக இருந்தாள். அவளின் மனவுறுதியயே நெஞ்சுரம் என்ற அடைமொழியாகியிருந்தது. கோதையின் கூந்தல் அவளின் பிருட்டத்திற்கும் கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். தலை மயிரை நடுவுச்சியாக வகிடெடுத்து ஒற்றைப் பின்னலாக கட்டியிருப்பாள். அவளது இமைகள் பறவையின் இறகுகள் போல படபடத்துக்கொண்டிருக்கும். உதடுகளில் நிரந்தர குறுநகை தேங்கிக்கிடக்கும். 

நாங்கள் அவளை கோதை அக்கா என்றுதான் கூப்பிடுவோம். எங்களில் அவளுக்கு நிறைந்த அன்பு. நாங்கள் பாடசாலை முடிந்து வரும் போதெல்லாம் தன் தோட்டத்தில் பறித்த ஏதாவது கனிகளை எங்களுக்கு தின்னக்கொடுப்பாள். அவளது நகைச்சுவை ததும்பும் பேச்சைக் கேட்பதற்காகவே மாலை வேளைகளில் அவளது வீட்டுக்குச் செல்வோம். ஓயாது ஒலியெழுப்பும் பறவையைப் போல அவள் பேசிக்கொண்டே இருப்பாள். அவள் கூறும் கதைகள் பெரும்பாலும் சரித்திரகாலத்துக் கதைகளாக இருக்கும். அவளின் கதை மாந்தர்கள் இரவுகளில் அலைபவர்களாகவும் பறவைகளுடன் சிநேகம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவள் கதை சொல்லும் போதெல்லாம் தன் உதடுகளை அடிக்கடி பல கோணங்களில் நெளித்துநெளித்து சுவாரசியம் ததும்பச் சொல்லிக்கொண்டிருப்பாள். அவளது வார்த்தைகள் வசிகரிக்கும் மந்திரம் போல எம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கும். கோதையக்காதான் எங்களுக்கு கிட்டிப்புள் விளையாடச் சொல்லிக்கொடுத்தாள். அவளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவதுமுண்டு. அப்போதெல்லாம் எங்களிலும் வயது குறைந்த சிறுமியைப்போலாகிவிடுவாள். அவளது தாய் “நீ குமர் பொட்டையல்லோ குஞ்சு குருமனுகளைக் கூட்டி வைச்சு விளையாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கோதையக்காவை ஏசுவாள். “யார் சொன்னது நான் குமர் எண்டு நானும் சின்னப் புள்ளைதான்” என்று தாய்க்குச் சொல்லிவிட்டு எங்களோடு விளையாடிக் கொண்டிருப்பாள்.

 கோதையக்காவை யாதவன் அண்ணன் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டு திரிந்தான். யாதவன் அண்ணன் கோதையின் நிறத்துக்கு எதிரான நிறம். அவனது தேகம் எப்போதும் எண்ணையில் ஊறியதைப் போல மினுங்கிக்கொண்டிருக்கும். தலை மயிரை சீப்பிடாது பறக்கவிட்டிருப்பான். அவனது தலைமயிர்கள் நீண்டு வளர்ந்த கோரைப் புற்கள் போல காற்றில் அசைந்துகொண்டிருக்கும். உதடுகள் மேலே சிற்றெறும்புகள் மொய்த்திருப்பதைப் போல வழித்து முளைத்த மீசை முடிகள் இருக்கும். கட்டுக்கோப்பான கம்பீரமான தேகத்துடன்தான் அவன் இருந்தான். நான்கூட இரண்டு மூன்று தடவைகள் அவன் கோதையக்காவின் வீட்டின் முன்னால் சைக்கிளில் வட்டமடிப்தைப் பார்த்திருக்கின்றேன். அவனது காதலை கோதையக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன் முயற்சியை கைவிட்டதாகவும் தெரியவில்லை. கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அவனுக்கு யாரோ சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் தன் முயற்சியில் சற்றும் தளராது தொடர்ந்துகொண்டேயிருந்தான். 


