10 ஆகஸ்ட், 2024

இயல்பின் வழியில் இயல்பின் மொழியில் எழுதப்பட்ட கவிதைகள்

 - நேதாமோகன் கவிதைகள்

சொற்களின் பின்னால் மறைந்திருக்கும் மர்மங்களை அவிழ்ப்பதிலிருந்து கவிதைகள் மீதான வாசிப்புத் தொடங்குகின்றது. தமிழ் கவிதை நவீன கவிதையாகவே நிலைபெற்றுவிட்டது. நவீன கவிதைக்குள்ளும் இன்று பல்வேறு தளமாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன- நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொழியினுள்ளே நிகழும் மாற்றங்கள் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கியவடிவங்களிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். மொழியின் இயங்குநிலையே அது தன்னை மாற்றங்களுக்குள் தகவமைத்துக் கொள்வதில்த்தான் இருக்கின்றது.


பொதுவாக இலக்கியப் பிரதிகள் ஒற்றைப் புரிதலுக்கு உரியவையல்ல. பன்முகத் தளங்களிலான வாசிப்பை கோரி நிற்பவை. தவிரவும் வாசிப்பு என்பது வெறுமனே மனம் சார்ந்த ஒன்றல்ல. அதில் புறநிலையான காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அகப்புறக் காரணிகள் சார்ந்த நிலையில் ஒரு பிரதி வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் எல்லாரிடத்தும் ஒன்றாக அமைந்துவிடுவதில்லை. நவீன கவிதைகள் இதற்கான சாத்தியங்களை அதிகமும் கொண்டுள்ளன. அது தனக்கான அர்த்தங்களை விரித்துக்கொண்டே செல்லவல்லது. இந்த இயல்பான பார்வை கவிதை மீது கட்டமைக்கப்படுகின்ற அதிகாரத்தைத் தகர்த்துக்கொள்கின்றது. எழுத்தோ வாசிப்போ முழுமையான அர்த்தத்தில் அதிகாரத்துக்கு எதிராக நிலையெடுப்பவை. ஆனால் அதன் மீது கட்டமைக்கப்படும் அதிகாரமயப்படுத்தப்பட்ட கருத்தேற்றங்கள் உண்மையில் எழுத்தின் இயங்கியலை மறுப்பவையே.

அண்மைக்காலமாக நவீன இலக்கியவகைமைகள் பற்றியதான கருத்துருவாக்கங்கள் அதிகமாக உற்பத்தியாக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சலிப்பை ஏற்படுத்துபவை. இந்தக் கருத்துருவாக்கங்கள் கவிதைகள் மீதே அதிகமும் நிகழ்த்தப்படுகின்றன. ஏற்கனவே உள்ளவற்றை புதியதான கண்டுபிடிப்பு போல முன்வைப்பதும், ஏற்கனவே உள்ள பிரதிகளை அது எழுந்த காலம் சூழல் போன்றவற்றை கருத்திற்கொள்ளாமல் அவற்றை முக்கியமற்றவை என மறுத்துரைப்பதும் தொடர்ந்துவருகின்றது. இவற்றை வெறும் பிதற்றல்கள் என்ற அடிப்படையில் கடந்து செல்வதுதான் பொருத்தமானது. இலக்கியப்பிரதிகளானவை அவை உருவாகிய சூழல், அந்த சூழலில் அவை ஏற்படுத்திய தாக்கம், இன்றளவிலும் அவை நிலைத்திருப்பதற்கான காரணம், அவற்றின் தேவை என்பவற்றின் அடிப்படையில் காரண காரிய ரீதியில் அணுக்பட வேண்டியது. ஒற்றைத்தனமான புரிதலில் அவற்றை நிராகரிப்பது ஒரு வகையான பிறழ் மனநிலை என்றே கருத முடியும். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய கருத்துருவாக்கிகள் தம்மை நிலைநிறுத்துவதற்கான அதிர்ச்சியளிக்கவல்ல கருத்துக்களை பொது வெளியில் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகைய வகையில் உருவாக்கப்படுகின்ற கருத்துக்கள் தமிழ்க் கவிதையின் இயங்கு திசையில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் எதுவும் இல்லைதான். புதிதாக எழுதவருகின்றவர்கள் கவிதையை ஒரு உற்பத்திப் பண்டம்போல கருதும் நிலையை இவை ஏற்படுத்திவிடலாம். வெறும் செய்திறனே கவிதை என்னும் தோற்றப்பாட்டை இவை ஏற்படுத்திவிடுகின்றன. இத்தகைய கருத்துருவாக்கங்கள் சிந்தனைமுறைகளாக உருவாகாமல் வெறும் அபிப்பிராயங்களாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்தப் தோற்றப்பாட்டுக்குள்ளும் அதிர்ச்சிக் கருத்தாடல்களுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் தன் கவிதைகளை நவீன கவிதைக்கான இயல்பான மொழிதல் முறையோடு தந்திருக்கின்றார் நேதாமோகன்.

