12 ஜூலை, 2024

மாமிசம்

 சித்தாந்தன்

கோடையின் வெய்யில் உச்சந் தலையினால் இறங்கி தேகத்தை அனலாக்கிக் கொண்டிருந்தது. வேலியோரமாக துளிர்விடத்தொடங்கியிருந்த காட்டுப்பூவரசுக்குள் என்னைச் சுருக்கிக்கொண்டேன். எதிரே உழுதுவிடப்பட்டிருந்த வயலின் புழுதியை காற்று எத்தியபடியிருந்தது. உரிமையாளர் வீட்டின் முன்புறத்தை இறைச்சிக்கடையாக மாற்றியிருக்கின்றார். புதிதாக கட்டப்பட்ட வீடு என்பதால் நிழல் மரங்கள் எதும் இல்லை. வீதியை ஒட்டிக் கடையிருந்த போதும் சூழவும் வயல் நிலங்களே விரிந்துகிடந்தன. அவையும் உழப்பட்டிருந்தன. குளிர்மை என்பது மருந்துக்குக்கூட இல்லை. கடையில் சனங்களும் இல்லை. 

மனைவியின் உறவினர்கள் நீண்ட நாட்களின் பின் வீட்டுக்கு வந்திருந்தனர். நயினை நாகபூசணி அம்மன் கோயி;லில் நேர்திக்கடனை செலுத்திவிட்டு நேற்று மாலைதான் வந்திருந்தனர். இன்று மாலை ஊருக்குப் புறப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு மதியம் விருந்துகொடுக்க வேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்திய மனைவி, அதற்காக் கோழி இறைச்சி வாங்க என்னை அனுப்பியிருந்தாள்.

கடைக்காரர் கிட்டத்தட்ட வியாபாரத்தை முடித்துவிட்டு சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். “ எனக்கு ரண்டு கிலோ இறைச்சி போடுங்கோ” என்ற என் குரலை கேட்டுத் திடுக்கிட்டவர் போல என்னைத் திரும்பிப் பார்த்தார். பிறகு குரலைச் செருமிக் கொண்டே, “கடை பூட்டியாச்சு” என்றார். இந்த வெய்யிருக்குள் இன்னொரு கடையை தேடிச் செல்வதென்பது எரிச்சையூட்டுவதாகவே இருக்கும் “அண்ணை, வீட்டில் ஒரு விசேசம் கொஞ்சம் றை பண்ணிப் பாருங்கோ” எனது குரலில் படர்ந்த பரிதாபத்தை உணர்ந்தவர் போல  “தம்பி வெட்டி வைச்சதெல்லாம் முடிஞ்சிடுத்து. இனி அறுத்துத்தான் தரவேணும். கையில வேலையா இருக்கிறன்  கொஞ்சம் பொறுக்க முடியுமோ” என்றார். நான் தலையை ஆட்டிச் சம்மதத்தை வெளிப்படுத்தினேன். ஆவர் கதிரை ஒன்றை தந்து வீட்டின் முன்புறத்தில அமரும்படி சொன்னார். நான் சுவரோடு ஒட்டி கொஞ்சம் நிழல்படக்கூடிய இடத்தில் அமர்ந்துகொண்டேன். 