 ஒரு நாள் யாதவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனது சாவுக்கு காதல் தோல்விதான் காரணம் என்று ஊரில் கதைத்துக் கொண்டார்கள். கோதையக்காவிடம் தன் விருப்பத்தை அவன் சொன்னதாகவும். அவள் “உன்ர மூஞ்சிக்கு கோதை கிடைப்பாள் எண்டு மனப்பால் குடிக்காதே” என்று அவனை இகழ்ந்து பேசியதாகவும் அதனால் மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை பரவியிருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் அன்றிலிருந்து கோதையக்கா வீட்டுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொண்டோம். இது ஒரு பெரிய காரணமாக இல்லாத போதும் நாங்கள் நண்பர்கள் ஒருமித்த முடிவாக இதை எடுத்திருந்தோம். கோதையக்காவுக்காக நாங்கள் ஒதுக்கிய மாலை நேரத்தின் பொழுதை வயல் வரம்புகளில் ஓடித்திரிந்து தும்பிகளை பிடிப்பதற்காகச் செலவழித்துக்கொண்டோம். நாங்கள் பாடசாலை விட்டு வரும்போது அவளது வீட்டின் முன்னால் கோதையக்கா நின்றுகொண்டிருந்தால் நாங்கள் வேறுபாதையால் திரும்பிச் சென்றுவிடுவோம். ஏதேர்ச்சையாக தனித்து சந்தித்துக்கொண்டால் ஏதாவது சாட்டுச் சொல்லிவிட்டு தப்பித்துவிடுவோம்.


 கோதை அக்காவின் உடல் வயற்கரையில் கிடந்ததை வயலுக்கு தண்ணீர் கட்டச் சென்ற காந்தி அண்ணன்தான் காலையில் கண்டு, அவளின் வீட்டுக்கு அறிவித்திருந்தார். அவளின் இறப்பு கொலையா தற்கொலையா என்று புரிந்துகொள்ள முடியாத மர்மாக இருந்தது. ஊர்ச்சனமெல்லாம் வயற்கரையில் திரண்டு நின்றனர். அவளது முகத்தை நான் மிக அண்மையாகச் சென்று பார்த்தேன். அவளது உதடுகளில் அதே குறுநகை தேங்கிக்கிடந்தது. கண்களின் மடல்கள் மெல்லத்திறந்திருந்தன. இரண்டு பிறை நிலாக்கள் போல அவளது கண்களின் வெண்திரைகள் தெரிந்தன. என் நெஞ்சு துக்கத்தால் அடைத்துக்கொண்டது. எங்கள் ஊரின் பேரழகியை இழந்த துயரத்தில் துக்கித்து நின்றேன். 

 வயலில் திரண்டு நின்ற சனக்கூட்டத்தின் நடுவே நான் காலிங்கனைக் கண்டேன். வழமையாக அவன் கூட்டங்களில் தென்படுவதில்லை. தனியனாகத்தான் திரிவான். அதுவும் அவனைக் காண்பதென்பது அபூர்வமானது. காலிங்கனின் முகத்தில் எவ்விதமான உணர்ச்சிகளும் வெளிப்படவில்லை. வெள்ளை சேட்டும் நீல ரெனிம் ஜீன்சும் அணிந்திருந்தான். தோளில் கனக்கும் தோற்பை தொங்கிக்கொண்டிருந்தது. நீண்டதொரு பயணத்தை முடித்து வருபவனைப் போலிருந்தான். விடுப்புப் பார்க்கும் எண்ணத்தில் அவன் அங்கு வந்திருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன். அவனுக்கும் எங்கள் ஊருக்கும் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. அவனது பிரசன்னம் எல்ரோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவனையே சிலர் வேடிக்கை பார்ப்பதையும் கண்டேன். சில பெண்கள் அவனைக் கடைக் கண்ணால் விழுங்கிக்கொண்டிருந்தனர். 

 மதியத்தை அண்மித்த பொழுதில்தான் காவல்துறை வயற்கரைக்கு வந்தது. அது வரை கோதையக்காவின் உடல் வெய்யிலில் உலர்ந்துகொண்டிருந்தது. அவளது வெண்ணிறச் சரிரத்தில் ஈக்கள் கூட மொய்த்துக்கொண்டிருந்தன. அவளது தாயும் தந்தையும் அழுது சோர்ந்துபோய் தென்னை மரத்தின் கீழே கிடந்தனர். காவல்துறை, காந்தி அண்ணையைக் கூப்பிட்டு ஏதோவெல்லாம் விசாரித்தது. பிறகு கோதையின் தாய் தந்தையிடம் வந்து விசாரித்துக்கொண்டிருந்தனர். அரை மயக்கத்தில் அவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். மரண விசாரணை அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தனர். யார்யாரையோவெல்லாம் விசாரித்து எதையெதையோவெல்லாம் எழுதிக்கொண்டு சென்றனர். 