நேதாவின் கவிதைகளை, எந்த கோட்பாடுகளின் வழிநின்றும் தர்க்கவியில் கருத்தாடல்களின் வழியிலும் அணுக வேண்டிய தேவையில்லை. அவை இயல்பின் வழியில் இயல்பின் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. அதீத புனைவுகளுக்குள் ஆட்பட்டுக் கொள்ளாத இயல்புநிலைதான் அவரின் கவிதைகளின் அடையாளம். அவர் தனது நிலத்தை தனது மனிதர்களை அவர்களின் வாழ்வியலைத் தன் கவிதைகளின் ஊடாக கொண்டுவருகின்றார். எல்லா வழிகளிலும் ஒடுக்கப்படுகின்ற நிலத்தினது மனிதர்களினதும் குரல்தான் நேதாவின் குரல். கவிதை என்பது வாழ்வுக்கு அப்பாலான ஒரு வஸ்துவல்ல. அது வாழ்வின் கூறுகளின் வழியில் உருக்கொள்வது. இன்று கவிதை பற்றிய உரையாடல்கள் தமிழ் இலக்கியச்சூழலில் தீவிரமாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான உரையாடல்கள் மொண்ணைத்தனமானவை. தாம் கொண்டிருக்கின்ற கருத்தியல்களின் வழிதான் கவிதையை அணுக வேண்டுமென்கின்ற ஒற்றைத்தனமான அணுகுமுறைகளாகவே அதிகமானவை இருக்கின்றன. நவீன கவிதையானது, அது வடிவநிலையிலும் சரி, பொருண்மை நிலையிலும் சரி பல்வேறு மாற்றங்களையும் போக்குகளையும் அடைந்திருக்கின்றது. பொதுமைப்பாடான கருத்துருவாக்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. ஆனால் பலரும் தாம் உருவாக்குகின்ற கருத்துநிலையை பொதுக் கருத்து நிலையாக மாற்றுவதற்கு தீவிரமாக முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்த ஒற்றைத்தனமான மனநிலை நவீன கவிதையை பாதிக்கவில்லை என்பதுதான் முக்கியமானது. அது தனக்கான வெளிகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

நேதாமோகனை, அவரின் முகநூல் கவிதைகள்தான் எனக்கு அறிமுகமாக்கின. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் தனித்துவமான கவிஞர்களுள் அவரும் ஒருவர். காட்சிகளின் வழி அவர் கட்டமைக்கும் உணர்வுநிலைகள் மனதில் இலகுவான படிமங்களாகப் பதிகின்றன. அவரின் கவிதைகளில் துலங்கும் நிலக்காட்சிகளானாலும் சரி கடலாக இருந்தாலும் சரி நாங்கள் ஏலவே பார்த்து பரிச்சயமானவையாக இருப்பதில்லை. அவரின் மொழிதலின் வழி அவற்றைப் பார்க்கின்றபோது அவை புதியவையாக இருக்கின்றன. நேதாவின் அனுபவத்தின் திரட்சியாக அவை தெரிகின்றன.

