05 ஆகஸ்ட், 2024

நவீன அசுரர்கள்

 சித்தாந்தன்



நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.”

-சிக்மன்ட் பிராய்ட்-

னித மனத்தின் ஆழ் மனப்பிரதிபலிப்புக்களாகவே கனவுகள் வருகின்றன. தாம் வாழாத வாழ்வை மனிதர்கள் கனவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காணாத காட்சிகளை கனவுகளில் கண்டுகொண்டிருக்கிறார்கள். நிறைவேறாதவற்றை கனவுகளில் நிறைவேற்றிவிடுகின்றார்கள். காணாத கடவுகள்களைக் கனவுகளில் கண்டு பரவசம் கொள்கின்றார்கள். கனவுகள் அடித்தளமற்றவையென இலக்கியங்கள் சொல்லியிருக்கின்றன. கனவுகளில் காண்பவை அதே போலவே வாழ்வில் நடப்பதாகவும் கனவுகள் எமக்கு நடக்கவிருப்பவற்றை முன்கூட்டியே எமக்குத் தெரிவித்துவிடுகின்றன எனவும். நாம் கனவில் கண்டுகொண்டவற்றுக்கு அண்மித்ததான நிகழ்வுகள் எம் வாழ்வில் நடக்கின்றன எனவும் சில கனாநூல் வல்லுநர்கள் சொல்லியிருக்கின்றனர். கனவு என்பது எங்கிருந்து வருகின்றது கண்களிலா மனத்திலா? மனம் காண்பதை கண்கள் காட்சிகளாக விரிக்கின்றனவா? தாம் காணும் கனவுகளை கதையாக விபரிப்பவர்கள் இருக்கின்றார்கள்கண்ட கனவை மறந்துவிட்டு நினைவுபடுத்த தவிப்பவர்களும் இருக்கின்றார்கள்.

0

கனவு காணும் புண்ணியம் பெற்றவர்களிலிருந்து தப்பித்து கற்பனைகளால் கனவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நான், இன்னும் கனவற்ற வெளியில்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். என் கண்கள் கனவுகளில் கடவுளைக் காணும் பாக்கியமற்றவை. அல்லது யாரோ ஒருவரால் சபிக்கப்பட்டவை. ஏன் கடவுளால் கூட நான் சபிக்கப்பட்வனாக இருக்கலாம். என் ஆழ்மனத்தில் தேங்கிக் கிடப்பவற்றை நான் கனவுகளாக எழுதுகின்றேன். இவற்றின் யதார்த்தம், மீயதார்த்தம், யதார்த்தமின்மை அல்லது பொய்மை குறித்த எவருடைய கருத்துக்களையும் நான் செவிமடுக்கப்போவதில்லை.

குவளைகளில் அமிர்தத்தை நிரப்பி வைத்திருப்பவர்கள் அதையே பருகுவதைப்போல விசத்தை நிரப்பிவைத்திருப்பவர்கள் விசத்தையே பருகுகின்றனர். அமிர்தத்திற்கும் விசத்திற்கும் இடையில் ஏதாவது ஒன்று இருக்குமாக இருந்தால் நான் அதையே பருகிக்கொள்கின்றேன். என் இருப்பு என்பது மறத்தலுக்கும் நினைத்தலுக்கும் இடையிலான புலப்படா நிலையே. கிட்டத்தட்ட இது உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையிலான நிலையை ஒத்தது.

