ஆதி பார்த்திபன் கவிதைகள்
சித்தாந்தன்
கவிதை குறித்த இந்த மிகை மதிப்பீடுகள்
ஏன் உற்பத்தியகாக்கப்படுகின்றன? என்ற கேள்வி எனக்கு ஏற்படுபடுகின்றது. இன்று கவிதை
இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது. நிறைய போலச் செய்தல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளங்கள்
இவற்றுக்கு பெரிதும் துணைபோகின்றன. அசலான கவிதைகளுக்கு
அப்பால் அவற்றைப் போலவே இருக்கின்ற எண்ணற்ற நகல்கள் உற்பத்தியாகக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கவிதை என்பது உற்பத்திப் பொருள் என்ற அளவுக்கு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கின்றது.
இவற்றில் யாருடையது அசல் என்ற கண்டுபிடிப்பதே சிரமாக இருக்கின்றது. பலரது கவிதைகள்
ஒன்றுபோலவே இருக்கின்றன. இது மிகவும் எளிதான என்னுடைய மதிப்பீடு. இந்த மதிப்பீட்டுச்
சங்கதிக்குள் நான் ஆதியின் கவிதைகளை கொண்டுவரவில்லை. ஆதி பார்த்திபனின் கவிதைகள் தமிழ்க்
கவிதையில் அரிதாக நிகழுகின்ற அபுர்வம். இதை மிகைப்படுத்தப்பட்ட பார்வையில் நான் முன்வைக்கவில்லை.
ஆதியின் கவிதைகள் எளிமைக்கும் தீவிரத்துக்கும் இடையில் ஊடாடுபவை. அவர் கவிதைகளின் சொற்களில்
படிகின்ற வசிகரம் எளிமையின் சாயலையும் தீவிரத்தின் சாயலையும் ஒருங்கே கொண்டவை. இதை
ஒரு முரணான அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. 
ஆதி கட்டமைக்கின்ற கருத்தியல் சார்ந்த
பார்வை. தமிழ்க் கவிதை மரபில் எந்த மீறலையும் நிகழ்த்துபவையல்ல. ஆனால் மொழிதல் முறை
எமது மரபார்ந்த பார்வைகளின் மீதான மீறல்களாக அமைபவை. பொதுவான தமிழ்க்கவிதை மரபின் அகமரவின்
நீட்சியாக ஆதியின் கவிதைகள் இருக்கின்றன. காதலும் காமமும் கூடலும் பிரிதலும் ஊடலும்
ஏக்கமுமான அகமரபின் நீட்சிதான ஆதியின் கவிதைகளிலும் இருக்கின்றன. சங்க கவிதைகளிலும்
பக்தி இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் கொண்டாடப்படாததையா
ஆதி தன் கவிதைகளில் கொண்டு சேர்த்திருக்கின்றார் என்ற கேள்வி இத் தொகுப்பைப் படிக்கும்
போது எனக்குள் ஏற்பட்டது. அதற்கு தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களையும் ஆதி தன் கவிதைகளில்
தந்தும் விடுகின்றார். இந்த பார்வையில் ஆதி, சங்கக் கவிஞர்களின் பாதைகளின் வழியாகத்தான்
எம்மிடம் வந்துசேர்கின்றார். ஆதி மட்டுமல்ல பல கவிஞர்களும் அந்த வழியிற்தான் பயணப்படுகின்றார்கள்.
