07 ஜூன், 2010

புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்

சித்தாந்தன்

என்னுடலின் நெளிவுகளுக்கிடையில்
அவிழ்கிறது ஆடை
புலன்களைத் திறந்தவனின் நிர்வாணத்தை
காற்றின் கண்கள் மேய்கின்றன

கறுத்த இலைகளுடன் சடைத்திருக்கும்
பெரு மரத்தின் கீழ்
விக்கிரகமாய் இறுகியுள்ள கடவுளின் சிலை மேல்
சிறுநீர் கழிக்கும் நாய்
புனிதத்தின் அதியுன்னத இசையை வேட்டையாடுகிறது

பாதையெல்லாம்
தங்கள் முகங்களின் நிர்வாணத்தை
முகமூடிகளால் மறைத்திருக்கும் மனிதரின்
வார்த்தைகளின் அசிங்கம்
உரோமக் கால்களில் எச்சிலாய் வழிகிறது

எதையும் ஜீரணிக்க முடியாது
வீடு திரும்பும் என்னிடமிருந்து
ஆடையை உருவிப் போகிறது எதிர் வீட்டு நாய்

நான் நாயாகவும்
நாய் நானாகவுமாக இருக்கும்
மிகப்பிந்திய நிமிடங்களில்
நாய்களின் அதியுன்னத இசையை
என் புலன்களால் வேட்டையாடத் தொடங்கினேன்

நாய்களைப் போலவே அலைகிறது
என் அதியுன்னத இசை

00