0

காலையின் வெளிறிய ஒளியை நான் பருகிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் விழிப்புக்கொண்டவளின் முகத்தில் கண்கள் மலர்ந்து கிடந்தன. பரவசத்தில் திளைத்த அவள் தன் கனவில் கால்பதித்துச் சென்ற கடவுளைப் பற்றிச் சொல்லத்தொடங்கினாள். அவளது கனவில் கடவுள்கள் இலாவகமாகவே வந்துபோய்க்கொண்டிருந்தனர். அவள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருந்தாள். அவளது அன்றைய கனவில் ஊழில் பெருங்கூத்திடும் கடவுள் ஒரு குழந்தையாகியிருந்தார். அவரது மலர்ந்த முகத்தின் மலர்ச்சிதான் அவளின் முகத்திலும் பிரதிபலித்தது. அவளுக்கு பெரும்பாலும் கடவுளின் குரல் வாய்த்துவிடுகின்றது. அவளது மொழியே பிரார்த்தனைப் பாடல்களால் நிரம்பியதுதான். பொய்யையும் வஞ்சகத்தையும் சூதுகளையும் தன் கொடும் ஆயுதம் கொண்டு அழித்தொழிக்கும் கடவுள், அன்றைய கனவில் குழந்தையின் திருவுரு பெற்று எழுந்தருளி தன் கனவில் வந்திறங்கியதன் காரணத்தை அவள் அறியமுடியாதவளாக கொஞ்சம் குளம்பித்தான் போயிருந்தாள். அவள் பல்வேறு ஊகங்களை கூறிக்கொண்டிருந்தாள். அவள் கூறுகின்ற அர்த்தங்களின் படி ஒவ்வொன்றும் பொருந்துவனபோலவே இருந்தன.

கனவுகளில்; புல் பூச்சி புழுக்களைக்கூட காணும் பாக்கியத்தை இழந்தவனான நான் எல்லா ஊகங்களும் சரியானவை என்பதற்கு அடையாளமாக என் தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன்.

0

பருவங்கள் உலர்ந்து போகாத பாலைவன வெய்யிலில் நானும் கடவுளும் நடந்துகொண்டிருந்தோம். சூறையாய் முகத்தில் அறைந்த காற்றைக் கடவுள் தன் கைகளால் அடக்கி மாயம் புரிந்துகொண்டார். காற்றை ஒருதிரளையாக்கி என் கையில் கொடுத்தார். நான் அதை ஒரு பந்துபோல வானத்தில் எறிந்து கைகளில் ஏந்திக் கொண்டேன். கண்ணுக்கொட்டிய தூரம் வரையிலும் எவ்விதமான அசையும் உருக்களும் இல்லை. மணல்மேடு ஒன்றின் மீது யாரோ விட்டுச்சென்ற பிளாஸ்ரிக் போத்தல்; பாதி வெளித்தெரியும்  நிலையில் கிடந்தது. கடவுள், தான் நிஸ்டையில் இருக்கப்போவதாகக் கூறினார். அவரின் தேகம் நெருப்பாய்ச் சுட்டதை உணர்ந்துகொள்ள முடிந்தது. கடவுள் கண்களைமூடிக்கொண்டார். எரியும் பாலையில் நானும் எரிந்துகொண்டிருந்தேன்.

துயிலின் ஆழ்ந்த படிக்கட்டுக்களில் இறங்கிக்கொண்டிருந்த கடவுள், திடீரென கண்களை திறந்துகொண்டார். அவை தீப்பிளம்பாகக் கனன்று கொண்டிருந்தன. அச்சத்தில் என் இருதயம் உறைந்த போனது. கடவுள் அண்டம் அதிரத் தன் குரலை உயர்த்திக் கத்தினார். “அவர்கள் திரும்பவும்; வந்துவிட்டார்கள்எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களை அகலவிரித்து அவரைப் பார்த்தேன். “அது அவர்கள்தான், அது அவர்கள்தான்காற்றுக் கூட எனக்குத் துரோகமிழைக்கிறது. அவர்களின் சுவடுகளை ஒளித்து வைத்துவிட்டது. நான் அவர்கள் நடந்த சுவடுகளின் மீதுதான் நடக்கின்றேனோ..?” கடவுளின் கனத்த குரலில் திசைகள் பதினாறும் வெருண்டு ஒடுங்கின. மேலும் மேலும் கோபமுற்றவராய்க் கடவுள் தன் தேகம் தகிக்க அதிரும் குரலில் கத்தினார்அவர்கள்தான் வந்திருக்கிறார்கள். எத்தனை அவதாரங்கள் எத்தனை சங்காரங்கள் எல்லாவற்றிலும் நானே அவர்களைக் கொன்றேன். அவர்களுக்கு நான் இறவா வரம் அருளியது தவறாகிவிட்டதை உணர்ந்த தருணங்களில் நானே தந்திரங்களினால் அவர்களைக் கொல்லும் படியும் செய்தேன். எல்லாவற்றில் பிழைத்து வந்திருக்கிறார்கள்.” கடவுளின் கோபம் தணிந்ததாக இல்லை.