 யாதவன்தான் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டதாய் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். “அந்தப் பொடியன் கேக்கேக்கையே இவள் ஓமெண்டு சொல்லியிருக்கலாம். பெரிய அழகாம் அதில என்ன இருக்கு கடைசியாக அற்ப ஆயுசில் செத்ததுதான் மிச்சம். கடைசில நெருப்புத்;தான் தின்னப் போகுது. இருக்கேக்க என்ன ஆட்டம் ஆடுவினும் செத்தால் ஒண்டுமில்லை. இனி இரண்டும் பேயாக ஊரில் அலையப் போகுதுகள் ஆசை நிறைவேறாத ஆவிகள் ஆண்டவனிடம் போகாது அந்தரித்துத்தான் திரியுங்கள்.” 

 அம்மாவின் வார்த்தைகள் திகிலூட்டின. ஒரு வேளை என்னை அச்சப்படுத்தவும் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும் எனவும் நினைத்தேன்.

 கோதையக்கா யாதவனை காதலிச்சிருக்கலாம். எனக்கும் அது சரியெண்டுதான் படுகிறது. கடைசியில இரண்டு பேருதான் செத்தது மிச்சம்.

 நாங்கள் நண்பர்கள் மாலையில் சந்தித்துக்கொண்ட போது கோதையக்கா பற்றியே கதைத்துக்கொண்டோம். அவளோடு கோவம் கொள்ளாதிருந்திருக்கலாம் என்று அகில் எங்கள் குற்றவுணர்ச்சியை தூண்டிவிட்டான். இளைஞர்கள் ஊரின் சனசமூக நிலையத்தில் ஸ்பீக்கர் கட்டி சோக கீதத்தை இசைக்க விட்டனர். இடைக்கிடை கவிதைகளும் வாசித்தனர். ஊரே துக்கத்தில் உறைந்துகிடந்தது. 

 நாங்கள் கோதையக்காவின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டின் வரவேற்புக் கூடத்தில் அவளின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உடலைச் சூழ்ந்திருந்து அழுதுகொண்டிருந்தனர். கோதையக்காவின் உடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிற சோலை உடுத்திவிடப்பட்டிருந்தாள். அவளது நெற்றியில் கூம்பு வடிவப் பொட்டு இடப்பட்டிருந்தது. முகம் உலர்ந்துகிடந்தது. கண்கள் இப்போது இறுகி மூடியிருந்தன. அவளது உதடுகளில் அதே குறுநகை தேங்கிக்கிடந்தது. சிறுவர்களாகிய நாங்கள் அவளுக்கு முன்னால் கண்கள் பனிக்க நின்றுகொண்டிருந்தோம். எங்கள் ஊரின் பேரழகி பேசாது படுத்திருந்தாள். அவளது உதடுகளை யாரோ பசையிட்டு ஒட்டிவிட்டது போலிருந்தது. நாங்கள் மரணவீட்டிலிருந்து வெளியேறி நேராக மைதானத்துக்குத்தான் சென்றோம். கோதையக்காவின் நினைவாக அன்று கிட்டிப்புள் விளையாடினோம். அவளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவதுபோலிருந்தது. 

 மறுநாள் கோதையக்காவின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டதொரு ஊர்வலமாக இருந்தது. எங்கள் ஊரின் பேரழகியின் கடைசி ஊர்வலமது. ஊர் இளைஞர்கள்தான் பாடையைக் காவிச் சென்றார்கள். சோககீதம் எங்கள் ஊரையே நிறைத்திருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் சனசமூக நிலையத்தின் முன்னாலிருந்த மண்டபத்திலிருந்து அந்த ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களை அறியாமலேயே கைகளை அசைத்து கோதையக்காவிற்கு இறுதி விடைகொடுத்தோம். அவளது வார்த்தைகளை இனி கேட்க முடியாது. அவளது குறுநகையை இனிப் பார்க்க முடியாது. துக்கம் இதயத்தை மூடிப் பெருஞ்சுவராக வளர்ந்தது. நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. 