பாணர்களும் புலவர்களும் கொண்டாடிய காதலும் காமமுந்தான் அகக் கவிதைகளில் புதிது புனைவாக
மெருகூட்டப்பட்டவையாகத் தொடருகின்றன. காலத்தின் நீட்சிதான் கவிதைகளின் மீதான புதிது
புனைவாக வந்துநிற்கின்றது. காலம் அசையாத ஒரு திண்மமாக உறையும் எனில் அது வாழ்வின் எந்தக்
கூறுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. காலம் என்பதே அசையும்
திரவந்தான் அதனால்த்தான் அது வாழ்வை விசித்திரமிக்கதாகவும் மாற்றங்களால் நிரம்பியதாகவும்
காணவைக்கின்றது. இலக்கியப் பிரதிகளிலும் அதுவே பேருருவாக திரண்டு நிற்கின்றது. இலக்கியப்
பிரதிகளை வாசிப்பது என்பதே ஒரு வகையில் காலத்துடனான பயணந்தான். ஆக காலத்தின் உருமாற்றந்தான்
இலக்கியப் பிரதிகளின் உருமாற்றத்திற்கும் உள்ளக மாற்றத்திற்கும் காரணமாகின்றது. ஆக ஆதியின் அகக் கவிதைகள் இந்த உரு மாற்றத்திற்கும்
உள்ளக மாற்றத்திற்கும் உட்பட்டவையாகவே காணப்படுகின்றன.
சமகால ஈழக் கவிதைகளில் அகக் கவிதைகளுடன்
ஆதியின் கவிதைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறு நோக்கும்
பொழுது ஆதியின் கவிதைகளில் சேரனின் அகத்துாண்டுதல்களும் பா. அகிலனின் செய்நேர்த்தியும்
கூடிவருகின்றது எனலாம். இது ஆதியின் கவிதைகளை தாழ்வாக மதிப்பீடு செய்வதென்ற பொருளல்ல
ஆதி சமகால அகமரபின் தொடர்ச்சியை பேணுகின்ற கவிஞராக இருக்கின்றார் என்பதே. எஸ்போஸின் கவிதைகளில் அக உணர்வு நிலைப்பட்ட தன்மை
போரியலுக்கூடாகவே வெளிப்படுபவை. யுத்த காலத்தில் எழுதப்பட்ட அகக் கவிதைகள் அதிகமும்
வாழ்க்கையின் நிச்சயமின்மைகளுடாகப் பிரதிபலிப்பவை. யுத்த முடிவுக்குப் பிறகு அகக் கவிதைகளில்
இந்தத் தன்மைகள் குறைவு அல்லது வழக்கொழிந்து போய்விட்டன என்றே கொள்ளத் தோன்றுகின்றது.
ஆதி இந்த இடத்தில்த்தான் தன் அகக் கவிதைகளில் ஒருவிதமான தனித்த இயல்புடன் துலங்குகின்றார்.
ஆதியின் கவிதைகள் மனோரதியப் பாங்கின் இயல்பை அதிகமும் உள்வாங்கியிருக்கின்றன. காதலை
அல்லது காமத்தை கொண்டாடும் மிகுவுணர்ச்சிநிலையைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
வாழ்வின் நுண்மையான தருணங்களை கவிதைக்குள்
கொண்டுவருவது ஈழக் கவிதைகளில் பெரிதும் அரிதானதாகவே உள்ளன. போரே பிரமாண்டமான பேசு
பொருளாக மாறிய பின் அனைத்து நிலைகளிலும் அது
பற்றியே அதிகமும் பேசப்பட்டன. இது தவிர்க்க முடியாதது வாழ்வின் உள்ளடுக்குகள்தான் கவிதையில்
நிகழுகின்ற மகா தருணங்கள். இந்தத் தருணங்கள் புறப்படிமங்களின் வழியாகவே பெரிதும் ஈழக்
கவிதைகளில் பேசப்பட்டிருக்கின்றன. அகிலனின் அம்மை வரையிலும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது.
அம்மை ஒரு வகையில் காட்சிகளின் விபரணமாவே அமமைந்த தொகுதி. காட்சிகளின் வழியாக அகிலன்
உணர்வு நிலையைத் தோற்றுவிக்கின்றார். பெரிதும் புறப்படிமச் சித்தரிப்பிலேயே ஈழக் கவிதைகள்
கவனம் செலுத்தியிருக்கின்றது. எஸ்போஸ், தானா விஷ்ணு போன்றோரின் கவிதைகள் அகப்படிமங்களின்
வழியாக போர் பற்றிய சித்தரிப்புக்களை காட்சிப்படுத்தியவை. விஷ்ணுவின் கறுப்புருவம்
சுமக்கும் ஆந்தைகள், நின்று துாறும் மழை போன்ற பிரதிகளில் இதைக் காணமுடியும். ஆனால்
இந்த இருநிலைப் போக்குகளும் அதனதன் போக்கில் கூர்மை மிக்கவைதான.
