09 ஆகஸ்ட், 2024

சித்தாந்தனின் "தணற்காலம்"

லலிதகோபன்

ரு வாசகனாக என் முன்னே விரிகிறது பெருவெளி.காற்றின் ஒலி தவிர்த்து பிறவொலிகள் அடங்கிய வெளியில் நான் நிற்கிறேன். இப்போது சொற்களை உச்சாடனம் செய்து யாகம் வளர்க்கிறேன். பெருந்தீயென எழுகிறது சொற்கள். காதல்,காமம்,குரோதம்,நேசம்,கருணையென சொற்கள் பெருந்தீயென வளர்கின்றன. யாகத்தின் இறுதியில் நான் ஆசுவாசம் கொள்கிறேன். ஆனாலும் சொற்கள் எழுப்பிய தீ கங்குகளாகி என்னுள் கிடக்கிறது. கங்குகளை மூடியிருக்கிறது தணல்.காற்றின் தூண்டலில் மீண்டும் பெருந்தீ என்னுள் எழும்பும்.

ஒரு வாசகனாக கவிஞர் சித்தாந்தன் அவர்களின் "தணற்காலம்" என்னுள் கிளறிய உணர்வுகளே இவை.இதுவரைக்கும் வந்த அவரது தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக "தணற்காலம்" அமைகிறது. இறுதி யுத்தத்தின் முன்பும் பின்புமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இது அமைவதால், தணற்காலம் என்ற தலைப்பினூடே தனது அரசியலை பேசுகின்றன இவைகள்.நாம் மறந்துபோன காலத்தினை வாசித்தல் என்ற செயலூக்கத்தை எம்முள் எழுப்புவதனாலேயே இது முக்கிய தொகுதியாகிறது.
நிர்வாணம் என்பது உடலின் ஆடை களைதலாகுகையில் அது மோகத்தையும் , மனதின் ஆடைகளை களைகையில் பரிநிர்வாணமாகவும் பரிணாமமுறுகிறது.ஆக களைதல் என்ற செயலின் விளைவினை குறித்து எழுகின்ற சொற்களே "பரிநிர்வாணம்" கவிதையாகிறது."துக்கங்களிலிருந்து தூக்கத்திற்கும்,தூக்கங்களிலிருந்து துக்கத்திற்குமாக" நடைபெறும் சுழற்சியின் மிகுதியாக சூன்யமே எஞ்சுகிறது. ஆனாலும் இந்த சூன்ய வெளி நிரந்தரமானதன்று.ஏனெனில் "புத்தனின் ஞான உணர்ச்சியும் யசோதரையின் காம அணுக்கமும் முயங்கும்" நிகழ்வு இந்த சூன்யத்தை நிரப்பி விடுகிறது.
"யசோதரையின் நிர்வாணத்தில்
புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்"

