சித்தாந்தன்

செழியன் 80களில் கவிதை எழுதத்தொடங்கியவர்களில் முக்கியமானவர். 80களின் அரசியல் சமூக நிலைமைகள் அவரை எழுதத் தூண்டின. செழியன் தனது கவிதைகளால் தன்னை பிரகடனப்படுத்த முயலவில்லை மாறாக சமூகத்தை, சமூக அவலத்தை வெளிப்படுத்தினார். விடுதலைப் போராளியாகவும், சமூக, மானுட விடுதலைப் போராளியாகவும் விளங்கினார். சமூக, அரசியல் சார்ந்த அமைப்புகளை முன்னெடுத்தவராகவும் அவற்றுக்கு ஆதரவு வழங்கியவராகவும் இருந்தார்.
செழியன் நிறைய கவிதைகள் எழுதியவரில்லை. ஆனால் எழுதிய கவிதைகளில் பலவும் முக்கியமானவை. அவரது ஆளுமை என்பது பலதிறப்பட்டது. கவிஞனாக, நாடகக்காரனாக, இதழாசிரியராக பத்திரிகையாளராக பல்திற ஆளுமை கொண்ட வராக இருந்துள்ளார்.
இல்லாமல் போன தோழனுக்கு, மரணம், அதிகாலையைத் தேடி, குழந்தை களிடம் பொய்களைக் கூறாதீர்கள், ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்றமழை ஆகியனசெழியனின் கவிதைத்தொகுதிகள். இந்தத்தொகுதிகளில் உள்ளதும் பின்னர் எழுதிய கவிதைகளும் சேர்ந்து கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள்" எனும் தலைப்பில் காலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. மூன்று பாடல்கள் உள்ளடங்கலாக இத்தொகுப்பில் 50 கவிதைகளுள்ளன.
செழியனது கவிதைக் காலத்தை இரண்டு பிரிவுகளாக்கலாம்.
1.புலப்பெயர்வுக்கு முன்னரான கவிதைகள் (90 வரை கொந்தளிப்பு மிக்ககவிதைகளின் காலம்,
2. புலப் பெயர்வுக்கு பின்னரான கவிதைகள் (90 களின்பின்)
இந்தப் பிரிகோடு செழியனின் கவிதைகளைப் பொறுத்தவரையில் முக்கியமானது. செழியனின் கவிதைகளின் பொருண்மை சார்ந்தும் அவற்றின் வடிவம். சார்ந்ததுமான மாறுதல்களை விளங்கிக்கொள்ள இது மிகவும் அவசியமானது.
செழியனின் கவிதைகளில் மிகு உணர்ச்சியில்லை. அதீத கற்பனை இல்லை. இயல்பை இயல்பாய்ச் சொல்லும் கலை அவரது கவிதைகளின் வெளிப்பாடு. சொற்களின் அதித சேர்க்கை அவரின் கவிதை மொழிதலில் இல்லை. அடர்த்தியும் ஆழமும் நிரம்பிய கருத்தியலை எளிமையான சொற்களால் உருவாக்கிவிடுகின்றார். சொற்களை அடுக்கி அடுக்கி கட்டும் அவரது கவிதை முறைமை அசாத்தியமான அழகியல் வெளிப்பாடு கொண்டது. கவிதை, நேர்கோட்டாய் அன்றி வளைந்து நெளிந்து விரிந்து செல்லும் மாயமாக தொடர்கிறது. அவரது மொழியில் சொல்வதாக இருந்தால்
“கைகளுக்குள் இருந்தது
விரிக்க
விடுபட்டு விரிந்து
படிகளில் இறங்கி நடந்தது
கைகளுக்குள் அடங்காத
பிரமாண்டமாய்"
இதுதான், அல்லது இன்னவென்று சொல்ல. முடியாத உணர்வுதான்செழியனின்கவிதை.