இயலாமையும் ஏமாற்றம் ஏக்கமும் வலியும் நிரம்பிய கவிதைகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் இருக்கின்றன. கற்பனைகளால் உருவாக்கி வைத்திருக்கும் புனிதப் புனைவுகளின் மீது அதிராத குரலில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானது. புறநிலைத் தோற்றத்தை தாண்டி உட்சென்று மனிதர்களின் அகத்தில் படிந்துகிடக்கும் சிறுமைகளை நேதா தனக்கேயுரியதான முறையில் கட்டவிழ்ப்புச் செய்கின்றார். அதேவேளை பொதுமைப்படுத்தப்பட்ட உலக இயல்புகளுடன் பொருந்திப்போக முடியாமைக்கு அவரால் ஆயிரம் காரணங்களைச் சொல்லவும் முடிகின்றது. ஆனால் அந்தக் காரணங்கள் எதுவுமே அவரைத் தனித்துத்துரத்திவிடுவதில்லை. அவற்றோடு இயந்து வாழவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுகின்றன. தனிமனிதன் தன்னை தனக்குள்ளாக அன்றி பொதுமைக்குள்ளும் முடக்கிக்கொள்ள வேண்டிய முரண்நிலைதான் இது. இந்த முரண்நிலைகளினால் தனக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டு நேதா துயருறுகின்றார். ”பொருத்தமற்றலின் அபத்தம்” கவிதை இந்த இருகூறு மனநிலையின் ஒரு அடையாளக் கவிதையாகக் கொள்ளத்தக்கது.

இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை நம்பிக்கையீனங்களினாலும் ஏமாற்றங்களினாலும் நிரம்பிக் காணப்படுகின்றன. அநேக கவிதைகளுக்குள் துயரம் ஒரு நதியைப்போல ஊர்ந்து கொண்டே இருக்கின்றது. காலத்தால் மட்டுமன்றி சக மனிதர்களினாலும் கைவிடப்படுகின்றபோது, வாழ்க்கையை நிச்சயமின்மையாக அல்லது அர்த்தமற்ற ஒன்றாக மனித மனம் மாற்றமுனைகின்றது. இந்த மனநிலை உளவியலின் உட்கூறுகளால் அணுகப்பட வேண்டிய ஒன்று. நேதா இந்த மனநிலையின் கூறுகளை தன் கவிதைகளில் அதிகமும் கொண்டிருக்கின்றார். நம்பிக்கைகள் சிதையும் போது அவரே சிதைந்தும் போகின்றார். ஆனால் கடந்த காலம் நம்பிக்கைக்குரியதாக இருந்ததை எண்ணி மகிழவும் செய்கின்றார். கடந்த காலத்தின் யுத்தம், அது ஏற்படுத்திய துயர் இத்தகைய நிலையை அவருக்குள் ஏற்படுத்திவிடுகின்றது. யுத்தம் நம்பிக்கைக்குரியதாக இருந்தபோது அவர் தனக்குள் கொண்டிருந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பை மீறி நம்பிக்கைச் சிதைக்வுக்குள் ஏற்படுத்தியபோதும். கடந்த காலத்தின் நம்பிக்கையுட்டல்களின் வழியில் இன்னும் அவர் இருந்துகொண்டு களிவிரக்கும் ததும்பும் சொற்களால் அவற்றை எழுதிக்கொண்டுமுள்ளார்.