எனது வாசிப்பின் பிரகாரமாக பரிநிர்வாணம் பெறுகையில் புத்தர் தனது ஆணியல்பை தொலைத்தும்,யசோதரை தனது பெண்நிலையை கடந்தும் பாலின பேதமற்ற நிலையை இயற்றுகின்றனர்.
பரிநிர்வாணம் கவிதையின் மறு வடிவமே "தீராப்பெருங்கடாகிறது".அதாவது சரியாக மடிக்கப்பட்ட ஓர் ஒற்றை தாளின் ஒரு பகுதி "பரிநிர்வாணம்" ஆகுகையில் மறுபகுதியே "தீராப் பெருங்கடல்".வாழ்வியல் தேடலின் உச்சமாகிய ஞானமுறுதல் குறித்தான பொருண்மையே இரு கவிதைகளினதும் சாரமாக அமைகிறது.
யௌவனம் இலையுதிர்த்தி முதுமையை எய்துகையில் பெருங்கடலை கொண்டு வரும் முன்னிலையுடனான உரையாடலாக கவிதை நீள்கிறது. பௌதிக உடலினை கடத்தல் அல்லது ஆன்மிக தளத்தை லௌகிகத்தினூடே அணுகுதலை இவ்வாறு உரைக்கிறார் கவிஞர்.
"தினவடங்கிய முதுமையில் மலர்வது
காமத்தின் முட்களோ
காதலின் மலர்களோ இல்லை.
இரண்டுக்குமிடையில்
தேகத்தை கடந்து செல்லும் ஏதோவொன்று
அது
முத்தங்களாலோ
புணர்ச்சியினாலோ தீர்வதில்லை
தீராப் பெருங்கடல்"
இந்த தீராப் பெருங்கடலினுள் மூழ்குதல்தானே பரிநிர்வாணம் அல்லது ஞானமடைதல்.
தீவிர உரையாடல்களுக்கான வெளியை கருவிகள் ஆக்கிரமிப்பு செய்தபின் ,அதாவது கட்புல மற்றும் செவிப்புல வழியேயான உணர்வுகளை இயந்திரங்களிடம் அடவு வைத்தபின், மனிதனின் உரையாடல் வழக்காறுகள் முகமன் கூறுதல் அல்லது ஒரு புன்னகைக்குள் சுருங்கி போயின.இந்த அவலத்தை பேசும் கவிதையே "துண்டிக்கப்படும் உரையாடல்கள்'.
"இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலவிலிருந்து வடிகிறது ஒளியாய்"
யாவுமே பாசாங்குத்தனத்தின் விளிப்புகளாய் விடிகிறது."உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்' என்பது அலைபேசிகட்கான அசையும் படிமமாக வாசகன் நெஞ்சில் உறைகிறது.
மரபுகளும் தொன்மங்களும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. ஏனெனில் அவற்றின் சீரான தொடர்ச்சியை பேண வேண்டியது சமூகத்தின் குடிகளுக்கான கடமையாகிறது. ஆனால் தற்காலத்தில் இவ்வாறான சமூகப்பொறுப்பு மிகுந்த மனிதர்களும் அருகி விட்டனர்;கேட்பதற்கு தயாரற்ற இளைய தலைமுறையின் அவலத்தை தனது சொற்களால் செறிவூட்டுகிறார் கவிஞர்'சிறகுகளற்ற ஞாபகங்கள்" கவிதையில்.
ஞாபகங்களையும் சிறகுகளையும் கடத்தல் என்ற செயலே இணைக்கும் ஒன்றாகிறது.இது குறியீட்டு மொழியில் நகரும் கவிதை.
"இந்த வானம்
வனாந்தரத்தின் சாயலுடன்
மேலும் மேலும் விரிகின்றது"
எதிர்கொள்ளும் அவலம் மென்மேலும் வளர்ந்து செல்வதை "மேலும் மேலும்" என்ற தொடர் குறித்து நிற்கிறது.
"ஒரு பறவைக்கு
பறத்தலிலும் மேலாக எதுதான்
இருக்க முடியும்?
ஞாபகங்கள்"
இயல்பிலும் மேலான ஒன்றாக ஞாபகங்களின் தொடர்ச்சியான கடத்தல் அமைகிறது.ஏனெனில் சந்ததி ஒன்றின் நிலைத்தல் இவ்வாறான ஞாபகங்களின் தொடர் பேணுதலிலேயே தங்கியுள்ளது. இந்த அவலத்தின் முடிவாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்.
"யாராவது எடுத்து செல்லுங்கள்
என் சிறகுகளற்ற ஞாபகங்களை"
கவிஞர் சித்தாந்தன் அவர்களின் இந்த தொகுதியில் அனேகமான கவிதைகள் சமூகத்தின் அவலங்கள் குறித்தும் எதிர்கொள்ளும் துன்பியல் யதார்த்தங்களையும் பேசி நிற்கின்றன. போர் ஓய்ந்த காலத்தில் சமூகத்தின் மீதான அவரது தொடர் அவதானிப்புக்களே இந்த கவிதைகளின் பொருண்மை.இதனை தனது "மலராத கதைகள்' என்ற கவிதையிலே தனது வாக்குமூலமாக பதிவு செய்கிறார்.
"கரியாய் உறைந்தகாலத்தின் வடுக்களை
மொழிகடந்த சொற்களில்
சொல்லத் தொடங்கினர்"
"யாவுமே கதைகளான பின்
புதைகுழிகளின் மேல்
மழை பெய்தாலென்ன
சூரியன் படுத்துறங்கினால் என்ன"
"சொற்களையும் கடந்து நீள்கிறது
கதைகளின் துயரம்"
(சொற்களை வசியம் செய்யும் கலை முதிர்ந்த ஒரு கலையாடிக்காக)
குறிப்பு
கவிஞர் சித்தாந்தன் அவர்களின் இந்த தொகுதி கரங்களில் கிட்டியதும் உள்ளத்தில் மலர்ந்த உவகை சொல்லில் அடங்காது.ஏனெனில் சித்தாந்தனின் கவிதைகள் மீதான வாசிப்பு ஒற்றை பரிணாமமுடையதன்று.
00