17 ஜூலை, 2024

நின்று தூறும் மழை

 தானா விஷ்ணு கவிதைகள்

- சித்தாந்தன்

 

ரலாற்றிலிருந்து என்னத்தை கற்றுக்கொள்கின்றோம்? என்ற கேள்வி மிகச் சாதாரணமானதுதான். பலரும் பல தளங்களில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். வரலாறே கேள்விகளுக்குரியதுதான். வரலாறு தேங்கிய குட்டையல்ல அது பெருகிக்கொண்டோடும் ஆறு. ஆக வரலாறு என்றால் என்ன என்ற கேள்வியைப் போல அதற்கான பதில் இலகுவானதில்லை.

பெரும்பாலும் வரலாறு அதிகாரத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அதிகாரம் செலுத்துகின்றவர்கள் காலத்துக்குக் காலம் வெவ்வேறான முகங்களுடன் வருகின்றார்கள். வெவ்வேறு வடிவங்களில் அதிகாரத்தை தமக்கானதாக கட்டமைக்கின்றார்கள். அதிகாரமே வரலாற்றைத் தீர்மானிக்கின்றது. உலகப் பொதுவோட்டத்தில் இதுவே அதிகமும் இடம்பெறுகின்றது. அதிகாரமயப்பட்ட சிந்தனைகளின் வழி சாமானியர்கள் வழிநடத்தப்படுகின்றார்கள். இதில் மீறல்கள் நிகழுகின்றபோது சாமானியர்கள் மீது அதிகாரம் தன் வலிய கரங்களால் குரல்வளையை நசிக்கின்றது. எதிரக்குரல் கொண்டோர்கள் வரலாற்றில் துரோகிகளாக்கப்படுகின்றனர். பொதுவோட்டத்திற்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றார்கள்.

தோல்விகளின் மீதுதான் வென்றவர்களின் வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது. தோற்றவர்களின் கண்ணீரும் அவமானங்களும் அவலங்களும் பேரதிகாரத்தினால் மறைக்கப்படுகின்றன. தானா விஷ்ணுவின் “நின்று தூறும் மழை“ கவிதைத்தொகுதி யுத்த முடிவின் அவலங்களையும் கண்ணீரையும் பேசுகின்றது. நம்பிக்கைச் சிதைவின் மனத்தின் குரலாக விஷ்ணுவின் குரல் ஒலிக்கின்றது. நம்பிக்கை என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. நுட்பமான அதிகார இழைகளால் அது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அதிகார மையங்களுக்கு எதிராக எவ்விதமான அதிகாரப் பின்புலங்களும் அற்றவர்களின் குரல் எழுகின்ற போது அந்தக் குரல்களின் வலிமை குறித்துக் கேள்வியெழுவது தவிர்க்க முடிவதில்லை. கருத்துநிலை சார்ந்து எழுகின்ற கேள்விகள் பன்முகத் தளத்திலான கருத்துநிலைகள் நிலவுகின்ற சமூகத்தில் ஒன்று மற்றொன்றை மறுப்பதும் ஏற்பதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. இவற்றுக்கு அப்பால் உண்மை மறைந்திருக்கின்றது. முரண்நிலைகயான இந்தக் கருத்தாக்கங்கள் வரலாறு பற்றிய மீ புனைவுகளைத்தான் உற்பத்திசெய்கின்றன. உண்மையை கண்டடைதல் என்பதே பிரச்சினைக்குரியதுதான். அதுவும் சமகாலத்தின் வரலாறே பல்வேறு கருத்துநிலையாளர்களாலும் படைப்பாளர்களாலும் பலவேறு விதங்களில் வைத்துநோக்கப்படுகின்றது.

”நின்று தூறும் மழை” விஷ்ணுவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. ஏலவே நினைவுள் மீள்தல், கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள் என்ற இரு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் நினைவுள் மீள்தல் தொகுப்பு மட்டுமே யுத்த முடிவுக்கு முன்னர் வெளிவந்தது. மற்றையவை யுத்த முடிவுக்குப் பின் வெளிவந்தவை. கருத்தியல் ரீதியாக முன்னயதற்கும் பின்னைய இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் இயல்பான வேறுபாடுகள் இருக்கின்றன. விஷ்ணு வந்தடைந்திருக்கின்ற பின்னைய நிலைப்பாடு நம்பிக்கை இழத்தலின் விளைவினால் ஆனது என்று சொல்லலாம். ஆனால் இந்த மூன்று தொகுப்புக்களுமே அதிகாரநிலைகளை எதிர்ப்பவை அல்லது அவற்றின் மீது கேள்விகளை முன்வைப்பவை என்பதில்த்தான ஒருமைப்படுகின்றன.