 சூரியன் உருகி வழிந்துகொண்டிருந்த அந்த மதியத்தில் கோதையக்காவின் உடலை தீ தின்னக்கொடுத்துவிட்டு எல்லோரும் திரும்பி வந்தனர். மாபெரும் வெறுமை ஊரையே சூழ்ந்துகொண்டதான பிரமை எனக்குள் ஏற்பட்டது.

 நெஞ்சுரம் கோதை தற்கொலை செய்துகொள்ளத்தக்கவள் அல்ல. அவளின் மனவுறுதி பாறையிலும் உறுதியானது என்பதை நான் அறிவேன். அவளின் சாவின் மர்மம் அவிழ்க்க முடியாத புதிரைப் போல என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. 


 மாலையில் அப்பா வழமைக்கு மாறான தடுமாற்றத்துடன்தான் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது கண்கள் சிவப்பேறியிருந்தன. அவரிடமிருந்து குமட்டத்தக்கதான நெடி வீசிக்கொண்டிருந்து. வந்தவர் திண்ணையில் அப்படியே சரிந்துகொண்டார். அப்பாவிடமிருந்த மாற்றம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அம்மாவிடம் “ஏன் அப்பா ஒரு மாதிரியிருக்கிறார். கெட்ட மணம் அடிக்கிது” என்றேன். “அவருக்கு சுகமில்லையடா. அதுதான் மருந்து குடித்திட்டு வந்திருக்கிறார் போல” என்றவாறு அப்பாவுக்கு அருகில் அமர்ந்துகொண்டாள். அப்பா மது அருந்துவதை அம்மா மறைக்கின்றாள் என்பதை புரியமாலிருக்கும் வயதில்லை எனக்கு. ஆனால் ஏன் அப்பா இன்று குடித்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியாமலிருந்தது. 

 அம்மா அன்று அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை. அவளது கண்கள் இரவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. நிறை போதையின் மயக்கத்தில் அப்பா புரியாத மொழியில் ஏதேதோவெல்லாம் புசத்திக்கொண்டிருந்தார். அம்மா அவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

 மங்கி எரிந்து கொண்டிருந்த சிமிலி விளக்கில் ஓரிரு பூச்சிகள் முட்டி முட்டிப் பறந்துகொண்டிருந்தன. இருளின் கனத்த சுவரில் ஏதோ ஒரு பட்சியின் குரல் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்தது. திடுமென எழுந்து கொண்ட அம்மா சிமிலி விளக்கை எடுத்துக்கொண்டு அறையினுள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். எனக்கு அந்த இரவு ஒரு புதிர்போலவே இருந்தது. 

 அந்த இரவு காலிங்கனின் வீணையிலிருந்து இசையெழவில்லை. எனது மனம் அவனது இசைக்காக தாகித்தது. இமைகளுக்கிடையில் ஈக்குத்துண்டு ஒன்றை வைத்ததைப் போல இமைகள் அண்டமறுத்தன. நான் இரவின் நடுவில் ஒரு பறவையின் சிறகிழை போல மிதந்துகொண்டிருந்தேன். அப்பாவின் குறட்டை ஒலி காலிங்கனின் வீணையொலிக்குப் பதிலாக உரத்து கேட்டுக்கொண்டிருந்தது. காதுகளை கூர்மையாக்கி திறந்து வைத்துக்கொண்டேன். காலிங்கனின் வீணையிலிருந்து ஒலி பிறக்கவில்லை. நான் பித்துப்பிடித்தவனாகி படுக்கையிலிருந்து எழுந்து காலிங்கனின் குடிலை நோக்கி நடக்கத்தொடங்கினேன். 