வீட்டின் விறாந்தையில் புகைப்படங்கள் பல  தொங்கவிடப்பட்டிருந்தன. எல்லாம் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பெருந்தெருங்களும் நவீன மாடங்களுமாக இருந்த அந்தப் புகைப்படங்களில் கடைக்காரர் பெரிதும் சிரித்துக்கொண்டிருந்தார். ஒரு படத்தில் சமையல் உடையில் தலையில் தொப்பியும் அணிந்து கொண்டு எதையோ வறுத்துக்கொண்டிருந்தார். என்னத்தை வறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அது கோழி வறுவலாகக் கூட இருக்கலாம். கடைக்காரர் அண்மையில்தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும் அவரது நடையுடை பாவனையும் அதை மெய்ப்பிப்பது போலவே இருந்தன. இள நீல அரை பென்னியன் அணிந்திருந்தார். அடர் நீல நிறத்தில் பொட்டம் அணிந்திருந்தார். மார்பில் தடித்த சங்கிலி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. கையில மீன் வடிவிலான விரலில் முக்கால்வாசியை மறைத்திருக்கும் பெரிய மோதிரமும் அணிந்திருந்தார். தலையின் முன் பக்கம வழுக்கை விழுந்திருந்தது. எஞ்சிய தலைமுடியை கறுப்புச் சாயத்தில் தோய்த்திருந்தார். தாடி வழிக்கப்பட்டு மீசையை அழகாகக் கத்தரித்திருந்தார். வீட்டில ;அவரைத் தவிர வேறு எவரும் இல்லை. அவர்களெல்லாம வெளிநாட்டில் இருக்கக்கூடும். இவர் மட்டும் தன் முதுமைக் காலத்தை தாய் நிலத்தில கழிக்கும் பிரையாசத்தோடு இங்கு வந்து தனியே வசிக்கக்கலாம் என எண்ணிக் கொண்டேன். அவர் தன் வேலையைத் துரிதமாக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு வேளை வெளிநாட்டில் அவர் இறைச்சிக்கடை ஒன்றில் வேலை செய்திருக்கலாம். அல்லது இறைச்சிக்கடை ஒன்றை நடத்தியிருக்கவும் கூடும். கவுண்டர் மேசையில் குபேரனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டு சில்லறைக் காசுகள் குவித்துவைக்கப்ட்டிருந்தன. அதன் மேலே அன்றைய நாளிதழ் நான்காக மடித்துவைக்கப்பட்டிருந்தது. எடுத்து விரித்தேன் முதல் பக்கத்தில் வழமையான செய்திகள்தான். ஆர்பாட்டங்கள் பற்றிய செய்திகள் குவிந்துகிடந்தன. வலப்பக்கத்தின் கீழ் மூலையில் கட்டமிடப்பட்ட ஒரு செய்திக்கு “வாள் வெட்டுக்குழு அட்டகாசம்” தலைப்பிடப்பட்டிருந்தது. அண்மைக் காலங்களில் இத்தகைய செய்திகள் இல்லாத நாள் விடிவதென்பது அரிதானதுதான். செய்தியை வாசி;த்தேன் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு கணவன் மனைவியை வெட்டிவிட்டு பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றது. இரத்த வெள்ளத்தில் மிதந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். என்ற இறுதி வரி மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சக மனிதனைக் வெட்டி இரத்தத்தைப் பார்க்கும் அளவுக்கு மனிதர்களிடம் கொலைவெறி ஏன் இவ்வளவுக்குத் தாண்டவமாடுகிறது. மனித உயிரை விட மதிப்புக்கூடியவையா காசும் பொன்னும். நினைக்கும் போதே மனித ஜீவிதத்தின் மீது வெறுப்புப்படர்ந்தது. நாளிதழை மடித்து மீண்டு அதே இடத்தில் வைத்துக்கொண்டேன்.

விறாந்தையின் மூலையிலிருந்த மீன்தொட்டிக்குள் வண்ண வண்ண மீன்கள் அசைந்து கொண்டிருந்தன. தங்கமும் வெள்ளியுமாக உடல் முழுதும் பரவிக்கிடந்த மீன், என்னை மிகவும் வசீகரித்தது. அநேகமும் எல்லா மீன்களுக்கும் சோடி இருந்தது. இது மட்டுமே தனித்து அலைந்தபடியிருந்தது. அதன் சோடி இறந்திருக்கக்கூடும். கடைக்காரர் தனியாக இந்த மீனை வைத்து வதைக்க மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். கடைக்காரர் தன் வேலைகளை முடிக்கும் வரை நான் மீன்களோடு சேர்ந்து நீந்திக்கொண்டிருந்தேன். 