”அலைதலையும் இழத்தலையும் வலியையும் இன்னும் சலிப்பையும் சுமந்தபடியிருக்கும் என்னைப்போலவே என்னுடைய கவிதைகளும் இருக்கின்றன. அவை தங்களுடைய  கண்ணாடியில் என்னையே பிரதிபலிக்கின்றன. நான் நானாகவும் நானில்லாமலும் வேறாகவும் அலைந்து திரிந்த காலங்கள் கவிதைகளில் மையங்கொள்கின்றன.”

விஷ்ணுவின் இந்த தற்குறிப்பே இந்தத் தொகுதிக் கவிதைகளின் சாரமாக அமைகின்றது. தான் அலைதல், தான் தானாக இல்லாமல் அலைதல் என்ற இருவேறு நிலைப்பட்ட அனுபவங்கள் தான் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள். தன் அனுபவக் கவிதைகளும் பிறரணுபவங்களை தன்னனுபவமாக்கலுந்தான் கவிதைகளில் நிகழ்ந்திருக்கின்றன. தன்னனுபவக் கவிதைகள் பலவும் தன்னிலைப்பட்ட கருத்தியல்களின் வழியாக இயங்குபவை. சுய பிரக்ஞை இத்தகைய கவிதைகளில் மேலோங்குவது தவிர்க்க முடியாதது. தற்சார்பு நிலையுடன் தற் கருத்தேற்றங்கள் இங்கு அதிதமும் காணப்படும். வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளில் இந்தப் பண்பு மிகுந்திருப்பதைக் காணமுடியும். தன் நிலைப்பாடுகளை பொதுமைப்படுத்த விழைகின்றபோது புற யதார்த்தத்துடன் அவை எந்த அளவுக்குப் பொருந்திப்போகக்கூடியன என்பது கேள்விக்குரியதே. நவீன கவிதை காலமாற்றத்தில் அடைந்திருக்கின்ற தளமாற்றங்களில் ஒன்றாக இந்தத் தன்னுணர்வுக் கவிதைகளில் ஏற்பட்டிருக்கின்ற தளமாற்றத்தினையும் குறிப்பிடலாம். எதற்குள்ளும் பொதுமைத்தனமான அகவிரிதலை ஏற்படுத்தக்கூடியதான நுட்பமான கூறல் முறை இத்தகைய கவிதைகளில் இன்று நிகழ்கின்றது. விஷ்ணுவின் கவிதைகளிலும் இதுதான் காணப்படுகின்றது.

கவிதை, காலத்தோடு முரண்பட்டோ காலத்தோடு பொருந்தியோ நிற்பதில்லை. அது காலத்தை மீறிச் செல்வது. கவிதையில் காலம் என்பது உறைபடமல்ல அது சலனப்படம். எப்போது அசைந்துகொண்டிருப்பது. கடந்த காலத்தை வாசிப்பதன் வழி வாழுங்காலத்தைத்தான் வந்தடைகின்றோம். விஷ்ணுவின் கவிதைகள் நிகழ்ந்து முடிந்த யுத்தக் காலத்தினை தன் அனுபவங்களின் வழி கேள்விக்குட்படுத்துகின்றன. புனைவுகளின் மீதும் புனிதப்படுத்தல்கள் மீதும் அதிர்வை எழுப்புகின்றன. புனிதத்தின் பேரால் நிகழ்த்தப்படுகின்ற எல்லாமே புனிதமல்ல என்கின்ற தர்க்கித்தலைச் செய்கின்றன. இயல்பும் இயல்பு குலைந்ததுதான மொழிதல்களின் வழி இந்த தர்க்கித்தல் நிகழ்கின்றது. காதலில் குழைந்தும் பிரிவில் நலிந்தும் ஏமாற்றங்களினால் சிதைந்தும்  ஒரு நீரோடைபோலச் செல்லும் அவரது மொழி, பல இடங்களில் தேங்கிச் சுழிக்கின்றது பல இடங்களில் மீறிப் பெருகுகின்றது. முன்னும் பின்னுமான முரண்களின் வழியாக ஒருமையை நிறுவ முயல்கின்றன. “கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்” தொகுதியிலும் “நின்று தூறும் மழை” தொகுதியிலும் இதுதான் நிகழ்கின்றது. ஒருவகையில் இரண்டு தொகுதிகளுமே தொடர்ச்சி கொண்டவை. வெளிப்பாட்டு முறையால் மட்டுமன்றி பொருண்மை நிலையிலும் தொடர்ச்சியைப் பேணுகின்றன.