காலிங்கன் முன்னால் அவனது வீணை கவிழ்ந்து கிடந்தது. கையில் மதுக்கோப்பையை நிரப்பி வைத்திருந்தான். நான் மட்டுமே தனியனாக நின்றிருந்தேன். என்னை ஒரு விதமான அச்சம் சூழ்ந்துகொண்டது. நான் சடைத்து வளர்ந்திருந்த பூவரசின் பின்னால் பதுங்கியிருந்து காலிங்கனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் மதுவை இடைக்கிடை உறிஞ்சிக்கொண்டு யாரோடோ உரையாடுவதைப் போல பேசிக்கொண்டிருந்தான். அவன் போதையின் மயக்கத்தில் புலம்புவது போல எனக்குத் தோன்றியது. சற்றுக்கெல்லாம் குலுங்கிக் குலுங்கி அழுதவாறே எதையோ புசத்திக்கொண்டிருந்தான். அவன் என்ன பேசுகின்றான் என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் என்னைத் தூண்டியது. நான் சருகுகளில் ஒலி எழதவாறு முன்னகர்ந்து அவனை அண்மித்தேன். அவன் குரலை என்னால் கேட்க முடிந்தது.

 “பெண்ணே நான் உனது சரீரத்தில் மயங்கிக் கிடந்தேன். அது மது தரும் போதையிலும் மிகுந்த மயக்கந் தருவது. உன் சரிரத்தில் ஒரு அட்டையாய் ஊர்வதற்காகத்தான் பெண்ணே உன் கோப்பையில் என் மதுவை நிரப்பினேன். உன் தேகம் சிலிர்க்கும் மரமாகி பின் காடாகக் கிளைக்கும் காலத்திற்காகத்தான் காத்திருந்தேன்..” அவனது வார்த்தைகள் உடைந்த கண்ணாச் சில்லுகளாய்ச் சிதறின. மதுவின் மயக்கத்தில் அவனது உதடுகள் கட்டை மீறி திறந்தன. அவனது வார்த்தைகள் நெளிந்து வளைந்து குழிகளில் தேங்கிச் சுழிக்கும் சிற்றோடையாய் பெருகிக்கொண்டிருந்தன. 

 இரவின் நிசப்தத்தில் விழுந்து சிதறும் அவனது குரல் என்னை அச்சமூட்டியது. அவனது கண்களில் செந்நிறம் ஏறித் ததும்புவது போல விளக்கின் ஒளியில் கண்கள் பிரதிபலித்தன. சட்டை அணியாத அவன் தேகத்தில் உரோமங்கள் வரிவரியாக அடர்ந்திருந்தன. கழுத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கன்னங்களில் உப்பிப் பெருத்திருப்பதைப் போலத் தெரிந்தன. மிகு வெறியின் உச்சத்தில் களி கொண்டவன் போல திடீரென் எழுந்து ஆடத்தொடங்கினான். அவனது கால்கள் தரையை ஊன்றி மிதித்தன. விளக்கின் ஒளியில் அவனது நிழல் விசுபரூபம் போல் ஓங்கி வளர்ந்த மரங்களில் தெரிந்தது. ஊழியின் கடைக்கூத்துப் போல அவனது ஆட்டம் இருந்தது.

 “பெண்ணே நீ மகத்தானவள். பெண்ணே நீ மகத்தானவள்” 

அவனது குரலே அவனது சரீரத்தை பிளப்பது போலிருந்தது. திடுமென தரையில் கிடந்த வீணையை எடுத்து ஓங்கி நிலத்தில் அடித்தான். அது நூறு துண்டுகளாய்ச் சிதறியது. 

 அவனது நெஞ்சு மேலும் கீழுமா எழுந்து தாழ்ந்தது. தரையில் விழுந்து கைகளால் மண்ணை அள்ளி வானத்தை நோக்கி எறிந்தான். கணநேரத்தின் பின் இயல்பாக துயில் நீங்கி எழுபவனைப் போல எழுந்து மீளவும் மதுக் கோப்பையை நிரப்பிப் பருகத்தொடங்கினான். 

நான் அங்கிருந்து வெளியேறினேன். காலிங்கனின் விசித்திரமான செயல்கள் எனக்குள் அச்சத்தை ஓங்கி வளர்த்தன. அவன் “பெண்ணே! பெண்ணே!” என விழித்தது ஒரு வேளை கோதையைத்தானா? என் மனம் நிலைகொள்ளாமல் சுழன்றது. கோதையக்கா காலிங்கனின் அழகில் மயங்கியிருப்பாளா? அவள் நெஞ்சுரம் மிக்கவள் சாத்தியமே இருக்காது. காலிங்கன் வேறுயாரையாவது நினைத்துப் புலம்பியிருக்கக்கூடும் என்று நினைத்தேன். 