சமையலறை வேலையை முடித்துக்கொண்டு அவர் வீட்டின் பின் புறத்தில் இருந்த கோழிக்கூட்டை நோக்கிச் சென்றார். கிட்டத்தட்ட  பத்து மீற்றர் நீளமான இரண்டு கோழிக்கூடுகளை அமைத்திருந்தார். வெண்ணிறப் புறோயிலர்கள் ஒரு கூட்டிலும் இன்னொரு கூட்டில் கல்பேட், பேரன்ஸ் கோழிகளும் இருந்தன. இவரின் வருகையைக் கண்டபோதே கோழிகள் எல்லாம் கீச்சிடத் தொடங்கின. அவர் சாவதானமாக புறோயிலர் கூட்டுக்குள் நுழைந்தார். இரண்டுகிலோ நிறையளவான கோழியைத் தேடிப் பிடித்தார். அவரது பிடி கோழியின் கழுத்திலிருந்தது. அதன் கழுத்து நீண்டு கொண்டதுபோலிருந்தது. அது தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தது. அதை அவர் கோழிகளைப் பலியிடும் பலி பீடத்துக்குக்  கொண்டு வந்தார். பலி பீடம் என்பது இரும்புக் கால்களையும் மேற்புறம் பலகையினாலுமான மேசைதான்.  அதற்கு மேல் படர்ந்திருந்த மாங்கொப்பு ஒன்றில் பிணைக்கப்பட்டிருந்த கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் கோழியின் பிடியை கழுத்திலிருந்து காலுக்கு மாற்றினார். ஆதை கயிற்றில் தொங்கவிட்டார். அது தன் இறக்கைகளை மேலும் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. கூட்டினுள் இருந்த கோழிகள் எல்லாம் வெருண்டு மூலைகளுக்குள் பதுங்குவது போலிருந்தது. அவர் சர்வசாதாரணமாக அன் கழுத்தை தன் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து ஒரு திருகு திருகினார். கோழியின் சிறகடிப்பு அடங்கி அதன் இறக்கைககள் விரிந்தது தொங்கின. கத்தியை எடுத்து கோழியின் தோடைத் தசைகளை வெட்டத் தொடங்கினார்.

இந்தக் கோழி தொங்கிக் கொண்டிருப்பது போலவே ஒரு நாள் நான் தொங்கிக் கொண்டிருந்தேன். அது இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். அப்போது நான் உயர்தரம் படித்துக் கொண்டிந்தேன். எங்களுக்கு சனி ஞாயிறு மட்டுந்தான் ரியூசன்கள் நடக்கும். ஒரு சனிக்கிழமை விடிய ஆறு மணிக்கு ரியூசனுக்கு வெளிக்கிடக்கிட படலையைத் திறந்த போதுதான் தெருவில் இராணுவத்தினர் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் படலையை மெதுவாக சாத்திவிட்டு வீட்டுக்குள் திரும்பினேன். நான் திரும்பிய சற்றைக் கெல்லாம் இராணுவத்தினர் சிலர் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டிலிருந்த எல்லோரையும் வைரவர் கோவில் திடலுக்கு செல்லுமாறு கூறினார்கள். நாங்கள் எல்லோரும் திடலுக்குச் சென்ற போது திடலே திருவிழாக் கூட்டம் போல இருந்தது. ஆனால் ஒன்று திருவிழா என்றால் ஆரவாரமாக இருக்கும். இஞ்சை வெறும் நிசப்பதம் மட்டுமே நறைந்து கிடந்தது. சுற்றிலும் இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் நின்றனர். வழமையாக இப்படியான சுற்றி வளைப்புக்கள் நடப்பது பழக்கமானதுதான். இராணுவத்தினர் தங்கள் வீரத்தைக் காட்டுவதற்காக ஒன்றிரண்டு இளைஞர்களைப் பிடித்து அதில் வைத்தே சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும மாறிமாறி அடிப்பார்கள். அது தங்கள் மீதான பயம் சனங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காகத் தான். இடைக்கிட “நீ எல்.ரீ.ரீ.ஈ தானே நீ எல்.ரீ.ரீ.ஈ தானே” என்று கேட்டுக்கொள்வார்கள் அம்பிட்டவனும் “இல்லை சேர் இல்லை சேர்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். சொல்லச்சொல்ல அடியும் கூடிக்கொண்டே போகும் அடிக்கின்ற இராணுவத்தினரும் தங்களது முகத்தை மேலும் கொடூமாக்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல இருக்கும். நான் நினைக்கிறேன் முகாமில இருக்க பொழுது போகவில்லை என்றால் ஒரு சுற்றி வளைப்பின் மூலம் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விடுவார்கள். பிறகு அவர்களை விட்டுவிட்டு சுற்றிவளைப்பை முடித்து அணிவகுத்துத் திரும்புவார்கள்.