அனுபவங்களின் சாரமாய் வெளிப்படும் அவரது. ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை கவிதைகள், எதன் பொருட்டும் நியமமான அர்த்தங்களை வாசகனிடம் ஏற்படுத்தி விடாத தன்மை மிகுந்தவை. ஒரு தேர்ந்த வாசகன் கூட, தன் அனுபவத்தின் கூறுகளைத்தான் செழியனின் கவிதைகளில் தரிசிக்க முடியும். ஏனெனில் செழியன் கவிதைகள் முற்றுப் பெறுவதில்லை. கவிதையின் முடிவு அடுத்த பக்கத்தில் இருக்குமோ என புரட்டும் போது, அது முதற் பக்கத்திலேயே முடிந்து போயிருக்கும். மீதியை வாசகர் தான் எழுத வேண்டும் அல்லது யோசிக்க வேண்டும். செழியன் வார்த்தைகளைத் தொடங்கவிட்டுப் போய்விடுகின்றார். கவிதை தொக்கு நிற்கின்றது, மறைந்திருக்கும் பொருண்மையைத் தேடி வாசகர் பயணிக்க வேண்டியிருக்கிறது. வாசகரின் தீவிரமான சிந்தனையை கோருகின்ற கவிதைகளாக அவரின் கவிதைகள் இருக்கின்றன. "கருணையும் இல்லாதவர்கள்” என்ற கவிதை
"சூரியன் மிதக்கின்ற தெப்பக் குளம்
தலைகீழாக கட்டிவைத்து
உருட்டுக்கட்டையால் அடித்து
சூரியனை புரட்டி
குளத்தில்தள்ளி விட்டார்கள்
முகில்கள் இல்லாத பெருவெளியில்
இலைகளில் இருந்து மழைபெய்கின்றது
கண்ணீரால் நிரம்பி வழிகின்றது குளம்
அச்சமே இல்லாத சிறுவர்களுக்கு
கருணையும் இல்லை
இறந்து போன சூரியனின்மீது ஏறி
நீந்தி விளையாடுகின்றனர்
தீப்பிடித்து எரிகின்றது வானம்”
என முடிக்கின்றார். கவிதை முடிந்தது போகவில்லை. "தீப்பிடித்து எரிந்த வானத்தின் சாம்பலை எங்கே கொட்டுவேன்” என்றோ அல்லது ”கடலில் கரைத்தேன்” என்றோ முடிந்திருக்க வேண்டுமென வாசகரின் மனம், அவாவக்கூடும். ஆனால் செழியன், வாசகரை அவர்களை நோக்கியே திருப்பிவிடுகின்றார். கவிதையை படித்து முடித்து விட்டுத்தான் வாசகர்கள் யோசிக்க தொடங்குவார்கள். அத்தகைய நுட்பமான மொழிதல் முறை செழியனிடம் சாத்தியமாகி இருக்கின்றது.
மழைஉடைப்பெடுத்து என்ற கவிதை
மழை
உடைப்பெடுத்து.
வயல்
சோளம்
நாற்று விழந்து
உருண்டை மணிகள்
மகிழமரம்
புதர்
தாண்டி புதைமணல்
பாளம் வெடித்து
நாய்க்குடைகாளான்
கிளைநுனியில்
நெல்லிக்காய்
நீ
எப்படி இருக்கிறாய். (ப-24)
கவிதையின் முதல் வரிகளின் விவரிப்புக்கும், கவிதையின் முடிப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லைபோலத் தோன்றும். செழியன் வாசகரிடம் சம்மந்தத்தைகண்டடைய விட்டுவிடுகின்றார். இதே உத்தி பல கவிதைகளிலும் காணப்படுகின்றது. குறிப்பாக சிறிய கவிதைகளில் இது அதிகம் காணப்படுகின்றது.
அதிகார மயப்பட்ட சமூகத்தின் எதிர்ப்பு இயக்கமாக செழியன் இருந்திருக்கின்றார். அவரது கவிதைகள் ஆர்ப்பாட்டமில்லாமல் அதைத்தான் செய்கின்றன. சமூகத்தின் உருமாற்றமும் அதன் தலைகீழ்த் தொங்குதலும், அதிகார நுண்ணிழைகளால் கட்டப்பட்டிருப்பதை செழியனின் கவிதைகளில் உள்ளிழையாகத் தொடர்வதைக் காணமுடியும்.
'இறந்து விடுவேன்" என்ற கவிதையில் மரணம் பற்றிய நிச்சயத்தைக் கூறுவதுடன் அது வாழ்தல் பதற்றிய விருப்பங்களைத்தின்றுவிடுவதையும் எழுதுகின்றார்.
வாழ வேண்டுமென்று துரத்துகின்ற
ஆசையை
பிடுங்கி எறிய முடியாமல் மனம்
அழுகின்ற கடலுக்குள்புதைகின்றது.
என எழுதுகின்ற செழியன்
கற்கள்
கற்களைமீறி நிற்கின்ற
புற்கள்மேல் எறியப்பட்ட
எல்லா அதிகாரங்களை
அதிகாரங்களை தாங்குகின்ற அதிகாரிகள் அவர்களின்
நாற்காலிகளைத்தொழுவதால்
எல்லாப்பயன்களும் உண்டென்றறிந்தும்
மெளனம்தெறித்துக் குரல்
காற்றில் எகிறவிழ
மெதுவாக பற்றி எரியும்" (பக் - 36) என்கின்றார்.