வீட்டினுள் நுழைந்தபோது அப்பாவின் உடல் திண்ணையில் அசைவதைக் கண்டேன். பாதங்களை மெதுவாகத் தரையில் பொருத்தி வீட்டினுள் நுழைந்தேன். “டேய் எங்கையடா… போட்டுவாற..” மதுவின் நெடியடிக்கும் அப்பாவின் குரலில் வெருண்டு தரையில் விழுந்தேன். அவர் எழுவதற்கு முயற்சி செய்து தோற்றுக்கொண்டேயிருந்தார். அது எனக்கு சந்தோசமாக இருந்தது. நான் எனது படுக்கையில் விழுந்தேன். இருள் முழுமையும் என்னில் சூழ்ந்து அழுத்துவது போல இருந்தது. ஒரு வேளை அப்பா விடிய போதை தெளிந்து எங்கே இரவு போய் வந்தாய் எனக் கேட்கக்கூடும் ஒண்டுக்கிருக்க போனனான் என்று ஒரு பொய்யைச் சொல்ல முடியும். ஆனால் சவுக்காய் வளைந்து விசுக்கும் பூவரசம் கம்புக்கு என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்.

 0 

 அகிலை மறுநாள் சந்தித்தபோது அவன் எனக்குக்கூறிய விடயம் என்னை அதிர்ச்சிகொள்ள வைத்தது. “டேய் கோதையக்கா சாகேக் அவவவின்ர வயித்துக்குள்ள குழந்தையிருந்ததாமடா” இரகசிய முலாமிட்ட வார்த்தைகளை என் காதுக்கள் செலுத்தினான். பூனையின் சிலிர்த்த தேகம் போல் என் தேகம் சிலிர்த்தது. 

 “உனக்கு யாராடா சொன்னது” 

“அப்பா அம்மாவுக்கு சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டனான். அதுதானாம் அவ செத்துப்போனவா” “அப்ப அந்த குழந்தைக்கு யாரடா அப்பாவாம்”

 “அது யாரென்று தெரியாதாம்” 

எனக்குப் புதிரொன்று அவிழ்ந்ததைப் போலிருந்தது. நான் அகிலுக்கு இரவு காலிங்கன் நடந்து கொண்ட விதம் பற்றியும் அவன் புலம்பிய வார்தைகள் பற்றியும் சொன்னேன். அவனது கண்கள் ஆச்சரியமும் அச்சமும் ஒருங்கு சேர விரிந்தன. 

நானும் அகிலும் காலிங்கனின் குடில் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம். குடில் இருந்த அடையாளமே அங்கிருக்கவில்லை. நான், அவன் ஓங்கி உடைத்த வீணையின் துண்டுகள் எங்காவது இருக்குமா எனத் தேடினேன். ஒன்றும் கையில் சிக்குப்படவில்லை. சருகள் குவிந்த வெறும் முற்றமாக அந்த இடம் காட்சியளித்தது. 

 மாலையில் சிறுவர்கள் நாங்கள் மைதானத்தில் கூடியிருந்தோம். 

“காலிங்கன் எங்கே சென்றிருப்பான்” என்பதே எங்கள் இருவரிடமும் பெருங்கேள்வியாக இருந்தது. வழமையாக அவன் பகற்பொழுதில் தென்படுவது குறைவாக இருந்தாலும். அவனது கூடாரம் அவனது இருப்பை சொல்லிக்கொண்டே இருக்கும். இன்று கூடாரம் இல்லை என்பது கவலையாகவும் இருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் எங்களது கோணங்களிலேயே காலிங்கனின் இன்மை குறித்து கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தோம்.

 “காலிங்கன் மாயத்தனங்கள் மிக்கவன். அவன் தன் இருப்பிடத்தோடு மறைந்திருக்கக்கூடும். பிறகு ஒருநாள் அவன் மீளவும் தோன்றக்கூடும்” என்று கமலக்கண்ணன் சொன்னான்.