கடந்த விடுமுறையில் நானும் கடவுளும் இங்கு வந்திருந்தபோது. இவ்விடம் முழுதும் பூஞ்செடிகளால் அடர்ந்து நீர்ச்சுனைகள் பூத்த முற்றமாக விரிந்துகிடந்தது. வானை தொடுவதுபோல உயர்ந்திருந்த மரம் ஒன்றின் நிழலில் நானும் கடவுளும் பேசிக்கொண்டிருந்தோம். கடவுளின் குரலில் குழந்தையின் பரவசம் ஒட்டிக்கிடந்தது. அவர் தன் அருகில் வளர்ந்திருந்த புல்லை விரல்களால் வருடியவாறே தன் படைப்பின் விந்தையை உள்ளுர இரசித்துகொண்டிருந்தார். “உனக்குத் தெரியுமா? புராண காலத்தின் பின் எந்தக் கடவுளும் பூமிக்கு வருவதில்லை. இந்த முறை எனக்கு வாய்த்திருக்கும் நீண்ட விடுமுறையை இன்பமாக களிப்பதற்கே இங்கு வந்தேன். அங்கே பூமி இருண்டுவிட்டதாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன். நான் பூமிக்காகச் சூரியனைப் படைத்திருக்கிறேன் என்று. அவர்கள் என்னை எளனம் ததும்பப் பார்த்தார்கள். அடுத்தமுறை அவர்களையும் இங்கு அழைத்துவரவேண்டும்கடவுளின் இமைகளின் கீழே கண்ணீர் திரண்டிருந்தது. நான் அதை ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்துக்கொண்டேன். கடவுள் எழுந்து கொண்டார். தடாகம் ஒன்றினை நோக்கி நடந்தார். நான் அவரைத் தொடர்ந்து சென்றேன். தடாகத்தில் மலர்ந்திருந்த வெண்டாமரை மலர் ஒன்றினைப் பறித்து முகர்ந்து கொண்டார். மூச்சை மலரின் நறுமணத்தால் நிறைத்துக்கொண்டார். “தேவலோகத்திலும் இத்தகு நறுமணத்தை நான் முகர்ந்ததில்லைஎன்றார். எனக்குக் கடவுள் சற்று மிகைப்படுத்தலோடு கூறுவது போலவே இருந்தது. “கடவுளே நீங்கள் மல்லிகையின் நறுமணத்தை முகர்ந்ததில்லையாஎன்றேன். கடவுள் கண்களைச் சுருக்கி உதடுகளால் ஏளனித்தார். யாதொன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவரின் ஏளனம்எனக்கே நீ நறுமணத்தைச் சொல்லித்தருகிறாயாஎன்பது போலிந்தது. “அவருக்குத் தாமரைதான் பிடிக்கும் போலஎன எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