சமூக வெளியில் அதிகார மையப்பட்டு அல்லது அதிகாரத்தையே மையமாகக் கொண்டு முன்னிறுத்தப்படும் அனைத்துவிதமான அசைவுகள் மீதும் அதிராமல் தன் எதிர்ப்பைசெழியன் எழுதுகின்றார். வாழ்வு குறித்த முற்கற்பிதங்களும் வாழ்வு பற்றிய மீபுனைவுகளுக்குமப்பால்செழியன் வாழ்வை அதன் இயல்பு குலையாமல் வாழ்ந்து கடக்க நினைத்திருக்கின்றார். “வாழ்வு” என்பது அதன் பிரமாண்டத்தாலன்றி அதன் இயல்பினால்த்தான்செழியனின் கவிதைகளில் கொண்டாடப்படுகின்றது..
“குழந்தைகளிடம் பொய்களைக்கூறாதீர்கள்" என்ற கவிதை,மகளுக்கும் தனக்குமான உரையாடலாகவும் அனுபவமாகவும் அமைந்த கவிதை, எந்தளவுக்கு தீவிரமான மனத்தின் வெளிப்பாடாக செழியனின் கவிதைகள் இயங்குகின்றனவோ மறுவளமாக அவை மென்மையும் நிரம்பியனவாகக்காணப்படுகின்றன. இக்கவிதையில், குழந்தையினது உலகத்தில் தானும் குழந்தையாகிவிடுகின்றார் செழியன். குழந்தை எவ்வளவுக்கு அடம்பிடிக்கிறதோ, அதேபோல அதை ஆறுதல்படுத்துவதிலும் செழியன் தீவிரம் காட்டுகின்றார். வண்ணத்துப்பூச்சியைக் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைக்குச் சொல்கிறார்.
வானத்தில் பறவைகளை பறக்கவிட்டு
கடல்களில் மீன்களைநீந்தச்சொல்லி
நிலத்தில் மரங்களையும்
மரங்களில் பூக்கும் பூக்களின்மீது
வண்ணத்துப்பூச்சிகளையும் இருக்கவிட்டு
நிலத்திலும் வானத்திலும்
நிறுக்கப்பட்ட அழகையும் அமைதியையும்
மனிதர்களின் முகங்களில்பூசப்பட்ட
மகிழ்ச்சியையும்
எட்டுத் திசைகளிலும்
கொட்டிக்கிடக்கும் அற்புதத்தையும்
குரும்பட்டித் தேர் ஏறி
காற்றில் மிதந்து
பார்த்து வரலாமெனக் கூறினேன்
அதிசயத்துப்போனாள்
கட்டியணைத்துமுத்தமிட்டாள்
கைகள் அசைத்து ஆர்பரித்து
அம்மாவையும் அழைத்துச் செல்வோமென எழுந்தாள்|
அழகானபொய்
அழுதேன்
அழுதேன்
அழுதேன்நான்
மனதுக்குள்.
அதனதன் வாழ்வை அதனதன் இயல்புகளுடன் பார்த்து இரசிக்கும் செழியன்பொய்யுரைக்கின்றார். அந்தப் பொய் அவரையே நோகவைக்கின்றது.
ஈழக் கவிதைகளின் தனித்துவம் என்பது அதன் அரசியல் மயப்படுத்தப்பட்டஉள்ளடக்கத்தான். இதை இன்று சிலர் பிரச்சாரம் என்றும் கோசம் என்றும்கூறுகின்றனர். வாழ்வு எதுவோ அதுவே படைப்பாகவும் மாறும், படைப்பை வெறும் அழகியலாகக் காணவிழைவது அழகாகக்கட்டப்பட்ட, மனிதர்கள் யாருமே வசிக்காத வீட்டைப் போன்றது. படைப்பு இயங்கு நிலையுடையது. பிரச்சாரத்தைக் கூட படைப்பியல்புடன்வெளிப்படுத்த முடியும்.
செழியன் போரின் மீதும் போரிடும் தரப்புகள் மீதும் தன் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றார். செழியனின் பிரதான அலகே மக்கள்தான் இன, மொழி கடந்த மனிதநேயத்தின்குரலை அவரது கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது.
ஒரு சிங்கள நண்பருக்கு என்ற கவிதை
“எங்கள் தேசத்தில் நிகழ்வது போலவே
அவர்கள்வந்தனர்
தெருக்களில்நின்றவர்களை
எதுவுமே தெரியாதவர்களை
எல்லாம் இழந்தவர்களை
எங்கள் தேசத்தில் நிகழ்வது போலவே,
அவர்கள்கொன்றனர்
மனித நேயங்கள்.
மனிதப் பண்புகள்
மரணம் அடைந்தன.
நர்மதா!
மகாவலி நதியின்நீள்கரையோரம்
வளரும்புற்கள் எழுப்பும் ஒலிகள்.