 “காலிங்கன் பிறப்பும் இறப்பும் அற்றவன். இசையில் நிரம்பியிருப்பவன். அவன் வீணையிலிருந்து மாறி புல்லாங்குழலுடன் எங்காவது சென்று வசிக்கக்கூடும்” என்று குமரன் சொன்னான்.

 “காலிங்கன் பேரழகன். அவன் அழகில் மயங்கிய தேவதைகள் அவனை எடுத்துச்சென்றிருக்கக்கூடும்” என்று விநோதன் சொன்னான். 

“காலிங்கன் மதுப்பிரியன். அவன் எங்காவது தனித்திருந்து மதுவை அருந்திக்கொண்டிருக்ககூடும்” என்று சாதுளன் சொன்னான்.

 காலந்தாழ்த்தித்தான் மாதுளன் மைதானத்துக்கு வந்திருந்தான். அவன்தான் சொன்னான். தான் இன்று காலை வயலுக்கு தந்தையுடன் சென்றபோது வயலின் மேற்குக் கரையில் காலிங்கன் வெள்ளைக்குதிரையில் சென்றதாகவும் அந்தக் குதிரையின் மேலே அசப்பில் கோதை அக்காவை போல ஒரு பெண் இருந்தாகவும் சொன்னான். 

நாங்கள் எல்லோரும் மாதுளனையே பார்;த்துக்கொண்டிருந்தோம். காலிங்கனின் வெள்ளைக் குதிரை ஒரு அவிழ்க்க முடியாத புதிரைப் போல குளம்பொலி சிதற என் மனதினுள் ஓடிக்கொண்டிருந்தது.

 0 

 “நான் என்ன குறை வைச்சன். என்னட்ட இல்லாத என்னத்தை அவளிட்டை கண்டனீ” அம்மாவின் குரல் இரவின் மையத்தில் விழுந்து சிதறியது. “ வாயை மூடடி வேசை” “யார் வேசை நானோ அவளோ” குரலில் உரப்புத் தொனிக்க அம்மா கத்தினாள். தொடர்ந்து அம்மாவின் கன்னங்கள் அதிர அப்பாவின் மரத்த கை அம்மாவைத் தாக்கியது. நான் என் தேகத்தை சுவரோடு ஒட்டிக்கொண்டு ஒதுங்கிக்கொண்டேன். அப்பாவின் வார்தைகள் கனத்து உறைந்து போயின. அம்மாவின் வார்த்தைகள் விசும்பல்லோடு வெளிவந்துகொண்டிருந்தன. துயரத்தின் உச்சத்தில் அம்மா ஓலமிட்டு அழுதாள். எனக்கு அம்மாவின் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு போதுமே எங்கள் வீட்டில் நிகழ்ந்திராத காட்சிகளை யார்யாரோவெல்லாம் விளக்குகளைக் கொழுத்திக்கொண்டு கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்த இரவில் காலிங்கனின் வீணையின் ஒலி கூட இல்லை. வெறுமையான வெளி;யில் எங்கள் வீடுமட்டும் ஒரு நாடக அரங்காகக் காட்சியளித்தது. தூக்கமற்ற என் கண்களின் வழி பாம்புகள் நுழைந்து மனதைத் தீண்டிக்கொண்டிருந்தன. நான் மெதுவாக எழுந்து அறையின் கதவைத் திறந்து என் சகோரனுடன் படுத்துக்கொண்டேன். அவன் எந்தச் சலனங்களாலும் அருட்டப்படாதவனாக உறங்கிக்கொண்டிருந்தான். என் மனத்தை குடைந்துகொண்டிருந்தது ஒரு கேள்வி “இந்த இரவை குழப்பிவிட்டிருக்கும் அவள் யார்?” நான் தூக்கமில்லாத இரவின் திருப்பங்களற்ற பாதையில் நடந்துகொண்டிருந்தேன். 

0 இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். காலிங்கனை கடைசியாக மாதுளன் கண்ட அன்றைய நாளின் இரவுதான் என் அப்பாவும் காணாமல் போயிருந்தார். 

 0 காலிங்கனை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் நிகழுமாக இருந்தால். நீங்கள் அவனிடம் கேட்க விரும்பும் அதே கேள்வியைத்தான் நானும் கேட்பேன். 

0 நன்றி - ஜீவநதி