14 ஜூன், 2010

பூட்டப்பட்டிருக்கும் வெளிகள்

சித்தாந்தன்

அநேகமும் நான் செல்லும் வீடுகள்
பூட்டியேயிருக்கின்றன

கதவுகளுக்குப் பின்னால் உதிர்ந்திருக்கும்
சம்பாஷனைகள்
கதவினைத் தட்டும்போது சிதறிக்கலைகின்றன

சில வீடுகளுக்குள்ளிருந்து
வீணையினதோ வயலினினதோ இசை
மாயமாய்க் கசிந்துகொண்டேயிருக்கின்றன

எல்லா வீடுகளின் முற்றங்களிலும்
காற்றில் உலராமலிருக்கின்றன பாதச்சுவடுகள்

அவசரத்தில் காலுதறிய செருப்புக்கள்
கலைந்துகிடக்கின்றன படிக்கட்டுகளில்

உட்புறமாகத் பூட்டப்பட்ட
கதவுகளின் அதிர்வொலி துக்கத்தை வரவழைக்கிறது

உடமையாளர்களைத் தொலைத்த
வீடுகளின் முன்
தனித்திருக்கின்றன திறப்புக்கோர்வைகள்
ஆயினும் அவை
கதவுகளுக்குப் பொருந்திவருவதில்லை

திறப்புத் துவாரத்தினூடு
கண் சொருகிப் பார்க்கையில்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது பதட்டம்

பலமுறையும்
என் வீட்டினுள்ளேயே பூட்டப்பட்டிருக்கின்றன
என்னுடையதான வீடுகள்

நன்றி - உயிர்நிழல்