03 ஆகஸ்ட், 2024

கடவுள் என்பது துரோகியாயிருத்தல்

 கருணாகரன் கவிதைகள்

-சித்தாந்தன்

”ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொருவரை

நினைவாக்கி வைத்திருக்கிறான் மத்தியு“

இப்படித்தான் ”கடவுள் என்பது துரோகியாயிருத்தல்” என்ற கருணாகரனின் தொகுப்பின் முதற் கவிதை தொடங்குகின்றது. ஞாபகங்களிலிருந்து அல்லது நினைவுகளிலிருந்து தொடங்குகின்ற கவிதைகள்தான் இந்தத் தொகுதியின் கவிதைகள். ஞாபகங்கள் பெரும்பாலானவை ஏமாற்றங்களினதும் நம்பிக்கையீனங்களினதும் துரோகத்தனங்களினதும் வலியாகவே அமைந்துவிடுகின்றன. கருணாகரனின் கவிதைகளில் பெரும்பாலானவையும் அரசியல் மயப்பட்டடவை. கவிதையே அரசியல்தான் அதற்குள் அரசியல் மயப்பட்டவை என்ற பிரிநிலை ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. கவிதையின் அரசியல் வேறு கவிதைக்குள் இருக்கின்ற அரசியல் வேறு. கருணாகரனின் கவிதைகளின் அரசியல் என்பது கவிதைக்குள் இருக்கின்ற அரசியல். கருணாகரனைப் புரிந்துகொள்ளல் என்பது அவரது கவிதைகளுக்குள் இருக்கின்ற அரசியலைப் புரிந்துகொள்வதன்  மூலமுந்தான்.  

“எண்ணிறைந்த தீமைகள்

என்னைச் சூழந்துகொண்டன

என் குற்றங்கள் என்மீது கவிந்து

என் பார்வையை மறைத்துக்கொண்டன

அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை

என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது”

( திருப்பாடல் 39-5)

 

“என் உள்ளம் என்னுள் எரியத்தொடங்கிற்று

நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது

அப்பொழுது என் நா பேசியதாவது”

(திருப்பாடல் 40-12)

 

என்ற இரண்டு திருப்பாடல் வரிகளை முன்குறிப்புப்போலக் கொண்டு இந்தத்தொகுதியை கருணாகரன் தந்திருக்கின்றார். மத்தியு பைபிளில் வருகின்ற பாத்திரம். யேசுவின் சீடர்களில் ஒருவன். மத்தியு என்னும் ஒரு தொன்மப் பாத்திரத்தை மையமாக்கி அதன் வழி ஈழத்தின் கடந்தகால் வாழ்வியலை கவிதையாக்கியிருக்கின்றார் கருணாகரன். தன் கவிதைகளில் பரிசோதனைகளைச் செய்கின்ற கருணாகரன் இதையும் ஒரு பரிசோதனையாகவே செய்து பார்த்திருக்கக்கூடும். ஒரு பாத்திரத்தை பலநூறு பாத்திரங்களாக கிளைக்க வைத்திருக்கும் அவரின் உத்தி கவிதையின் இயங்குநிலையை பலபரிமாணத்துக்குரியதாக்கிவிடுகின்றது.