இந்த உலகத்தை நான் படைக்கும் போது எனக்காகத்தான் படைத்தேன். அண்ட வெளில் அலைந்து திரிந்து களைப்புறும் போதெல்லாம் இங்குதான் வந்து இளைப்பாறுவேன். சுவர்க்கம் என்னை இவ்வளவுக்கு வசீகரித்ததில்லை. இங்கு வனாந்தரங்களின் மேலும் நீர்பெருக்குகளின் மீதும் நடந்து களிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எங்கும் கிடையாது. மானுடப்பிறப்பின் மகத்துவத்தை உணர்த்துவதற்கே நான் அவர்களின் முன்பு இயற்கையை கொட்டிவைத்திருக்கின்றேன். மானுடர்களோ இயற்கையின் இரகசியங்களை அவிழ்க்கும் வழிதெரியாது வாழ்க்கை முழுவதும் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்அடித்துச்சாத்தப்பட்ட கதவினைப் போல கடவுளின் வார்த்தைகள் என் மனதில் அறைந்தது. நான் மௌனமாக இருந்தேன். கடவுள் என் மௌனத்தை குலைக்க விரும்பவில்லை போலும். அவர் எழுந்து நின்று வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தார். எங்கோ தொலைவில் அலைந்துகொண்டிருந்த பறவையொன்று அவரின் கையில் வந்தமர்ந்து கொண்டது. அதன் இறகுகள் பொன்னிறமாய் ஒளிர்;ந்தன. அதன் அலகுகள் கூரிய வாள் போல் பளபளத்தன. பறவையோடு ஏதேதோவெல்லாம் பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவ பாஸை என்று நினைத்துக்கொண்டேன். பறவை கடவுளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டபோது. சூரியன் காய்ந்து உதிர்ந்து கடலுள் விழுந்திருந்தது. கடவுளின் இதயத்தில் பெருகிய பரவசத்தை நான் கண்களால் பருகினேன். அவர் என் கரங்களைப் பற்றிக்கொண்டார். அந்தத் தொடுகையால் தன்னை என்னுள் நிரப்பினார். தன் இதழ்களை அவிழ்த்து ஒரு மலர் மலர்வது போல புன்னகைத்துவிடை பெறுகிறேன் மானுடாஎன்றார். என் கண்கள் கலங்கின. நான் என் இதயத்தால் நெகிழ்ந்து சிரித்தேன். என்னிடம் வார்த்தைகள் எதும் அப்போது இருக்கவில்லை. கடவுள் தன்னை ஒளிப்பிளம்பாக்கி என்னிடமிருந்து விடைபெற்று வான் புகுந்தார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு கடவுள் நீண்டகாலம் என்னுடன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டிருந்தார். நானும் கடவுளை கிட்டத்தட்ட மறந்துதான் போயிருந்தேன். எங்காவது தேவ கீதங்கள் கேட்கும்போது அவரை நினைத்துக்கொள்வேன்.

0

முந்நூறாவது தடவையும் அவள் தான் கண்ட கனவுகளை விபரிக்கத்தொடங்கியிருந்தாள். அக் கனவுளில் கடவுள்களின் முகங்கள் கருணையின் சுடர்களாக ஒளிர்ந்துகொண்டிருந்தன.

ஒரு பிரளயத்தின் பின்னரான பொழுதொன்றில் எனக்குள் நான் சிலவற்றை விவாதிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு புள்ளியில் கோலமிட்ட வார்த்தைகள் பலவும் சில்வண்டுகளாகி சுவர்களில் ஏறி இரைந்துகொண்டிருந்தன.

எனது வார்த்தைகளில் கடவுள்கள் இருக்கவில்லை. நகரத்தின் தெருக்களில் கைவிடப்பட்ட எண்ணற்ற மனிதர்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். நான் இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தபோது நாட்பட்ட கனவு ஒன்றை அவள் எழுதிக்கொண்டிருந்தாள். பரவசத்தில் ஊறிய அவளது கண்களில் கனவின் திரை மெல்லிய ஒளியாக அசைந்துகொண்டிருந்தது.

முரண்களின் திசைகளில் இருந்து வளரத்தொடங்கியிருந்த மரத்தில் இரண்டு ஆந்தைகள் கண்கள் பெருத்து விழித்தபடியிருந்தன.

மாபெரும் அரங்காக விரிந்துகிடந்த பூமியில் கடவுள் தன் பேருருவை விரித்து கூத்திட்டுக்கொண்டிருந்தார். அவரின் கூத்தில் வானத்தில் முகில்கள் திரண்டு மோதி இடியாகின….” அவள் கனவை விரிக்கத்தொடங்கியபோதே நான் வானத்தைப் பார்த்தேன் வெண்முகிலகள்; வானத்தில் பஞ்செனத் திரண்டிருந்தன.

நான் வானத்தை வெறிப்பதை விரும்பாதவள் தன் கனவின் முதல் இழையை அறுத்தவளாக எழுந்துகொண்டாள்.

முரண்களின் திசையின் இரண்டு ஆந்தைகளும் வெவ்வேறு திசைகளில் எழுந்து பறக்கத்தொடங்கின.

0

இன்று அதிகாலை என் வீட்டு வேலியில் அந்தப் பொன்னிறப் பறவை வந்தமர்ந்திருந்து. அதிகாலையை தன் சிறகுகளால் ஒளிர்வித்துப் அது பகலாக்கியது. எனக்கு மட்டுமே கேட்கின்ற வசீகரக் குரலில் என்னை அழைத்தது. நான் துயிலைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்து கொண்டேன். என் கண்களில் அதன் ஒளி நிரம்பித் ததும்பியது. நான் அதை நோக்கி நடந்தேன். அது தன் நீண்ட சிறகுகளை நீட்டி அந்த ஓலையை என்னிடம் தந்தது. மறுகணம், கணத்தில் தோன்றி மறையும் மின்னலாய் மறைந்து விட்டிருந்து.