ஆதியின் கவிதைகளை இந்த நோக்கில் பார்க்கவேண்டிய
அவசியம் ஏற்படுகின்றது. ஏனெனில் ஆதி இந்த இரண்டுநிலையான போக்குகளின் இடையிற்றான் பயணிக்கின்றார்.
ஆனால் அவரது கவிதைகளில் காதலும் காமமும் - மழையும் கூதலும் போல கலந்து நிற்கின்றன.
புறத்தின் வழி அவர் ஒருவிதமான உணர்வுநிலையை உருவாக்க முயலுகின்றார். அதுபோலவே அகத்தின் வழியாகவும் ஒருவகையான உணர்வு நிலையை உருவாக்கவும்
முயலுகின்றார். இந்த இருவழிப் போக்கு தமிழ்க்
கவிதையின் நீண்ட பயணவழியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்தான். இதன் சமகாலத் தன்மைக்காகவே
நான் அகிலனையும் விஷ்ணுவையும் இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன்.
இந்தத் தொகுதியின் அனேக கவிதைகளும் காதலின்
களிப்பும் பிரிவின் ஏக்கமும் தவிப்பும் நிரம்பியவை. ஒரு ஆணின் பார்வையில் பெண் எவ்வாறான
நோக்குக்குள் நிலைத்து நிற்கின்றாள் என்பதை வெளிப்படுத்துபவை. பெண்ணுடல் மீதான ஈர்ப்பும்
அதன் புதிர்களின் மீதான வசிகரத்திலும் தேங்கிக் கரைபவை. இந்தத் தொகுதிக் கவிதைகளில்
பெண்ணே நீக்கமற நிறைந்து நிற்கின்றாள். பெண்ணை காதலியாக மனைவியாக கொண்டாடும் கவிதைகள்
அரிதான தருணங்களில் அவளின் மகா இருப்பைப் பேசுகின்றன. பெண் மீதான மூடத் தனங்களின் கேள்வியாகவும்
அமைகின்றன. ஐயை -4 என்ற கவிதை
முத்தமிட
சலசலக்கும் பெருங்கடல் அவள்
அகலத்
திறந்த அவள் மார்பே சாட்சி
கனத்து
ஒரு பொழுது உறைவது அவள் குணம்
கை பிடித்து
உள்ளிழுக்கையில்
இருளுக்கு
மருளும் சிறுபிள்ளை
பின்
கண்மூடி உள்நுழைவாள்
பயமென்றில்லை
தயக்கம்
அனுபவங்களின்
மேல் ஏற்றிவைக்கும்
புனிதம்
மீதொரு தயக்கம்
வெறித்து
வேட்டை நிகழ்த்தும் மூர்க்க மிருகம்
ஆனாலும்
கருணையின் பெயர்கொண்டு
அவளை
எப்போதே கடவுளாக்கிவிட்டோமே
எத்தனை
மூடத்தனம்
அத்தனை
விலங்குகளை
அவளில்
புட்டி நிறுத்தியும் கேட்கமாட்டாள்
விடைகளை
கொண்டு முன் வந்து நிற்பாள்
புயல்
கட்டி இறுக்கும் கணமொன்றில்
வலிமையைக்
கொண்டு வருவாள் கடல்
பின்
ரசிக்கும் கணத்தில் முழு பெண்
ஆம்
பெண்.
