28 மார்ச், 2025

அவிழா முடிச்சு

 










எப்படி இந்த முடிச்சை
அவிழ்ப்பதென்றே தெரியவில்லை.
பாதைகளில் இரைச்சலுடன்
மேகங்கள் மிதந்து செல்கின்றன.
கேள்விகள் எதுவுமில்லாமல்
வெறும் பதில்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
கேள்விகளா
பதில்களா எளிதானைவை?
கூன் விழுந்த முதியவனின் உடலொரு
கேள்விக்குறி.
அது, எண்ணற்ற பதில்களை விட்டுச்செல்கிறது.
நான் அறைக்குத் திரும்புகின்றேன்.
யன்னலில் வந்தமரும் பறவைக்கு
பதில் என்றே பெயரிடுகிறேன்.
தன் உடலைச் சிலிர்த்து வெறுப்பின் இறகுகளை
உதிர்த்துவிட்டு பறந்துவிடுகின்றது.
பூப்பது ஒன்றும் பூவின் தொழிலல்ல
ஆனால்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றது.
00