நான் ஓலையைப்பிரித்து வாசித்தேன்.

வணக்கம் மானுடா,

நீண்ட நாட்களாக உன்னை சந்தித்துக்கொள்ள முடியாமைக்கு மனம் வருந்துகின்றேன. இங்கு கொஞ்சக் காலமாக வேலைகள் அதிகரித்துவிட்டன. என்னால் ஓய்வு எடுக்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கின்றது. நான் விரைவில் பூமிக்கு வர இருக்கின்றேன். சென்ற காலத்தைப் போல இம்முறையும் எனக்குத் துணையாக உன்னையே தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.

இப்படிக்கு,

கடவுள்

ஓலையைப் பத்திரமாக மடித்து அலுமாரியில் வைத்துக்கொண்டேன்.

இம்முறை கடவுள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது பற்றியே என் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. இந்தத் தடவை கடவுளைக் காணும் போது மனம் விட்டுப்பேச வேண்டும். மானிடர்களைப் பேசவைத்து கடவுள்; கேட்கப்பழகிவிட்டார்;. மானிடர்களோ இல்லாத கடவுள்களையும் உருவாக்கிவிட்டார்கள். தங்களைத் தாங்களே கடவுள் என அறிவித்துக்கொண்டும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பூசை புனருத்திரானங்கள் வேறு எரிச்சலையூட்டுகின்றன. கடவுள் அவர்களின் மீது கோபம் கொள்வதில்லையா? மனதில் நீண்ட காலமாக ஊறிக்கிடக்கும் கேள்விகள் இவை. இவற்றைக் கடவுளிடம் கேட்டேயாக வேண்டும்.

0

எல்லாக் கிளைக் கதைகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன.

செம்பட்டுத் துகில் போர்த்திய பகலின் விளிம்பில் நானும் அவளும் அமர்ந்திருக்pன்றோம். பிரார்த்தனைகளாலான ஒரு கீதத்தைப் போல காற்று இரைந்துகொண்டிருந்தது. எழுந்து பறக்கும் மரத்தின் அதிசயத்தை அவள் வியந்துகொண்டிருந்தாள். தூரத்தில் நிலத்தை வருடி நிற்கும் வானத்தின் ஓரத்தில் யாரோ மின்மினிகளை விதைத்துத்துக்கொண்டிருந்தனர்.

அவள் தன் கனவுப் புத்தகத்தை எடுத்து விரித்தாள்அது பறவைகளின் மொழியில் எழுதப்பட்டிருந்தது. என்னால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதன் முதல் வார்த்தையை அவள் வாசித்தாள். அதுவே உலகின் முதல் வார்த்தை எனச் சொல்லிக் குதூகலித்தாள்.  “ஆதியின் வார்த்தைகள் புரியாதபோது, கடவுளின் வார்த்தைகள் எவ்வாறு புரியும். மீ கற்பனைப் புனைவுகளை நீ எழுதிக்கொண்டிருக்கிறாய். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் அறுந்துதொங்கும் நூலிழையில் ஒரு சிலந்தியைப் போல தொங்கிக்கொண்டிருக்கிறாய்அவளின் வார்த்தைகள் என்னைக் கேலி செய்கின்றனவா? அல்லது என் தவறுகளைச் சொல்கின்றதா என நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன்.

வானத்துக்கும் பூமிக்கும் இடையில் துண்டாடப்பட்டுக்கிடந்த வெளியில் காற்று ஒரு பட்டத்தைப் போல கிழிபட்டுக்கொண்டிருந்தது. என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. மௌனத்தின் ஒவ்வொரு கணத்தையும் நான் நெய்துகொண்டிருந்தேன். என் மௌனத்தில் கடவுள் அருவமும் உருவமும் கலந்த உருவாக கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டிருந்தார்.