ஈழத் தமிழ்க் கவிஞர்கள், போர் முடிந்த பின்னரும் போர் பற்றியே திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கின்றனர். போர்க்காலத்தில் வாழ்கின்ற நினைப்போடுதான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற விதமாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றதன. யுத்தகாலத்தில் வெறும் யுத்தம்மட்டுந்தான் இருந்ததா? மனிதர்கள் காதல் கொள்ளவில்லையா கலவிகொள்ளவில்லையா என்ற கேள்விகளை முன்வைப்பவர்கள் ஈழக்கவிதைகளின் இயங்குநிலையையும் பொருண்மையையும் விளங்காதவர்களாகவே இருப்பார்கள். சுயவிளம்பரம் தேடிக்கொள்ளுவதற்காக அதிர்ச்சியான கருத்துக்களை உதிர்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? போர் முடிந்போனாலும் தமிழர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. அடக்கு முதுறைகள் தொடர்கின்ற வரை இத்தகைய கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஏனெனில் கவிதையோ ஏனைய இலக்கியப் பிரதிகளோ வாழ்க்கைக்குப் புறநிலையிலிருந்து எழுதப்படுபவையல்ல. வாழ்க்கையுடன் இயந்தே பயணிப்பவை. கவிதையை ஒரு செயற்பாடாக அல்லது செயல்முறையாகப் பயின்று கவிதை எழுதுகின்றவர்கள் இதற்கு எதிரான கருத்துநிலையை கொண்டிருக்க முடியும். இத்தகைய மனநிலையோடு எழுதப்படும் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மை உடையனவாகவே இருக்கின்றன. ஒத்த சொல்லல் முறைகளில் எழுதப்படுகின்றவையாகவே இருக்கின்றன. இத்தகைய கவிதைகள் ஒருவகையில் தமக்கான ஒத்த கட்டமைப்பை நிறுவமுயலுகின்றன. இது உண்மையில் நவீன கவிதையின் இயங்குநிலைக்கு எதிரானது. நவீன கவிதை எந்தளவுக்கு தளமாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகின்றதோ அதே போல ஒத்தநிலையான போக்கை பேணுவதையும் அது மறுதலித்தே வந்திருக்கின்றது.

நேதாவின் கவிதை சொல்லல் முறை தமிழில் ஏலவே பயின்று வருகின்ற தடத்தில் தொடர்ந்துவருவதுதான். ஆனாலும் அவர் தான் சார்ந்த அல்லது தான் வாழும் சழூகம் சார்ந்த அடையாளங்களின் வழி தன் கவிதைகளுக்குள் மீறல்களை நிகழ்த்துகின்றார். தன் நிலத்தின் பிற உயிரிகளையும் இயைந்து வருகின்ற எல்லாவற்றையும் தன் கவிதைகளுக்குள் கொண்டுவருகின்றார். ஈழக் கவிதைகளில் இந்த தன்மை மிகவும் அரிதானது புறக்காட்சிச் சித்திரிப்புக்களைக் காட்டிலும் அககாட்சிகளுக்கு அவை பெரும்பாலும் முதன்மை கொடுத்திருக்கின்றன. புறப்பொருண்மைகளை பொதுபடையானவையாக அணுகும் தன்மைதான் அதிகமும் காணப்படுகின்றன. நேதா போன்ற சில கவிஞர்களே தங்கள் நிலங்களின் மரங்கள், பறவைகள் எனப் பலவற்றை தம் கவிதைகளுக்குள் கொண்டுவருகின்றார்கள். நேதாவின் கவிதைகளில் அவர் இவற்றைக் கொண்டு உருவாக்கும் தரிசனவெளி பல அர்த்தப்பாடுகளையும் புரிதல்களையும் ஏற்படுத்துகின்றன.

ஏமாற்றங்களும் நம்பிக்கையீனமும் எவ்வளவுக்கு நேதாவின் கவிதைகளில் நிறைந்திருக்கின்றனவோ அதேயளவுக்கு காதலும் சக மனிதர்களின் மீதான நம்பிக்கையும் நிரம்பியிருக்கின்றது. குழந்தைமையும் அவற்றின் குதூகலமும் கவிதைகளில் நிரம்பவும் காணப்படுகின்றன. குழந்தைகளின் அகவுலகை அவர் அணுகும் முறை அழகும் ஆழமும் நிரம்பிய அனுபவப்பேறுகளாக வெளிப்படுகின்றன. அவரது ”பொம்மைகள்” என்ற கவிதை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல பொம்மைகளுக்கும் அழகிய உலகம் இருக்கின்றது. அந்த உலகத்தை குழந்தைகளே பொம்மைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கின்றார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்துகின்றது.