தொன்மப் பாத்திரங்களை இலக்கியப் பரதிகளுக்குள் கொண்டுவருகின்ற தன்மை தமிழிலக்கியத்திற்கு புதுமையில்லை. அவற்றைக் கேள்விக்குட்படுத்துவதும் மறுவாசிப்புக்குட்படுத்துவதும் தொடர்ந்து வருவதுதான். இந்தத் தொகுப்பின் பின்னுரையில் அ.ராமசாமி இது பற்றி எடுத்துக்கூறியிருக்கின்றார். சங்ககாலத்தில் இருந்து இம்மரபு இருக்கின்றதை அவர் கோடிட்டிருக்கின்றார். ஆக இது ஒரு புதுமையான முயற்சியல்ல ஆனால் இதற்குள்ளும் ஒரு புதிது புனைவாக ஒரு பாத்திரத்தை மாதிரியுருவாகக் கொண்டு பல்வேறு மனிதர்களையும் கருத்துநிலைகளையும் இயல்புகளையும் உலாவவிட்டிருக்கின்றார். களிப்புப்புக்கும் குற்றவுணர்ச்சிகளுக்குள்ளும் துரோகத்தனங்களுக்குள்ளும் ஊடாடுகின்ற ஒரு பாத்திரமாக மத்தியு உலாவுகின்றார். தொன்மப் பாத்திரங்களை படைப்பாக்கத்திற்கு உட்படுத்துகின்ற போதும் ஒன்று அந்த பாத்திரத்தைக் கொண்டு இறுகிய கருத்துநிலைகளை உடைத்துவிடுவது. புதுமைப் பித்தனின் சாபவிமோசனம் இத்தகைய கருத்துநிலையை கட்டவிழ்ப்புச் செய்கின்றது. மற்றையது தொன்மப் பாத்திரங்களை முற்றிலும் மாறான பாத்திரமாக படைப்பது. நவீன கவிதைகளுக்குள் இந்த உத்தி அதிகமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இராமாயண மகாபாரதப் பாத்திரங்கள் பலவும் இதற்குள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன.  கருணாகரனின் இந்தத் தொகுதி முழுவதிலும் மத்தியுதான் மையம். மத்தியுவைக் கொண்டு கடந்த காலத்தின் நிகழ்காலத்தின் சித்திரங்களை கருணாகரன் தீட்டுகின்றார். மத்தியு தனித்த கருத்துநிலைக்கு உரியவனல்ல. முரணான, ஒத்திசைவான எண்ணற்ற கருத்துநிலைகளின் கூட்டிணைவு. ஆங்காங்கே தனித்துவிடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட மனிதர்களின் இணைவைப்போல மத்தியு இருக்கின்றான். மத்தியுவை படிப்பது என்பது ஒருவகையில் வரலாற்றை உணர்ந்துகொள்வதற்கு ஒப்பானது.

இந்தத் தொகுதியின் மூலம் கருணாகரன் அறத்தினைக் கட்டமைக்கின்றார். அந்த அறம் என்பது கடந்த காலத்துக்குச் சாட்சியாக இருப்பது. போரின் பின்னான அநேகமான பிரதிகள் பக்கநிலைப்பட்ட கருத்தாடல்களை மட்டுமே அதிகமும் பேசின. எது உண்மை என்பதை அந்தப் பிரதிகள் எதுவுமே காட்டவில்லை ஒரு காலகட்டம் ஒரே சூழல் ஒரே பிரச்சினைகள் என்ற போதும் இலக்கியங்களில் மாறுபாடான  கருத்துநிலைகளே நிலவின. கடந்த காலம் பற்றிய எண்ணற்ற குழப்பங்களின் பிரதிகளாகவே இருக்கின்றன. ஒரே சம்பவங்களே இருவேறு விதமான விதமாக எழுதப்படுகின்றன என்றால் உண்மை எது? பொய் எது? என்ற குழப்பங்கள் எழுவதைத் தவிர்க்கமுடியாது. கருணாகரனின் இந்தப் பிரதி எல்லாவிதமான கருத்தாடல்களின் மையமாக இருக்கின்றது. பக்கநிலைப்பட்ட நிலையெடுப்பை கருணாகரன் செய்யவில்லை. அவர் கூட்டுப்பெருந்துயரை தன் கருத்துநிலையாக்கியிருக்கின்றார். அதன் வழி சமகாலத்தை அணுகுகின்றார். மத்தியு தவறுகளைச் செய்பவனாகவும் தவறுகளுக்காக வருந்துகின்றவனாகவும் தவறுகளை நியாயப்படுத்துபவனாகவும் இருக்கின்றார். மத்தியுவை மையமாகக் கொண்டு கருணாகரன் சமகாலத்தின் மீதான விசாரனையைச் செய்கின்றார். உள்முகமாக தன்மைநோக்கிய விசாரனைகள் சமூகத்தை நோக்கிய விசாரனைகள் என இதனை அர்த்தங்கொள்ள முடியும். ஆதலினாற்றான் கவிதை பற்றிய நவீனத்துவ பின்னவீனத்துவச் சிடுக்குகளைப் புறந்தள்ளி அதிகமும் கருத்தியல்த்தளத்தில் இத்தொகுதிக் கவிதைகள் இயங்குகின்றன.