நீ வைத்திருக்கும் புத்தகம் எனக்கானதில்லைஎன்ற வார்த்தைகளை மட்டும் நான் உதிர்த்தேன். அந்த வார்த்தைகள் பகல் போலவும் இரவு போலவும் மாறிமாறி வானத்தை நோக்கி எழத்தொடங்கியிருந்தன. நிச்சயமாக அவை பறவைகளைப் போல இருக்கவில்லை.

0

நீலம் அடர்ந்திருந்த வானத்தில் நடுவில் சூரியன் தொங்கிக் கொண்டிருந்தான். முகில்களில் நெருப்பேறி அவை ஒளிர்ந்தபடியிருந்தன. வெண்ணிறத்துகில் ஒன்று வானத்திலிருந்து பறந்து வருவதைப் போல காற்றில் மிதந்து வந்து கடவுள் என்முன்னே பிரசன்னமானார். இந்த முறை கடவுளின் முகத்தில் தேஜஸ் குன்றியிருந்தது. அவரது அங்கவஸ்திரம் கூட கசங்கியிருந்தது. ஏதோ அவசரத்தில் புறப்பட்டு வந்தவர்போல இருந்தார். தன் விரல் ஒன்றினால் என்னைத் தீண்டினார். அவரது தொடுகை இருதயத்தை மலரினால் வருடுவதைப் போலிருந்தது. “மானுடனே புறப்படுவோம்என்றார். நானும் அவரின் மாய நூலால் பிணைக்கப்பட்டவன் போலாகி அவரைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றேன்.

0

கடவுளின் கோபம் பேராறாய்ப் பெருக்கொண்டேயிருந்தது. கோபத்தின் உச்ச வார்த்தைகளால் அவரது உதடுகள் வெடித்துக்கொண்டிருந்தன. மணல் பெருகிக் கிடந்த முற்றத்தில் காலாற நிழலற்று நடந்துகொண்டிருந்த அவருக்கு என்னை நிழலாக்கிக் கொடுத்தேன். என் நிழலில் அவர் அமர்ந்திருந்தார். அவரது  உள்ளங்கால்களில் கொப்புளங்கள் பூத்துக்கிடந்தன. கடவுள் அதன் வேதனையை அனுபவித்துணர்ந்தார். நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். “சர்வ வல்லமையும் படைத்த கடவுள் ஏன் இவ்வளவு வருத்தங்கொள்வேண்டும். இந்த பாலைவனத்தில் அவரால் மீண்டும் காடுகளை நட்டுவைக்க முடியும் நீர்ச்சுனைகளைப் பெருக்க முடியும்கடவுள் என்னைத் திரும்பிப் பார்த்தவாறேநான் அப்படியொரு தவறை திரும்பவும் செய்ய விரும்பவில்லை மானுடாஎன்றார். என் முகத்தில் அதிர்ச்சியும் அவமானமும் கலந்த கேவலமான ஒரு சிரிப்பு மலர்ந்தது. கடவுள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அசுரர்களால் பெருகிக்கிடந்த புராணகாலத்தில், அசுரர்களே புழுக்களாயும் பூண்டுகளாயும் அசைவனவாயும் பறப்பனவாயும் ஊர்வனவாயும் இந்த பூமி முழுவதிலும் பரவிக்கிடந்தார்கள். கடவுளின் பெயர் சொல்லி அழைப்பவர்களைக் கொன்று புசித்தார்கள். தங்களையே கடவுள்களாக்கி வணங்கச் சொன்னார்கள். வணங்கமறுத்த என் பக்தர்களை அவர்கள் கொன்ற போது. நான் என் பக்தர்களுக்கு ஆதரவளித்து சுவர்க்கத்தில் குடியேற்றினேன். விளைவு அசுரர்கள் அங்கேயும் தேடி வந்தார்கள். நான் கோபமுற்றேன். என் சாயலில் எண்ணற்ற கடவுள்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தொழிக்க உறுதி பூண்டேன்”  கடவுள் பெருகிய வார்த்தைகளால் களைப்புற்று மூச்சிரைத்தார். அவரின் தோற்றம் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. தொண்டையில் நீர் வற்றி துயருறுவதாய் எனக்குப்பட்டது. நான் என்னிடமிருந்த தண்ணீர்ப் போத்தலின் மூடியைத் திறந்து அவரிடம் நீட்டினேன். அதை அவர் வாங்கிக்கொண்டார். அந்தப் பிளாஸ்ரிக் போத்தலின் மேற்புறத்தில் அச்சிடப்பட்டிருந்த நாமத்தைக் கண்ட கடவுள் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்தார். “ஊழியில் பேராழியாய் சுழித்து உலகத்தைக் குடித்த அசுரர்கள். போத்தலில் அடைக்கப்பட்ட நீராய் வந்திருக்கின்றார்கள். மானுடா நீ விசத்தையா பருகுகின்றாய்என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “கடவுளே நான் சுத்திகரிக்கப்பட்ட நீரைத்தானே பருகுகின்றேன். நீங்கள் விசம் என்கின்றீர்களேகடவுளின் கொதிப்பு அடங்கவில்லை. “எப்போது மானுடனே நீர் அசுத்தமாயிருந்தது. அவர்கள்தான் நீரில் கழிவுகளைக் கலந்தார்கள். நன்னீர்ச் சுனைகளையும் பேராறுகளையும் மூடி கட்டிடக் காடுகளை வளர்த்தார்கள். காடுகளைக் கூறுபோட்டு மழையைத் துரத்தினார்கள். விதை நிலங்களில் நச்சுவிதைகளை ஊன்றினார்கள். செடிகள் வளர்ந்து காய்த்துக் கனியத் திரவங்களை வழங்கினார்கள். மானுடனே நீ நச்சு யுகத்தின் குழந்தை. நீ நச்சு விதைகளையே ஊன்றிக் கொண்டிருக்கிறாய். அவர்கள் கந்தகப்புகையாய் காற்றில் படர்ந்திருக்கிறார்கள். விசத்தை உணவாக்கினார்கள். விசத்தை மருந்தாக்கினார்கள். விசத்தை கிருமியாக்கினார்கள். மானுடா அசுரர்க்கு அழிவில்லை. அவர்கள் யுகந்தோறும் புதிய நாமங்களோடு புதிய வடிவங்களோடும் உருமாறி உருமாறி வந்துகொண்டேயிருக்கிறார்கள். நான் தோற்றுப் போய்விட்டேன். அவர்கள் என் தீர்க்கதரிசனங்ளையெல்லாம் உடைத்து நொருக்கிவிட்டார்கள்கடவுள் கண் கலங்கினார். அறியாமையின் குழந்தையாகிய நான் கடவுளின் முன் கைக்குழந்தையாகியிருந்தேன்.

