28 மார்ச், 2025

ஆதியை உணர்தல்







மெல்லிய நீரிழைகளால்
மழை
தன்னை வரைந்துகொண்டிருக்கிறது.
சாம்பலாய்ப்படர்ந்த முகில்கள்
ஒளிக்கூந்தலை நெய்கின்றன.
பின்னும்
மரங்களின் புன்னகை மலர்கிறது.
நீர்க்காட்டின் மேலே
காட்சிகள் மிதக்கின்றன.
தொலைவோ
அண்மையோ எனவுணரா வெளியில்
பெரும் சிலந்திக்கூடென வானம் விரிந்துகிடக்கிறது.
பின்னும்
மிதக்கும் கூடுகளின் மீதிருந்து
துடுப்பிடும் பறவைகள் எங்கேகுகின்றன?
பின்னும்
தன்னையுணரும் ஆதிக்கணமொன்று
மின்னலென கண்ணில் கரைகிறது.
பின்னும்
எதிலிருந்து எதையெடுப்பது?
00