கருணாகரனின் இந்தத்தொகுதிக் கவிதைகள் பலவும் அருவநிலைப்பட்ட கருத்துநிலைகளைக் கொண்டிருக்காது புறத்தோற்றங்களின் வழியாக அகத்தை வந்தடைகின்றன. இங்கு அகம் என்பது பெருவெளி எண்ணற்ற காட்சிகளினதும் கருத்துநிலைகளினதும் வெளி.  மத்தியு என்பவன் புறக்காட்சிப் படிமம் அல்ல புறத்தின் வழி அகமாக விரிகின்ற பாத்திரம். ரசவாதக்குடுவை, மதுவும் நுரையும் ததும்பும் அக் குடுவையை விரக்தியும் வேதனையும் கோபமும் சாந்தமும் வெறுப்பும் விருப்பும் அச்சமும் நிரம்பிய கரங்களினால் கருணாகரன் பரிமாறுகின்றார். துயரத்தை பல்வேறு பாத்திரங்களில் பல்வேறு சுவைகளில் கருணாகரன் பரிமாறுகின்றார். கடந்தகாலத்தின் மீதான தன் இயலாமைகளையும் ஆற்றாமைகளையும் தந்துவிடுகின்றார். கருணாகரன் மீது யாரும் வெறுப்புக்கொள்ளாதபடி எல்லோரையும் அவர் மத்தியு ஆக்கிவிடுகின்றார். மத்தியு பலசமயங்களில் தனித்துத்திரியும் ஆடுதான். ஆயினும் அது கூட்டமாக கிளைக்கும் ஆற்றலுடைய ஆடு. அதில் எவராயினும் தங்களையும் ஒன்றாகக் காணநேரும்.

”அன்று அவன் சாகஸமும்

அற்புதங்கள் ஆயிரத்தையும் விளைக்கக் கூடிய

கலைஞனாகியிருந்தான்

அன்பினால் குழைத்து

தன்னை விருந்தாக்கிப் படைத்தான்

தானே ஒரு பெரும் விசையென விளைந்து

பேரியக்கமாகினான்

தன்னைக் கலைத்து மீளக் கூட்டக் கூடிய

திறனெல்லாம் அவனிடம் புத்துப் பொலிந்தது

சித்தன் பித்தன் தத்தன் தாகன் யோகன் தர்மன் கர்மன்

தாபன் கோபன் ஞானி யோகி போகி

என்றெல்லாம் நம்மிடையே ஊடாடிய மத்தியு

அன்று நமக்குத் தெய்வம்” (பக்-44) மத்தியுவை சர்வவல்லமையின் திருவுருவாகக் கருணாகரன் காட்டுகின்றார். வல்லமைப்படுத்தல் என்பது ஒருவகையில் கேள்விகளுக்கப்பாலான ஒருவனாக மத்தியுவை சித்திரிக்கின்றது. அதன் உச்சமாக கடவுள் என்னும் பிம்பத்தை வழங்கிவிடுகின்றது. கடவுள் மீதான கேள்விகள் கடவுளைச் சந்தேகிப்பது போன்றது. அது மாபெரும் குற்றத்திற்குரியது. ஆகவே கடவுள் வழிபாட்டுக்கு உரியவரே அல்லாமல் கேள்விகளுக்குட்படுத்தக்கூடியவரல்லர்.

 

ஏற்கனவே நிர்ணகிக்கப்பட்ட பதில்களின் வழி கருணாகரன் இந்தத் தொகுதியில் கேள்விகளைக் கட்விழ்க்கின்றார். பெரும்பாலும் பதில்களிலிருந்து தொடங்கும் கவிதைகள் படிக்கின்றவர்களிடம் எண்ணற்ற கேள்விகளை உருவாக்கிவிடுகின்றன. இந்தக் கேள்விகளோடு கவிதைகளுள் உள்இறங்குகையில் பதில்கள் பலவற்றுக்குமான கேள்விகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. இது ஒருவகை முரண் பொதுப்போக்குக்கு மாறானது. இந்த முரணான வழி ஒரு தர்க்கமாகவும் இயக்கம் பெறுகின்றது.

”இன்னொரு போதில்

பொலிசும் போராளிகளும் ஒன்றோவெனக்

கேள்வி எழுந்தது

 

விருந்தாளி காவலாளி படகோட்டியெல்லாம்

நண்பர்களா பகைவர்களா

என்றறிய முடியவில்லை அவனால்

கடன்காரனிம் மட்டும் தன்னை ஒப்படைத்தான் மத்தியு” (பக்-15) கவிதையில் கருணாகரன் பதிலை நிர்ணயித்தபின்னரே கேள்வியை எழுப்புகின்றார். பதில்களை நிர்ணயித்துவிட்டு கேள்விகளை உருவாக்குவது கவிதைகள் மீதான புரிதலுக்கு இடையுறளிக்கின்றன.