இந்தக் கவிதையில் ஆதி, பெண் பற்றிய மூடத்தனமான சிடுக்குகளின் மீதான கேள்வியை எழுப்புகின்றார். பெண் பற்றிய பொதுவான சமூகப் பார்வையின் மீது மெல்லிய விமர்சனத்தைத் தோற்றுவிக்கின்றார். இத்தகைய தன்மையே காளி என்ற தலைப்பிட்ட கவிதைகளிலும் இருக்கின்றதன. இந்தக் கவிதையின் முடிவில் அவர் சுட்டுகின்ற முழு பெண் என்ற சொல் எந்த அர்த்தத்தைத் தோற்றுவிக்கிறது என்பதை நோக்க வேண்டும். முழு பெண் என்பது பெண் தன்னை உணர்தலையா? அல்லது பெண் மீதான ஆணின் பார்வையில் பெண் என்பதன் மரபான அர்தத்தைத் தோற்றுவிப்பதா என்ற கேள்வியும் இருக்கின்றது.
கவிதைகளில் பெண்ணுடல் பற்றிய விவாதங்கள் இன்று ஓய்ந்த நிலைக்கு வந்துவிட்டன. தேகத்தைக் கொண்டாடுதல் என்பது பெண்ணிச் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் எழுச்சி பெற்ற பின்னர் தமிழில் புழக்கத்திற்கு வந்தவை. இவை பெரிதும் ஆண்களால் அருவருப்பாகப் பார்க்கப்பட்டவை. மறுபுறம் அதே பெண்ணுடல் ஆண்களால் தம் கவிதைகளில் பெரிதும் கொண்டாடப்பட்டவை. ஆங்கே அருவருப்பு மேலோங்காது அழகியலாகவும் கவித்துவமாகவும் ஆண்களால் அணுகப்பட்டவை. இந்த எதிர்நிலை அணுகுமுறை எவ்வகையானது? என்ற கேள்வி தவிர்க்கமுடியாது எழுகின்றது. ஆதியின் அது என்னும் தலைப்பிட்ட கவிதை
ஒரு
தீ, முதற் தீ என உனைக்கைகளில்
சுடுதலின்
பிரக்ஞையற்று ஏந்துகிறேன்.
தீ சுட்ட
புண்ணாய்
நெற்றியில்
எரிகிறதொருகண்
உயிர்
விந்தாய்ப் பொழிகிறது மழை
கடல்
நீரில் முதலுயிர்
யுகம்
யுகமாய்
மழையெனும்
பெண்கண்ணீர்……… என நீண்டு செல்கின்றது கவிதை. ஒரு வரியில் உயிர் விந்தாய்ப் பொழிகிறது
மழை என மழையை விந்தாய் உருவகமாக்கும் கவிஞர் மழையெனும் பெண்கண்ணீர் என அடுத்த சில வரிகளில்
உருவப்படுத்துகின்றார். பெண்ணியப் பார்வையில் இது முரணான அர்த்தமல்லவா?
இளமையின்
முறுக்கேறிய தன்மையும் பெண்ணுடலையும் ஆராயும் தீவிரமும் இளமையை வாழுங்காலத்தில் சுகித்தலில்
மீதான வேட்கையும் இந்த தொகுதியில் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. அந்திமகாலத் துயரம்
என்ற கவிதை
”சிறுகச்
சிறுக எழுந்து
கூடாக
மாறியிருக்கிறது அன்பு
உனக்கும்
எனக்கு இடையே
என்றோவோர்
நாள்
அருவடைப்படைந்து
போகும் உடலைத் தொட
தயக்கமிருந்தும்
தீட்டுத்துணியை
எடுப்பதைப் போல
மெல்ல
விரல்களால் தொடக்கூடும்
இப்கோதே
அன்பை ஏற்றுக்கொள்” எனத் தொடங்கி
……………………………………………………………
……………………………………………………………..
எனவே
என் அன்பே
அன்பை
ஏற்றுக்கொள்
இப்போதே
வாழ்ந்துவிடலாம்” என முடிகின்றது.
ஒரு வகையில் வாழ்வின் நிலையாமை பற்றி பேசுகின்ற கவிதை.