விஷ்ணுவின் கவிதைகள் கட்டிறுக்கமான மொழிதல் முறையைக் கொண்டவை. சொற்கள் நீர்த்துத் ததும்பாது ஒருங்கிசைந்து வருகின்றன.  அவரின் கவிதைகளின் பலமும் இதுதான்.  பிரிவுக்காடு, வேதனைக்காடு, மரணக்காடு என்னும் தலைப்பிலமைந்த இந்தத் தொகுதியின் ஆரம்பக் கவிதைகளே கட்டிறுக்கமான மொழிதலுடன் இறுதியுத்த காலத்தின் அவலங்களை பேசுகின்றன. கவிதைகளின் அடியில் உறைந்துகிடப்பது நம்பிக்கை வரட்சியும் தீராத வடுவுந்தான். காலத்தை முன்னிலையாகக் கொண்டு அதற்கு காடு என்னும் பெரும்படிமத்தைக் கவிதையில் தந்துவிடுகின்றார் விஷ்ணு. காடுகள் எப்போதும் புதிர்களால் நிரம்பப் பெற்றவை. பேரச்சத்தை மூட்டுபவை. இந்தச் சிக்கலான புதிர்களை விஷ்ணு நுட்பமாக விடுவிக்கின்றார். அதீத புனைவுகளால் கட்டி வளர்க்கப்பட்ட பெருங்காட்டை கவிதைகளில் கொண்டுவருகின்றார் அவர். புனிதங்களாலும் சாகசங்களாலும் சடைத்து வளர்க்கப்பட்ட காடு, இந்த மூன்று கவிதைகளிலும் தொடர்ந்துவருகின்றது.

 ”காடுகள் மூண்டெரிய

மேய்ச்சல் தரையை இழந்த ஆடுகள்

மாமிசத் தின்னிகள் ஆயின” என வளரும் வேதனைக்காடு கவிதை,

”வீங்கிப் பெருத்த ஆடுகளின்

முலைகளின் வழி

சுரந்துகொண்டிருந்தது குருதி” என முடிகின்றது.

“ மரணக்காடு” என்னும் கவிதை

”புனிதங்களின் அர்த்தவழி

உள்நுழைகிறது

என்னில் பெருத்த காடு” எனத் தொடங்கி

”பெருவனத்தில்

நுழைந்து, அலைந்து

புள்ளியாகிக் குறுகும்

புரவிகளின் முதுகில்

படிகிறது தோல்வியின்

எண்ணற்ற அவமானத் திசுக்கள்” என முடிகின்றது. இந்த  கவிதைகள் இரண்டுமே கடந்த காலம் பற்றியதான நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடுகள். இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் உள்ளீடும் இவற்றின் நீட்சியாகவே இருக்கின்றன. விஷ்ணு சொற்களை நிதானமாகக் கையாளுகின்றார். அதித உணர்ச்சியின் வழியில் செல்லாது நிதானமாக பயன்படுத்துகின்றார்.  இது கவிதைகளில் செறிவை ஏற்படுத்துகின்றன.  ஆனால் இந்த கவிதைகளின் குரல் உள்ளொடுங்கியே ஒலிக்கின்றது. இவற்றை அரசியல் நீக்கம் செய்தும் ஒருவர் வாசித்துக்கொள்ள முடியும் இதில் விஷ்ணு பயன்படுத்துகின்ற குறியீட்டுச் சொற்களுக்கும் படிமம்படுத்தலுக்கும் வாசிக்கின்ற ஒருவர் வெவ்வேறான அர்த்தங்களை வழங்கிக் கொள்ள முடியும். ஆக அடையாளப்படுத்தலை அல்லது கூறுகட்டலை இந்தக் கவிதைகள் மறுதலிக்கின்றன. பன்முகத்தளத்திலான வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்துவிடுகின்றன. ஆயினும் பெரும்பாலான கவிதைகள் மரணத்தையே மைப்படுத்தி நிற்கின்றன. மரணம் பற்றிய அச்சம் எல்லாக் காட்சிகளிலும் அதன் பேரிருளையே காண்கின்றது. மரணத்தோடும் மரணபயத்தோடும் இடைவினையாற்றுகின்ற மனிதர்களே அநேகமும் விஷ்ணுவின் கவிதைகளில் நடமாடுகின்றார்கள்.