வழமையான சுற்றிவளைப்புச் சடங்காகத்தான் இதுவும் இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அண்டைக்கு அவர்களது முத்தேர்வில் நானும் ஒருவனாகி இருந்தேன். நான் அம்மாவுக்குப் பக்கத்திலதான் அமர்ந்திருந்தேன். என்னை ஒரு இராணுவ வீரன் கையைச் சுட்டிக் காட்டிய போது, அவனது விரல் துப்பாக்கி போலாகி என்னைக் குறிவைப்பது போலிருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. நான் ‘அம்மா’ என உதடுகளைப் பிரித்தவாறே எழுந்து கொள்ள எத்தணித்தேன். அம்மா என் கையை இறுகப் பிடித்து இருத்தினார். அவரின் கையிலும் நடுக்கத்தை உணர்ந்து கொண்டேன். அம்மாவின் செயல் இராணுவ வீரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவன் பல்லை நெறுமிக் கொண்டு பாய்ந்து வந்து என் தலையைப் பிடித்து இழுத்தான். அம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூட்டத்தின் முன்னே கொண்டுவந்து என் முதுகை வளைத்து தன் முழங்கையால் இரண்டு குத்துக்கள் குத்தினான். நான் அம்மா என்று அலறினேன் என் அலறலைவிட அம்மாவின் அலறல் அதிகமாக இருந்தது. எங்கள் மூன்று பேரையும் அந்த மதிய வேளையில் முழங்காலில் இருத்தினார்கள். ஏனோ எனக்குத் தாகமாக இருந்தது. அது பயத்தினால் கூட இருக்கலாம். புள்ளிக் கூடத்தில் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் கணிதபாட ஆசிரியர் இப்படித்தான் முழங்காலில் இருத்துவார் அந்த நினைவுதான் வந்தது.

சுற்றிவளைப்பு மதியத்தையும் தாண்டி இரண்டு மணிவரை நீண்டது என் முழங்கால் சிரட்டைகள் n;வய்யிலில் தகித்துக் கண்டிப்போயின. இராணுவத்தினர் சிலர் எங்கள் அருகில் வந்தனர். நான் நினைத்தேன் ஒன்றுகூடித் தாக்கப்போகின்றார்கள் என்று. வந்தவர்கள் எங்களை தூக்கி புறப்படத் தயாராக நின்ற றக்குக்கள் போட்டார்கள். றாக் விரைந்து புறப்பட்டது. நான் மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன். அம்மாவும் அப்பாவும் அலறிக்கொண்டு றக்கை தொடர்ந்து ஓடிக்கொண்டுவந்தார்கள். 

0

என்னை தலைகீழாகத் தொங்க விட்டிருந்தார்கள். எனது கைகள் உயிரடங்கிய கோழியின் இறக்கைகளைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தன. தேகம் வியர்த்து நீராக வழிந்துகொண்டிருந்தது. என்னைச் சூழ குண்டாந்தடிகள் சகிதம் நான்கு இராணுவத்தினர் நின்றார்கள். கிறிக்கட் பயிற்சி வீர்கள் பந்தைக் கட்டித் தொங்கவிட்டு துடுப்பால் அடிப்பதைப் போல நான்கு திசைகளிலிமிருந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். நான் பந்து போல் அலைக்களிந்துகொண்டிருந்தேன். அவர்களின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில்கள் இல்லை. அவர்கள் பதிலில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்ப “இல்லை சேர் இல்லை சேர்” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