அன்பை இறைஞ்சி நிற்கின்றது. ஆனால் பெண்ணுடலை தீட்டுத் துணியை எடுப்பதைப் போல என தீண்டுதலை
உவமைப் படுத்துகின்றபோது மரபார்ந்த பெண்சார் பார்வைக்குள் ஆதி வந்துவிடுகின்றார். பெண்ணுடல்
என்பது முதுமையில் அருவருக்கத் தக்கதாகிவிடும் என்ற ஐயம் எந்த அடிப்படையானது? அது ஆண்மையக்
கருத்துருவாக்கத்தின் கூறு என்றே கொள்ளத்தக்கது. இது பிற கவிதைகளில் பெண்ணை உன்னதமாக்கும்
கருத்தேற்றங்கள் மீதான கேள்வியைத் தோற்றுவிக்கின்றது.
மோசமாக நடந்துகொள்கிறேன்
உன்னருகில்
மன்னித்து விடு
ஆனாலும் இந்த வேட்டையில்
நானே முழுமையாக இருக்க
வேண்டும்
நானே வேட்டையாடுபவனாகவும்
நானே வேட்டையாடப்பட்டவனாகவும்…………”
பெரும்பாலும் இதே அர்த்தத்தை
கொண்ட கவிதைகள் நிறைய எழுதப்பட்டுவிட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலான கவிதைகள் பெண்நிலைப்
பார்வையில் ஆணை மிருகமாக முன்னிறுத்தி எழுதப்பட்டவை. ஆதி ஆணை காமத்தில் மிருகமாக அங்கிகரித்து
இந்தக் கவிதையை எழுதியிருக்கின்றார். இவ்வாறாக
சிலசில மீறல்கள் ஆதியின் கவிதைகளின் மீதான கவனத்தை ஏற்படுத்துகின்றன.
பெருவிருட்சமில்லா பறவையின்
சொல்
கூர் மழுங்கிய கத்தி”
(பறவையைப் பற்றிய பத்துக் குறிப்புகள்-2)
இந்த வரிகளுக்குப் பின்னே வருகின்ற இரண்டுவரிகளை விட்டுப் பார்த்தால் இவ் வரிகள் ஹைக்கூ கவிதையைப் போல செறிவடர்த்தியை கொண்டிருக்கின்றது.
”தனித்த பறவையின் வாழ்வே
கூடு”
”ஒற்றைச் சுவரின் மேற்தளத்தில்
சதுரமாய் நகரும் பல்லி”
”உடலில் பலநுாறு கணுக்களில் மல்லிகை மணம்”
”மஞ்சலில் சாம்பல் கரையும் மழை நாள்”
”கோடையென்பதொரு அவசியமான பொய்”
”வானமற்றிருக்கும் பறவைக்கு
உடல் ஒரு கூடு”
ஒற்றைக்கோடை முழுவதும் முத்தமழையால் நிறைந்து ததும்புகின்றது. முத்தத்தின் ஈர நிலத்தில் ஆதி கவிதைகளை முளைக்கச் செய்திருக்கின்றார். காதலும் காமமும் மலர்ந்து நறுமணமாக கவிதைகள் முழுவதிலும் தேங்குகின்றன. பல கவிதைத் தொகுதிகளிலும் அகக் கவிதைகள் இடையிடையேதான் சொருக்கப்பட்டிருக்கும் ஒற்றைக் கோடையில் பிற பொருண்மைக் கவிதைகள்தான் இடையிடையே சொருகப்பட்டிருக்கின்றன. காதலிலும் மிகு காமத்திலும் திளைத்தும் பிரிவில் நலிந்தும் பெண்ணை வல்லமையின் பேருருவாகவும் கொண்டாடியும் ஆதி திளைக்கின்றார்.
ஆதியின்
கவிதைகள் தமிழ் அகமரபுக் கவதைகளின் இன்றை மாற்றமாக இந்தத் தொகுதியில் வெளிப்படுகின்றது.
அக மரபை அவை பெரிதும் பொருண்மையாகக் கொண்டிருந்தாலும் அவற்றின்னுாடாக தமிழ்ச் சமூகத்தின்
வாழ்வியல் கூறுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தியுமிருக்கின்றார்.

0 comments:
கருத்துரையிடுக