”எங்கிருந்தோ மணக்கிறது மரணம்

யாரோ சமைக்கவும்

மூக்கில் நுழையும் வாசனையாய்

ஆழ இறங்குகிறது என்னுள்” மரணத்தை இயல்பான உணர்தலாய் கவிதையாக்கிவிடுகின்றது. மரணம் பற்றிய செய்திகளும் மரணம் பற்றிய காட்சிகளும் நிறைந்துகிடக்கின்றபோது, மரணத்தை இயல்பான உணர்தலாக யதார்த்தம் மாற்றிவிடுகின்றது. எல்லாவற்றிலும் மரணமே சர்வவியாபகமாகிவிடுகின்றது. பதிப்புரையில் கவிஞர் தில்லை, ”தானா விஷ்ணு உருவாக்கும் கவிதைகளில் உள்ள மனிதர்கள், தங்கள் நினைவுகளிலும் மனங்களிலும் யுத்தத்தின் விளைவுகளையும் ஏறமாற்றங்களையும் சுமந்தபடியே இருக்கின்றனர்.” என இதனையே கோடிட்டுக் காட்டியுள்ளார்.  மரணம் பற்றி அச்சமும் நம்பிக்கைச் சிதைவும் கவிதைகளில் நிறைந்தேயிருக்கின்றன. விஷ்ணு பெரும் யுத்தத்தின் பின்னான கூட்டுத் துயரத்தின் அல்லது நம்பிக்கைச் சிதைவின் சாட்சியாகத் தன் கவிதைகளைத் தந்திருக்கின்றார்.

”மயாணக் காடாகிக் கிடக்கிறது

நம்பிக்கையில் நீண்டோடிய ஆறு” (கடவுளின் சாயலில் மிருகம்) மயாணக் காடு என்ற படிமமே கவிதையின் அர்தத்தை விரித்துச் செல்கின்றது. நம்பிக்கை என்னும் பெருநதி கடாகிச் சடைப்பதை, பேரவலத்தின் சாட்சியாக அல்லது பெரும் வீழ்ச்சியின் அடையாளமாகக் கவிதை கொண்டுவருகின்றது.

“மறுதலிக்கப்பட்ட வாழ்வில் சுருண்டு படுக்கும் வேட்டை நாய்” என்ற கவிதை அதிகாரப் படிநிலைகளயும் அதிகாரப்படுத்தலையும் நுட்பமாக வெளிப்படுத்துகின்றது. கவிதையில் வருகின்ற சர்ப்பம், கருடன், வேட்டை நாய் என மூன்று வெவ்வேறான அதிகார மையங்களை விஷ்ணு கொண்டு வருகின்றார். சர்பத்தை ”நீலப்பசிகொண்டலைகிற சர்ப்பம்” என்கின்றார். நீலம் விடத்தின் அடையாள நிறம். சர்ப்பங்களின் பசிக்கு புச்சிகள் இரையாகின்றன. சர்பத்தை அதிகாரத்தின்  மாதிரியாகவும் புச்சிகளை அடிமைத்தனத்தின் மாதிரியாகவும் கொண்டு கவிதையை வாசிக்க முடிகின்றது. கவிதையின் முடிவு

”சுருண்டு படுக்கும்

வேட்டை நாயின் விழியினுள்

நீலப்பசி கொண்டலையும் சர்ப்பங்களை

தேடிச் சலித்து

உறங்கிடச் செல்கிறது கருடன்” என அமைகின்றது. முரணனான காட்சியாக அமையும் இறுதி வரிகளை மீபுனைவாக்கம் அல்லது மீ படிமவாக்கம் என கொள்ள முடியும். யதார்த்தமற்ற இணைப்பாக்கம் நிகழ்ந்திருக்கின்றது. கவிதையை அதுவே மறுதளத்துக்கு கொண்டுசெல்கின்றது. வாசனிடம் புரிதல் குழப்பங்ளையும் ஏற்படுத்திவிடுகின்ற சாத்தியங்களையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒருவகை செய்நேர்த்தியே கவிதையில் காணப்படுகின்றது. இந்தக் கவிதையின் கூறல் முறை தொண்ணூறுகளில் பெருவழக்காக இருந்த முறை என்றே சொல்லலாம். தொண்ணுறுகளில் கவிதைகளில் அதிதமும் காணப்பட்ட  இருண்மை நிலையின் தொடர்ச்சி என்றே இதைக் கருதிக்கொள்ள முடியும்.  இந்தக் கவிதையின் தொடர்ச்சி போலவே ”அச்சத்தின் பேரொலியின் நர்த்தனம்” என்ற கவிதையும் காணப்படுகிறது.