உங்கள்தேசமலைகளில் மோதி
வருகின்ற முகில்கள் தருகின்ற சேதி
எங்கள் மண்ணில் உயர்ந்தே எழுகின்ற
காட்டு மரங்களின்அசைவுகள்
வானத்து நட்சத்திரங்கள்
உனக்குச்சொல்லும்!!
மனித நேயங்களை மரணிக்க
மனித உருவங்களை
மனிதத்துவம்
ஓர்நாள் தோற்கடிக்கும்"
1985 மே 14 அனுராதபுரத் தெருக்களில் நின்ற அப்பாவிச் சிங்கள மக்கள், ஒருதமிழ் விடுதலை இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டனர்.' என்ற குறிப்பு முடிவில் இடப்பட்டுள்ளது. 80களின் இன முரண்பாட்டின் விழைவை செழியன் கவிதைகளில் எழுதியிருக்கின்றார். இன, மொழி கடந்த மனித நேயத்தை கொண்ட ஆன்மாவின் குரலாககவிதை அமைந்திருக்கிறது.
செழியனின் ஆரம்பகாலக் கவிதைகள் எளிமையான மொழியில் இனமுரண்பாடு, இயக்கங்களுக்கிடையிலான அரசியல், அதிகார முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. வரலாற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளன. அவரது 'சுதந்திரம் – 1990' என்ற கவிதை இந்திய இராணுவக்கொடுமையினையும் இந்திய
இராணுவம் வெளியேறிய பின்னரான ஈழச்சூழல் பற்றியும் பேசுகின்றது. 'துப்பாக்கிகளைப் பற்றி' என்ற
கவிதை துப்பாக்கிவைத்திருப்பவனின்மனநிலை பற்றி பேசுகின்றது..
"இறுதியாக துப்பாக்கி
குண்டுகளால்
நீ என்னைகொல்வதற்கு முன்பாக,
துப்பாக்கிகளை நீநம்பாதே
துப்பாக்கிகளை மட்டுமல்ல
துப்பாக்கிகளை தந்த
எசமானர்களையும் நம்பாதே"
என முடிகின்றது. .
இன்னொரு கவிதை துப்பாக்கிகளை
மட்டும்வைத்திருப்பவர்கள்"
"மரணத்தின்நிழல்கள்
உங்களைத்தொடர்ந்தபோது
உங்கள் முடிவுகளை,
நீங்கள்நிச்சயித்துக்கொண்டபோது
அந்தக் கணத்தில் எங்களுக்காக
உங்கள்தேசத்தின்மக்களுக்காக
என்ன சொல்வதற்கு
உங்கள் உதடுகள் முயன்றன"
இயக்க முரண்பாடுகளால் கொல்லப்பட்ட
நண்பர்களுக்காக எழுதப்பட்ட கவிதை இது, கவிதை காலத்தை பதிவு செய்திருக்கின்றது. இது
முக்கியமானது, கவிதை வரலாற்றுப்பிரதிக்கான சாயலைப் பெற்றுவிடுகின்றது.போராட்டத்தில்
இணைந்தவர்களின் இலட்சியத்தை, போர் மீதான நம்பிக்கையை, காதலை, காணாமல் போதலை சுற்றி
வளைப்புக்களை, கைதுகளை செழியனின் ஆரம்பகாலக் கவிதைகள் வெளிப்படுத்தின. 80களின் பொதுப்
போக்கிலிருந்து மாறுபடாது காலத்தை பிரதிபலிக்கும் கவிதைகளாக அவை இருந்தன. இந்தப் போக்கில்
சேரன் உட்பட பிற கவிஞர்களின் கவிதை வெளிப்பாட்டு முறைகளுடன் செழியனும் சேர்ந்தே இயங்கியிருக்கின்றார்.
கிட்டத்தட்ட 90கள் வரையான அவரின் கவிதை வெளிப்பாடும் இதுதான். அவரின் புலப்பெயர்வுக்கு
பின்னரான கவிதைகளே செழியனை தனித்து அடையாளப்படுத்துகின்றன. அதிகமும் அறிவுமயப்பட்ட
முறைமைகளின் வெளிப்பாடாக அவரது கவிதைகள் மாறத் தொடங்கியிருந்தன. சொற்சிக்கனமும் அகவுணர்வுக்
கிளர் முறைமையும் அவரின் கவிதைகளில் கூடியிருக்கின்றன. அதுவே அவரின்தனித்துவம் எனலாம்.
(தூண்டி இலக்கியவட்டம்
20.03.2019 அன்று நடாத்திய 'நினைவிற் கொள்தல்”நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
00
0 comments:
கருத்துரையிடுக