 

கருணாகரன் கவிதைகளால் கட்டமைக்க விழையும் கருத்தியல், எளிமையைத்தான் கோரிநிற்கின்றது. கருத்தியல் ரீதியாக இது தேவையான போதும் கவிதை என்று வருகின்றபோது இந்த எளிமையே பலவீனமாகவும் இருக்கின்றது. கவிதை, தன் இயல்பு குலைந்து அதிகமும் கருத்தேற்றங்களால் நிறைந்துகிடக்கின்றது. அதிகமும் விபரிப்புக்களாக கருத்துக்கூறல்களாக பல கவிதைகள் காணப்படுகின்றன. சொற்கள் திரவ இழைகளாகி கவிதை முழுவதிலும் ஊறிக்கனக்கின்றன.

”அப்பொழுது மத்தியு புவானான்

புச்சியானான் புல்லானான்

எறும்பானான்

எலியாகி வளையில் உலாவினான்

பென்னாம் பெரிய காடாகினான்

காட்டினுள்ளலையும் சிங்கம் புலி கரடி முயல்

மான் மரை உடும்பு உக்குளான் நரி மரநாய்

பாம்பு பல்லி எறும்பு யானை என்றாகினான்

அப்படியே கடலாகி மீனாகி கடற்பறவையாகி

ஆமையாகி எட்டுக்கால் நண்டாகி

அலையாத்திக் காடாகி

அலையாகி நுரையாகி

காற்றாகி

மழையாகி மின்னலாகி

நிலமாகி பயிராகி

ஆறாகி நகராகி வீடாகி விளக்காகி ஒளியாகி

கலமாகி கலசமாகி விதையாகி வேராகி துளிராகி

அவனாகி இவனாகி

அவளாகி இவளாகி

நானாகி நீயாகி விளைந்தான்”

 

கவிதை சொல்ல விழைவது என்ன என்பது புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் கருணாகரன் மிகைச் சொற்களை வைத்து கட்டியெழுப்பும் இந்த மொழி விளையாட்டு கவிதையை நீர்த்துப்போகச் செய்கின்றது. மணிக்கவாசகரின் புல்லகி புடாகி புழுவாய் மரமாகி என்கின் திருவாசகவரிகளில் காணப்படுகின்ற கட்டிறுக்கமான மொழிதல் அதனை ஈர்ப்புக்குரிய வரிகளாக்கிவிடுகின்றன. அல்லது பாரதியாரின் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற கவிதையில் காணக்கிடைக்கின்ற சொற்சிக்கனம் அக் கவிதையின் பரிமாணத்தை விரிக்கின்றது. கருணாகரனின் இந்தத் தொகுதிக் கவிதைகளில் இது இல்லை. சொற்களை வலிந்து வலிந்து கவிதையை புனைகின்றார். இதை எளிமைப்படுத்தல் உத்தியாகக் கொள்ளமுடியாது. மணிவாசகரது பாடலிலோ பாரதியாரின் கவதையிலோ எளிமை நிறைந்துதான் காணப்படுகின்றது. வலிந்து சொற் சுமையை அவர்கள் ஏற்றியிருக்கவில்லை. மேற்படி கவிதையிலேயே எறும்பாகி, கடலாகி என்ற சொற்களை இரண்டு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு வகையில் மரபிலக்கியங்களின் தொடர்ச்சியாக இந்தத் தொகுப்பைக் கருத முடிகின்றது. தமிழ்க் காப்பிய மரபும், சித்தர்பாடல்களின் கூறும் முறையும், அகத்திணை, புறத்திணைப்பாடல்களின் நீட்சியும் பக்தியிலக்கியச் சொல்லாடல்களும் மரபிலக்கியத்தின் நீட்சியாக உணரவைக்கின்றது. நிலையான கூறல் முறையற்ற மையம் உடைந்த கூறல் முறைதான் அதிகமும் காணப்படுகின்றது. சித்தர் பாடல்களின் தத்துவச்சாயல் அல்லது மனித இருப்பின் மீதான தரிசனம் பல கவிதைகளிலும் காணப்படுகின்றது.

”நிர்வாணத்தைக் கடையக்கடைய விளைந்தது

அமிர்தம்

நிர்வாணத்தில் திளைக்க திளைக்க விளைந்தது

ஞானம்

நிர்வாணத்தில் பொலிய பொலிய விளைந்தது

காதல்” (பக்-36) நிர்வாணம் என்பது உடலின் நிர்வாணமா? அகத்தின் நிர்வாணமா? அல்லது உடலைக்கடத்தலா ? இன்பங்களைத் துறத்தலா?  என்ற கேள்வி எழுகின்றது. நிர்வாணம் என்பதை பேரியற்கையின் இருப்பாக கவிதை கொள்கின்றது. சொல்லிலிருந்து சொல்லுக்குத் ஒரு புழுப்போல மனத்தை கவிதை இழுத்துச் செல்லுகின்றது.