அது மாபெரும் மரண விளையாட்டு. என் கன்னங்கள் வீங்கிக் கன்றியிருந்தன. என் குதிக்கால்கள் பிளந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. முதுகும் நெஞ்சும் தீயில் கருகுவது போல எரிந்துகொண்டிருந்தன. கேளிக்கையாலும் எளனத்தினாலும் நிறைந்திருந்த அந்த வதைகூடத்தில் என் வெம்மை நிரம்பிய மூச்சு நிறைந்திருந்தது. சுவர்களில் என் இரத்தம் தெறித்துப் படிந்திருந்தது. என் அலறல் காதுகளில் மீள மீள ஒலித்துக் கொண்டிருந்தது.

0

இப்போது செட்டைகள் உரிக்கப்பட்ட கோழி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. என்னை அவர்கள் நிர்வாணமாக்கித் தொங்கவிட்டிருப்பதைப் போலவே கடைக்காரன் கோழியையும் தொங்கவிட்டிருந்தான். அதன் தசைகளில் ஊறிக்கிடந்த இரத்தம், என் தேகத்தில் ஊறி வழிந்த இரத்தத்தை ஞாபகமூட்டியது. என்னைத்  தொங்கவிட்ட கயிற்றை அறுத்தபோது நான் தலையடிபடத் தரையில் விழுந்திருந்தேன். என் மண்டை பிளந்து பெருகிய இரத்தம் அறை முழுவதிலும் விரவிக்கிடந்தது. நான் முனகிக் கொண்டு கிடந்தேன் நா வறண்டு தண்ணீர்த் தாகம் எடுத்தது. நான் என் கைகளினால் சைகை செய்து தண்ணீர் கேட்டேன். ஆங்கிருந்த சிப்பாய்களில் ஒருவன் குவளை ஒன்றில் தண்ணீரை மொண்டு வந்து என் வாயில் ஊற்றினான். நான் தண்ணீரில் இருந்து கரையில் வீசியெறியப்பட்ட ஒரு மீனைப்போல வாயை அகல விரி;க்க எத்தணித்தேன். முடியவில்லை. அவன் ஊற்றிய நீரில் பாதியிலும் அதிகமான நீர் என் இரத்தத்தோடு கலந்து தரைமுழுவதிலும் பரவியிருந்தது.

கடைக்காரன் கோழியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சொப்பிங் பாக்கில் இட்டுக் கொண்டு என்னிடம் வந்தான். நான் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இறைச்சிப் பார்ஸலைப் பெற்றுக்கொண்டேன். மாமிசத்தின் வீச்சம் என் முக்கை அடைத்தது. என் தேகத்தை நான் பார்ஸலிட்டு கொண்டு செல்வதைப் போலிருந்தது. 

கடவுளின் படைப்பில் மனிதன்தான் உயர்ந்த படைப்பா? கடவுள் மனிதனுக்காகத்தான் எல்லாவற்றையும் படைத்தாரா? என் தேகமே மாமிசம்தான். நானே மாமிசத்தை உண்டு மாமிசமாக வளர்ந்து நிற்கின்றேன். தன் தசைத்துண்டில் ஒரு கீறல் விழுந்தால்கூடத் தாங்கிக் கொள்ளாத மனிதன், பிற உயிரிகளை கொன்று புசிப்பது எவ்வளவு கொடூரமானது. ஓவ்வொரு உயிரும் கடவுள் தன் உயிரென்றுதான் கூறியிருப்பதாக மதங்கள் சொல்லுகின்றன. நான் கடவுளின் மாமிசத்தையா காவிச் செல்கின்றேன். கடவுளின் மாமிசத்தையா புசிக்கப்போகின்றேன். அருபமான உயிரை கடவுள் உடலுக்குள் புகுத்திய போது, ஒரு உடல் இன்னொரு உடலைப் புசித்துப் பசியாறும் என நினைத்திருப்பாரா? 