கடவுள் மௌனமானார். கழிந்த நாழிகைகளைக் காற்று ஏறிக் கடந்துகொண்டிருந்தது. ஒரு யுகமௌனமாக அது நீண்டு கொண்டது. யுகமௌனத்துக்குப் பின்னரான வரும் பொழுதில் கடவுள் எந்த வார்த்தைகளை உதிர்க்கப்போகின்றாரோ? என்ற ஏக்கத்துடன் நான் காத்திருந்தேன். கடவுள் என் நிழலில் அறிதுயில் புரிந்தார். மூடிய இமைகளுக்குள் கண்கள் அசைந்துகொண்டிருந்தன. கையில் பற்றியிருந்த பிளாஸ்ரிக் போத்தல் நசுங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் வந்துவிட்டார்கள்..அவர்கள் வந்துவிடார்கள்என்று பேரொலி எழுப்பிக்கொண்டு கடவுள் எழுந்தார். உண்மையில் நான் திடுக்கிட்டு நிலை குலைந்துதான் போனேன். “என் எல்லாத் தந்திரங்களும் தோற்றுப்போய்விட்டன. அசுரர்கள் பேரலையாய்ப் பெருகியபோது நான் பேரூழியாய்த் தோன்றினேன். அவர்கள் அக்கினி மலையாய்த் திரண்டபோது நானே பேரக்கினியானேன். அவர்கள் காடுகளாய் சடைத்தார்கள், முகில்களாய் திரண்டார்கள், பெரும் புயலாய் எழுந்தார்கள். நானே காடாயும் முகில்களாயும் புயலாயும் மாறினேன். அவர்கள் மேலெழ மேலெழ நானும் அதற்கு மேலாக எழுந்தேன். அவர்கள் உருமாறி உருமாறி வந்துகொண்டேயிருந்தார்கள். நானும் உருமாறி உருமாறி அவர்களைக் கொன்றுகொண்டேயிருந்தேன். அவர்களை முற்றாக அழித்தேன் என்ற நம்பிக்கையோடுதான் இந்தப் பூமியை மானுடர்களுக்காக விட்டுச் சென்றேன். எனக்காகப் படைக்கப்பட்ட இந்தப் பூமியை மானுடர்களுக்காக விட்டுச் சென்றேன்.” கடவுளின் குரல் ஆறி பச்சைத்தண்ணீராகியது. அவரது முகத்தில் உணர்ச்சிகள் வடிந்திருந்தன. அவரிடம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்க வேண்டும். ஆதியில் முதல் வார்தையை கடவுள் எனச் சிருஸ்டித்த கடவுள் வார்த்தைகளற்று இருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. அவர் பொருட்டு என் கண்களில் கண்ணீர் சுரந்தது. பரிசுத்தமான அந்தத் தருணத்தில் நான் கடவுளை முதல் முறையாகத் தீண்டினேன். என்னுடைய மேனியில் மின்னற் கதிர்கள் எதுவுமே பாயவில்லை. கடவுளின் சுடரில் என் தேகம் சுடராகவில்லை. ஒரு சகமனிதனைத் தீண்டுவது போலவே எனக்கிருந்தது. துயரம் கடவுளையும் மனிதராக்கிவிடுகின்றது. அந்தக் கணத்தில் தோன்றிய இந்த தத்துவ வார்த்தையை நான் உதிர்க்கவிரும்பவில்லை. அது கடவுளை ஏளனம் செய்வது போலாகிவிடும். அவர் என் வார்த்தைகளை உணர்ந்திருக்கவும் கூடும். அவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டார்.