”நின்று பார்!

உன் அழகோ நிர்வாணத்தில் பொலிகிறது

நிர்வாணத்தில் மட்டுமே பொலிகிறது

அப்பொழுது நீ பருவங்களைக் கடந்து

பேரியற்கையாகி மலர்கிறாய்

பேரியற்கையே அழிவற்ற அழகு மலராம் என்று” (பக்-37)  கவிதை தத்துவ விசாரத்தின் முடிவுபோல முடிகின்றது.

 

மத்தியு அதிகார மையங்களுக்கு எதிரான கருத்துநிலைகளின் திரண்டவடிவமாக கருணாகரனால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றான். அதிகாரம் எல்லாவற்றையும் தன்னை நோக்கியே வடிவமைக்கின்றது. அதுவே உண்மைகளாக அல்லது புனிதங்களாகப் பலவற்றைக் கட்டமைகின்றது. இந்த புறநிலை யதார்த்தம் மிகப் பயங்கரமானது. கேள்விகளுக்கு இடமளிக்காதது. அதிகாரம் தான் புனிதமென கட்டமைப்பதை எல்லோரும் புனிதமென நம்பவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றது. எந்த அமைப்பாக இருந்தாலும் அதன் அமைப்பாக்கம் அதிகார இழைகளால் கட்டப்படுவதுதான். பல சந்தர்ப்பங்களில் தனிமனிதர்களின் விருப்புவெறுப்புக்களால் கட்டமைக்கப்பட்டது. அதுவே உச்சமான அறக்கோட்பாடாக தகவமைக்கப்படுகின்றது. ஆதலால் புறநடையான கருத்துகொள்ளலுக்கு அது இடங்கொடுப்பதில்லை. அவற்றை விவாதிப்பதற்கு சந்தர்ப்பத்தை கொடுப்பதுமில்லை. அமைப்பாக்கம் என்பது அதிகாரமயப்படுத்தலேயன்றி வேறில்லை.

”அமைப்பென்பது தனியொரு நிழலில்

ஆடும் ஊஞ்சலல்ல

யாருக்கும் அதில் தனிவழியேதுமில்லை

தனி வழி தேர்வதும் அவ்வழி செல்வதும் துரோகம்

அமைப்பின் விதியே நம்வேதம்

அதுவே தேவகட்டளை” (பக்-21)  இந்த வரிகள் அதிகாரத்தை மட்டுமே மையமாகக்கொண்டு ஜனநாயகத்தை மறுக்கும் அமைப்பாக்கத்தைப் பற்றிப்பேசுகின்றது. அதிகார அடுக்குகள் கடைசியில் சாமானிய மனிதர்களின் மீதான அதிகாரச் செலுத்தலாக மாறிவிடுகின்றது. எல்லாவிதமான அதிகார அடுக்குகளினதும் சுமையை அவர்களே அனுபவிக்கின்றார்கள்.

 

போர் ஒருவனின் இளமையைத் தின்றுவிடுகின்றது. மத்தியுவின் காலத்தை திரும்பிப் பார்க்கையில் அது போர் பற்றிய கட்டளைகளால் சூழந்திருக்கின்றது. ஓயாத போர் ஒருவனை போர் மீதான பைத்தியக்காரனாக்கிவிடுகின்றது என்கிறான் மத்தியு. போர் பற்றிய புனிதம் தகர்ந்துபோகும் போதும் வெறும் கையறுநிலைதான் எஞ்சிவிடுகிறது. கையறுநிலைக் காலத்தில்தான் கருணாகரன் மத்தியுவை மையமாகக் கொண்டு கடந்த காலத்தின் மீதான மீள் வாசிப்பை நிகழ்த்துகின்றார். மத்தியுவை கடந்த காலத்தின் சாட்சியாக எம் முன் நிறுத்துகின்றார். வாழ்வின் கடைசிச் சொட்டையும் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் அவனது வாழ்தல் இருண்ட சாம்பலாகி வரலாற்றின் மீது படர்ந்துவிடுகின்றது. ஒவ்வொருவரினதும்  கண்களையும் அந்த சாம்பல் துகழ்கள் உறுத்துகின்றன. அந்தச் சாம்பல் துகழ்களே துக்கமாகவும் கோபமாகவும் கையறுநிலையாகவும் எம்மைத் துரத்துகின்றன. பாவங்கள் செய்யாத பாவங்களுக்குத் துணை போகாத பரிசுத்தமான கைகளையுடையோர் மத்தியுவாக இருக்கத் தகுதியற்றவர்கள்.

 00

நன்றி- கலைமுகம்