கேள்விகள் தொடரியாக என் மனதில் எழுந்தன. ஒரு கேள்வின் புதிரை அவிழ்ப்பதற்குள் இன்னொரு புதிராக இன்னொரு கேள்வி வந்துவிடுகின்றது. கடவுள் உலகத்தைக் கேள்விகளால்த்தான் ஆண்டுகொண்டிருக்கிறார். கேள்விகள் நிறைந்திருப்பதால்த்தான் மனித இருப்பில் மகத்துவத்தின் சாயல் படிந்துவிடுகின்றது. மனிதன் என்பவன் உடலோ உயிரோவல்ல பேரண்டத்தின் பெரும் இருப்பு. தத்துவத்தின் வித்திலிருந்து சடைத்து வளர்ந்தபடியிருந்தது என் சிந்தனை. 

சற்று முன் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த கோழியின் உடலுக்கும் இராணுவத்தினர் தொங்கவிட்டிருந்த எனது உடலுக்கும் என்ன வேறுபாடு இருக்கக்கூடும். உடல் என்ற பொது விதிதான் வேறுபாடுகள் எல்லாவற்றையும் விடவும் பெரியது. உடலற்ற உயிரின் ஜீவிதமாக மனித வாழ்வு இருந்;திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்? இந்த பௌதீக உலகில் ஒவ்வொன்றும் பௌதீகந்தான். ஒரு பௌதீகம் இன்னொரு பௌதீகத்தை ஆளுகின்றது. அதிகாரம் செலுத்துகின்றது. அடிமைப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த நானும் கசப்புக் கடைக்காரனின் கத்தியின் முன் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருந்த கோழியும் ஒன்றுதான். ஒரு அதிகாரத்திலிருந்து விடுபட்டவன் அல்லது ஒரு அதிகாரத்துக்கு உட்பட்டவன் இன்னொன்றை அதிகாரப்படுத்துவதில் இன்பம் காண்கின்றான். கோழி என் நாவுக்கு இன்பமாகின்றது. இந்த நிலையில் கருணை இரக்கம் அன்பு என்பவையெல்லாம் என்ன? புறத்தே தொங்கிக் கொண்டிருக்கும் சொற்கள்தான்.என் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறு, தொண்டையில் ஏறி கழுத்தை  இறுக்குவது போலவிருந்தது. இன்னும் இராணுவத்தினர் சூழ்ந்து நின்று குண்டாந்த தடியால் என் முதுகைப் பிளப்பதான உணர்வு. நான் என் உள்ளங்காலை மேலுயர்த்திப் பார்த்தேன். தழும்புகள் இன்னுந்தான் இருக்கின்றன. கால்களின் உணர்வு மரத்து உடல் முழுதும் பரவுவது போலிருந்தது. நடை தடுமாறுவதான உணர்வு மேலிட்டது. தெருவுக்கு வந்த போது அனல் காற்று முகத்தில் அறைந்தது. 

0

“ஏனப்பா இவ்வளவு நேரம்” என்ற கேள்வியோடு என்னை எதிர்கொண்ட மனைவி பார்ஸலைப் பெற்றுக் கொண்டாள். நான் எதுவும் சொல்லவில்லை. நேராகக் குளியறைக்குள் சென்றேன். வெயிலின் சூடு கண்களினால் ஆவியாகி வெளியேறுவது போல இருந்தது. சூடு தணியக் குளித்தேன். 

0

எல்லோரும் மனைவி வைத்த கோழிக் கறியைப் புகழ்ந்தவாறே உண்டு கொண்டிருந்தனர். குழந்தைகள் காரமாக இருப்பதாகவும் வளர்ந்தவர்கள் காரம் போதாது என்றும் சொல்லிக் கொண்டே சுவைத்தனர். நான் கடைசியாகத்தான் சாப்பிட அமர்ந்தேன். கோழிக் கறியில் மனைவின் கைப்பக்குவம் தெரிந்தது. நான் சுவைத்துச் சுவைத்து கடவுளின் மாமிசத்தைத் சாப்பிடத் தொடங்கினேன்.

00

நன்றி- தீம்புனல்