”இருளின் அகன்ற வாயுள்

கரையும் சதைப்பிண்டமாய்

படபடத்துக் கரைகிறது

அழகான புச்சி” இந்தக் கவிதையில் இருள் பேரதிகாரத்தின் குறியீடாகின்றது. புச்சி அவலத்தின் அடையாளமாகிவிடுகின்றது.

இத் தொகுதியில் உள்ள கவிதைகளை இரண்டு வகையில் அணுக முடியும். ஒன்று இத்தொகுதிக் கவிதைகள் பலவும் முன்னைய தொகுதிகளின் கவிதைகளின் நீட்சியாக அமைகின்றன. இரண்டாவது ஏற்கனவே விஷ்ணு கொண்டிருக்கின்ற வெளிப்பாட்டு நிலையிலிருந்து மாறுபட்டு விலகல் தன்மை கொண்டகவிதைகள். இத்தகைய கவிதைகளாக ”சிறுமியின் கண்களில் கடல், கடவுள் ஏன் தனித்திருக்கிறார், பிண்டம் கரைத்தல், யன்னலுக்கு வெளியே” போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம். இவற்றுக்கிடையில் ஒத்த கூறல் முறை காணப்படுகின்றது. எனினும் முன்னைய கவிதைகளிலிருந்து இவை வேறுபட்டுநிற்கின்றன. விஷ்ணுவின் அடுத்த கட்ட பரிமாணமாக இவற்றைக் கொள்ள முடியும்.

இந்தத் தொகுதியின் பிற்குறிப்பில் தி.செல்வமனோகரன்,  மனவடு இலக்கியம் பற்றி கீதா சுகுமாரனை மேற்கோள் காட்டி எழுதியிருக்கின்றார். விஷ்ணுவின் கவிதைகளில் மனவடு இலக்கியத்திற்கான கூறுகள் அதிகமும் காணப்படுகின்றன. மனவடு என்பது ஆறாத பெருங்காயமாக தொடர்ந்து இருப்பது. இது அகப்புறக் காரணிகளால் ஏற்படக்கூடியது. அதிதமும் உளவியல் மயப்பட்ட இந்த நோக்கு விஷ்ணுவின் கவிதைகளில் மட்டுமல்ல பொதுவாக எல்லா படைப்பாளிகளிடமும் இருப்பதுதான். ஆயினும் விஷ்ணுவின் கவிதைகளில் இந்தத் தன்மை அதிகமும் காணப்படுகின்றது.

நின்று தூறும் மழையில் உள்ள பல கவிதைகளும் ஒரே விடயத்தை பலவேறு முறைகளில் எழுதப்பட்டவைதான். விஷ்ணு கிட்டத்தட்ட ஒரு மையத்தில் நின்றே சுழலுகின்றார். திரும்பத் திரும்ப ஒத்த மொழிதலும் படிமங்களும் ஒரே குறயீடுகளும்   வருகின்றன. இது ஒரே கவிதைபோன்ற சாயலை தந்துவிடுகின்றது. கூட்டுக் காயங்களுக்குள்ளும் ஒரு இழை பிரிவாக விஷ்ணு தன் காயங்களின் பெருவலியை எழுதிச் செல்கின்றார். காதலும் ஆற்றாமையும் துயருமாக நீளுகின்ற பெருவலிதான் கவிதைகள் முழுதும் நிரம்பிக்கிடக்கின்றது. நம்பிக்கை தரக்கூடிய சொற்கள் விஷ்ணுவிடம் இல்லை பெருந்துயரத்தின் சாரமாக இந்தத் தொகுதியிருக்கின்றது. இதன் நீட்சியாக விஷ்ணுவின் பின்னைய கவிதைகள் தொடருமாக இருந்தால். அவை சலிப்பையே ஏற்படுத்தும். மீளமீள துயரத்தை ஒத்த முறையில் ஒப்புவிப்பது போலாகிவிடும். விஷ்ணு தன் கவிதைகள் சார்ந்து புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கண்டடைய வேண்டிய தேவையிருக்கின்றது.

00

நன்றி -கலைமுகம்