உலகம் அறிவியல் ரீதியாக எந்தளவுக்கு முன்னேறி இருந்தாலும் அந்த அறியில் வளர்ச்சியின் பேறுகளான தொடர்பாடல் சாதனங்கள் இயல்பான மனித உறவை எந்தளவுக்கு தூரமாக்கியுள்ளது என்பதை நேதா தன் கவிதைகளில் எழுதியிருக்கின்றார். தொலைபேசி உறவுகளை நெருக்கமாக்குவது போல தூரமாக்கியும் விடுகின்றது. தனிமையை துரத்துத்துகின்ற போதும் கூட்டத்துக்குள்ளும் மனிதர்களை தனிமைக்குள் தள்ளிவிடுவதும் தொலைபேசிதான் என்பதையும் நேதாவின் கவிதைகளில் படிக்கமுடிகின்றது.
நேதாவின் கவிதைகளில் கடந்த காலம், காட்சிகள் உறைந்த படங்களாக விரிகின்றன. யுத்தத்தின் பயங்கரங்களும் கொவிட் கால நெருக்கீடுகளும் தனிமைப்படுத்தலின் வலியும் கூடவே காணாமல் போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் என யாவும் காட்சித் திரைகளாகத் தொங்குகின்றன. அவரின் அநேக கவிதைகள் முன்னிலையில் ஆரம்பிக்கின்றன. நேதா காட்டுகின்ற “நீ“ அனைத்துவிதமான உடன்பாடனவையாகவும் எதிர்மறையாகவும் விரிகின்றது. நீ என்பது அன்பின் சுனையாகவும் அதிகாரத்தின் பேருருவாகவும் அநேகம் கொள்கின்றது. அவர் தன் கவிதைகளில் நீ என்னும் இந்த முன்னிலை ஒருமைக்கு பல வடிவங்களை கொடுக்கின்றார். அதைக் காலமாகவும் அகாலமாகவும் காலத்தில் தேங்கிச் சுழிக்கின்ற எண்ணற்ற துயரங்களின் கூட்டுச்சேர்க்கையாகவும் அதை வரைந்துகொள்கின்றார். “நீ“ என்பதை பெரும்பாலும் அதிகாரத்தின் அடையாளமாக காட்சிப்படுத்தும் அவர், தன் கவிதைகளில் பொதுமைப்படுத்தலுக்கான வழியாக அதனைக்கைக்கொள்கின்றார். இது நேதா திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றாக நான் கருதவில்லை. அதிகார மையங்கள் தனித்தனி அடையாளங்களோடு ஒடுக்குமுறைகளை முன்னெடுத்தாலும் எல்லாவற்றினதும் அடிப்படைக் குணாம்சம் ஒன்றுதான். அவை மனிதகுலத்திற்கு எதிரானவை. தன்னை பீடத்தில் அமர்த்திக்கொண்டு மற்றவர்களை அற்பமாகக் கருதுபவை. சாமானியனின் குரல் இந்த அதிகாரமையங்கள் அனைத்துக்கும் எதிரான குரலாக ஒலிக்கின்றபோது பல இடங்களில் கையாலாத்தனத்தின் குரலாகவும் தீவிரமான எதிர்ப்பின் அடையாளமாகவும் ஒலிக்கின்றன. நேதாவின் குரலும் இதுதான். அவர் காலத்தின் திசைகளில் ஒரு இறகைப்போல அலைகின்றார். முடிவற்ற அலைதலது.
இது நேதாமோகனின் இரண்டாவது கவிதைத்தொகுதி. அவரது முதலாவது கவிதைத்தொகுதி ”துணிச்சல்காரன்” வெளியாகி எட்டு ஆண்டுகளின் பின்னர் இது வெளிவருகின்றது. இந்த கால இடைவெளியில் வாழ்வில் அவர் எதிர்கொண்ட அல்லது அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் எதிர்கொண்ட பலவற்றை ஒரு வரலாற்றுக்குறிப்பை போல தன் கவிதைகளில் தந்திருக்கின்றார். பெரும்பாலான கவிதைகள் காலப்பதிவுகளாகவே இருக்கின்றன. அவர் தன் காலத்தை எழுதியிருக்கின்றார். இந்தத் தொகுதி பரவலான வாசிப்புக்கு உட்பட வாழ்த்துகிறேன்.
சித்தாந்தன்
கோண்டாவில்
22.04.2023