16 ஜூன், 2010

சந்நதம்


சித்தாந்தன்

நிதானம் தப்பிய மழையின்
பேரிரைச்சலுடன் சந்நதம் நிகழ்கிறது

கோடுகளால் கிறுக்கப்பட்ட முகத்துடன்
உங்கள் முன் மண்டியிட்டிருக்கின்றேன்
சுடுகாட்டின் சாம்பல்
என்மீது படிந்திருக்கிறது

ஈனத்துடன் ஊர்ந்தூர்ந்து
கடலிலிருந்து கரையேறுகிறது
சிறு புழுவளவான சூரியன்

உங்கள் கனமேறிய கால்களின் ஒலி
விரட்டிச் சென்று குதறும்
என் தனிமைக்கு
காலபேதமும் ஜீவனுமில்லை
பயணவெளியின் காற்றில்
அச்சத்தின் பேருருவாக விழுந்து புலம்புகிறது

என் நண்பனின் ஒரு நூறு கவிதைகளிலும்
மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்
நீங்கள்
அவனைக் கொன்று களித்திருந்த நாளில்
விலங்குகள் மாட்டப்பட்ட வார்த்தைகள்
காற்றில் சுழன்றடித்தன

எல்லாச் சந்நதங்களின் முடிவிலும்
காற்றின் ரகசியப் புலன்களில்
சீழ் கட்டி மணக்கும் மரணங்களின் வலி

பிறகு
மிக இயல்பான புன்னகையுடன்
தேநீர் பருகுவீர்கள்
கொலையுண்டவனின் கதறலையும் கெஞ்சலையும்
வேடிக்கைச் சொற்களால் பேசுவீர்கள்

கொலைக் கருவிகளின் முனைக்கத்திகளால்
குற்றப்பட்டிருக்கின்றன எமது வார்த்தைகள்

பனி பெய்தபடியிருக்கும் இந்த ராத்திரியில்
என் மூச்சில் அலைந்தசைகிற
இந்த கைவிளக்குச் சுடரினடியில்
கடவுளுக்காக என் கதறல்கள் முழுவதையும்
கொட்டிவைத்திருக்கிறேன்
என் கடவுளுக்காக

நன்றி- பொங்குதமிழ்