வானத்திலிருந்து மின்னற் கீற்றொன்று நூலிழையாகப் பூமியில் இறங்கியது. கண்களைத் திறந்துகொண்ட கடவுள், தன் கையிலிருந்த தண்ணீர்ப் போத்தலை என் கையில் திணித்தார். தன் அங்கவஸ்திரத்தில் படிந்திருந்த மணற்துணிக்கைகளை தட்டிக் கொண்டார். என்னைப் பார்த்து மெல்லிய புன்முறுவல் புரிந்தார். அந்தப் புன்னகையின் அர்த்தம் எனக்குப் பிடிபடவேயில்லை. ஒருவேளை அதன் அர்த்தம் புரிந்திருந்தால் அக்கணம் நானும் கடவுளாகியிருக்கக் கூடும். கடவுள் மின்னல் இழையைப் பற்றி வானத்துக்குத் தாவினார். கொதிக்கும் பாலைவனத்தின் மையத்தில் நான் தனித்து நின்றேன். சுழன்று வீசிய மணற்புயல் என் தேகத்தை மணலால் இறைத்தது. வானத்தின் உச்சியில் சூரியன் சில நூறு துண்டுகளாய் உடைந்து பரவிக்கிடந்தது. நாவறண்டு தாகம் எழுந்தது. தண்ணீர்ப் போத்தலைத் திறந்தேன். அதற்குள் நச்சுக் கடல் இரைந்துகொண்டிருந்தது. தாகம் ஆறப் பருகத்தொடங்கினேன். அந்த விச நீர் அமிர்தமாகச் சுவைத்தது.

0

கடவுளோடான என் பயணங்களை நான் விபரிக்கத் தொடங்கினேன். என் முதல் பயணத்தை விபரித்தபோது விழிகளை ஆச்சரியமாக்கிக் கேட்டுக்கொண்டிருந்தவள். இரண்டாவது கனவை விபரிக்கத் தொடங்கியபோது. கண்களை முட்டிய தூக்கத்தால் அயர்ச்சியடையத் தொடங்கினாள்.

ஒரு சுவாரசியமில்லாத கட்டுக்கதைபோல என் பயணங்களின் கதை இருந்திருக்க வேண்டும். நான் என் உதடுகளை ஒட்டிக்கொண்டேன்.

முரண்களின் திசைகளில் இருந்து வளரத்தொடங்கியிருந்த மரத்தில் இரண்டு ஆந்தைகள் கண்கள் பெருத்து விழித்தபடியிருந்தன.

00

நன்றி- நடு